Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 64)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

எல்லா வுபாயத்துக்கும் பொதுவாகையாலும் சைந்தந்யகார்ய மாகையாலும், ப்ராப்தி தசையிலூ மநுவர்த்திக்கையாலும், ஸ்வரூபாதிரேகி யல்லாமையாலும், அசித்வ்யாவ்ருத்த வேஷத்தை ஸாதநமாக்க வொண்ணாது.

இப்படி அநுமதி ஸாபேக்ஷனாய் ரக்ஷிக்குமாகில் இவ்வநுமதிதான் ஸாதந மாகாதோ வென்ன வருளிச் செய்கிறார் (எல்லாம்) என்று தொடங்கி.

“இது போன்று சேதனனின் அனுமதியை எதிர்பார்த்தபடி நின்று மட்டுமே ஸர்வேச்வரன் ஒருவனைக் காப்பாற்றுவான் என்றால், அத்தகைய அனுமதி என்பது எம்பெருமானை அடையச் செய்யும் ஸாதனமாகிவிடாதோ” என்று கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– ”எல்லாவுபாயத்துக்கும் பொதுவாகையாவது” – போக மோக்ஷோபாயங்களிலேதேனு மொன்றிலே யதிகரிக்குமவனுக்கும், நீ யிவ்வுபாயத்தை யநுஷ்டி என்றால், அப்படியே செய்கிறேன் என்னு மநுமதி பூர்வகமாக வதிலிழிய வேண்டுகையாலே, ஸகலோபாய ஸாதாரணமாயிருக்கை. இத்தால் ஓரிடத்திலும் இவ்வநுமதிக்கு அதிகாரி விசேஷணத்வ மொழிய, பல ஸாதநத்வமில்லாமை காட்டப்பட்டது. ”சைதந்ய கார்யமாகையாவது” ரக்ஷ்யத்வம் சேதநாசேதந ஸாதாரணமா யிருக்கச்செய்தே, ஜ்ஞாந சூந்யமாகையாலே அவ்வாகாரத்தை யறிகைக்கு யோக்யமல்லாத அசேதநம் போலன்றிக்கே, ஜ்ஞாநாச்ரய பூதனாகையாலே யத்தை யறிகைக்கு யோக்யனா யிருக்கிற விச்சேதநன் பக்கலுண்டான வநுமதி, இவனுடைய ஜ்ஞாந கார்யமாய்க் கொண்டு வந்ததாயிருக்கை. இத்தால் – இவ்வநுமதி சேதநனான வாசியைப் பற்ற வந்ததாகையாலே, ஸாதந கோடியில் அந்வயியா தென்றபடி. “ப்ராப்தி தசையிலுமநுவர்த்திக்கையாவது” உபாய தசையளவி லன்றிக்கே உபேய தசையிலும், அவன் வ்யாமோஹாநு குணமாகக் கொள்ளும் விநியோக விசேஷங்களில், திருவுள்ளமானபடி கொண்டருளவேணு மென்னு மநுமதி யிவனுக்கு நடந்து செல்லுகை. இத்தால் ஸாதநமாகில் பல ஸித்தியளவிலே மீள வேணுமென்று கருத்து. ”ஸ்வரூபாதிரேகியல்லாமையாவது” – சேஷி செய்யுமதுக் குடன்பட்டிருக்கை சேஷத்வ பாரதந்த்ர்ய கார்யமாகையாலே இவ்வநுமதி ஸ்வரூபத்துக்குப் புறம்பன்றிக்கே ஸ்வரூபமா யிருக்கை, இத்தால் ஸாதநமாகில் ஸ்வரூபாதிரேகியாயிருக்க வேணுமென்று கருத்து. ”அசித் வ்யாவ்ருத்த வேஷமாவது” - ஜ்ஞாத்ருத்வத்தாலே ஜ்ஞாந சூந்யமான வசித்தில் வேறுபட்டிருக்கிற வாத்மாவினுடைய வாகாரம். இவ்விடத்தில் அவ்வாகாரமாவது ஜ்ஞாநகார்யமானவநுமதி. இத்தை ”ஸாதநமாக்கவொண்ணாது” என்றது - இப்படி இதினுடைய அஸாதநத்வ ஹேதுக்கள் அநேகமுண்டாகையால் இத்தை ஸாதநமாகக் கற்பிக்கப் போகாதென்றபடி. ”அசித் வ்யாவ்ருத்தி வேஷம்” என்று பாடமாகில், ஜ்ஞாந சூந்யமான வசித்திற் காட்டி லாத்மாவுக்குண்டான ஜ்ஞாத்ருத்வரூப வ்யாவ்ருத்தியின் வேஷமான வநுமதியை என்று சப்தார்த்தம்.

