Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 65)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
அசித் வ்யாவ்ருத்திக்கு ப்ரயோஜநம், உபாயத்திலுபகார ஸ்ம்ருதியும் உபேயத்திலுகப்பும்.
ஆனால் இவ்வசித் வ்யாவ்ருத்தி தனக்கொரு ப்ரயோஜநம் வேண்டாவோ வென்ன வருளிச்செய்கிறார் (அசித் வ்யாவ்ருத்திக்கு) என்று தொடங்கி.
– என்றாலும் அசித்தைக் காட்டிலும் மாறுபட்டுள்ள இந்தத் தன்மைக்கு (ஆத்மாவை அறியக்கூடிய தன்மை) ஏதேனும் பயன் இருக்கவேண்டும் அல்லவா என்னும் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
(உபாயத்திலுபாகார ஸ்ம்ருதியாவது) ”என்னைத் தீமனங்கெடுத்தாய்” , “மருவித்தொழும் மனமே தந்தாய்” என்கிறபடியே ஸித்தோபாயமான வெம்பெருமான் தன் திறத்தில் பண்ணின உபாகாரங்களை யநுஸந்திக்கை. (உபேயத்திலுகப்பாவது) அவன் திருவடிகளில் தான் பண்ணும் கைங்கர்யங்களில் ”உகந்து பணி செய்து” என்கிற உகப்பும், அத்தாலவனுக்கு விளைகிற ப்ரீதியைக் கண்டு தனக்கு விளைகிற ப்ரீதியும்.
– ”உபாயத்திலுபாகார ஸ்ம்ருதியாவது” என்பது: திருவாய்மொழி (2-7-8) - என்னைத் தீமனங்கெடுத்தாய், திருவாய்மொழி (2-7-7) - மருவித்தொழும் மனமே தந்தாய் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸித்தோபாயமாக உள்ள ஸர்வேச்வரன் நமக்காகச் செய்த உபகாரங்களை எண்ணிப் பார்த்தபடி இருத்தல் ஆகும். “உபேயத்திலுகப்பாவது” என்பது: அவன் திருவடிகளில் நாம் செய்கின்ற கைங்கர்யங்களில் திருவாய்மொழி (10-8-10) - உகந்து பணி செய்து – என்று கூறுவதற்கு ஏற்ப மகிழ்ச்சியும், இதனால் அவனுக்கு உண்டாகின்ற ப்ரீதியைக் கண்டு நமக்கு அவன் மீது ஏற்படும் ப்ரீதியும் கூறப்படுகிறது.