”எல்லாவுபாயத்துக்கும் பொதுவாகையாவது” என்பது - ஒருவன் போக உபாயம், மோக்ஷ உபாயம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கைக்கொள்ள முயல்கிறான் என்று வைப்போம். அவனிடம், ”நீ இந்த உபாயத்தைக் கைக்கொள்வாய்”, என்று கூறினால் அவன், “அப்படியே செய்கிறேன்”, என்று கூறுகிறான். அத்தகைய அனுமதியை முன்னிட்டுக்கொண்டு அந்த உபாயத்தில் இறங்குகிறான். இது அனைத்து உபாயங்களுக்கும் பொதுவானதே ஆகும். இதன் மூலம் இத்தகைய அனுமதி என்பது அந்த அதிகாரிக்கு விசேஷமாக உள்ள தன்மை என்பது மட்டுமே கூறப்பட்டது அல்லாமல், பலன் அடைய வைக்கும் ஸாதனமாக உரைக்கப்படவில்லை. “சைதந்ய கார்யமாகையாவது” என்பது என்ன? பாதுகாக்கப்படும் பொருள் என்னும் தன்மை அறிவுள்ள பொருள்கள் மற்றும் அறிவற்ற பொருள்கள் ஆகிய இரண்டிற்கும் பொதுவானதே ஆகும். “தாங்கள் காக்கப்படுகிறோம்” என்னும் அறிவானது, அறிவற்ற பொருள்களுக்கு ஏற்படத் தகுதியில்லாமல் உள்ளது. ஆனால் அறிவுள்ள சேதனன் ஒருவனுக்கு இத்தகைய அறிவு, ஞானத்தின் இருப்பிடமாக உள்ளதால், அவனுக்கு ஏற்படும் தகுதி உள்ளது. இதனால் இவனது அனுமதி என்பது இவனுடைய ஞானத்தின் காரணமாக வந்தது என்று கொள்ளப்படும். ஆகவே இத்தகைய அனுமதி இவனுடைய அறிவுள்ள தன்மை என்பதான வேற்றுமையின் அடிப்படையில் வந்ததால், இதனை ஸாதனம் என்று கொள்வதில்லை. “ப்ராப்தி தசையிலுமநுவர்த்திக்கையாவது” என்பது என்ன? உபாய நிலையில் மட்டுமே அல்லாமல் உபேய நிலையிலும் ஸர்வேச்வரன் தனது எத்தகைய நிலையிலும், ”உனது திருவுள்ளத்தின்படி என்னைக் கொள்வாயாக” என்னும் அனுமதியானது இவனுக்கு நடந்து செல்லுகை என்பதாகும். ஆக அனுமதியை ஸாதனம் என்று கொண்டால், பலன் கிட்டிய அளவில் அனுமதியை நிறுத்தவேண்டும் என்றாகிவிடும். ”ஸ்வரூபாதிரேகியல்லாமையாவது” என்பது என்ன? எஜமானன் என்ன செய்கிறானோ அதற்கு உடன்பட்டிருத்தல் என்பது, அந்த எஜமானனுக்கு மட்டுமே வசப்பட்டிருத்தல் என்னும் தன்மை கொண்ட அடிமைத்தனத்தின் காரணமாக உண்டாவதாகும். இத்தகைய நிலையில் அனுமதி என்பது, அடிமைத்தனத்தின் ஸ்வரூபத்திற்குப் புறம்பாக இல்லாமல், அடிமைத்தனத்தின் ஸ்வரூபமாகவே உள்ளது என்று கருத்து. ஆக அனுமதி என்பது ஸாதனமாக இருப்பின், அது அடிமைத்தனத்தின் ஸ்வரூபத்திற்குப் புறம்பாகிவிடும் என்று கொள்ளவேண்டும். “அசித் வ்யாவ்ருத்த வேஷமாவது” என்பது என்ன? ஞானம் என்பது இல்லாமல் உள்ள அசித்தைக் காட்டிலும் ஞானமயமான தன்மை காரணமாக வேறுபட்டுள்ள ஆத்மா என்று கருத்து. இத்தகைய ஆத்மாவின் அந்தத் தன்மை என்பது ஞானத்தின் செயலான அனுமதியே ஆகும். இதனை “ஸாதநமாக்கவொண்ணாது” என்று ஏன் கூறப்பட்டது என்றால் - இப்படியாகப் பலவிதமான காரணங்களால் இந்த அனுமதி என்பது ஸாதனமாக இருக்க இயலாது என்று கூறப்பட்டதால், இத்தகைய அனுமதி என்பதை ஸாதனமாக ஏற்க இயலாது. “அசித் வ்யாவ்ருத்தி வேஷம்” என்று சூர்ணையைச் சிலர் படிப்பர். இப்படிக் கொண்டால் - ஞானம் அற்ற அசித்தைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உள்ள அறியும் தன்மை என்ற வேறுபாட்டின் வெளிப்பாடான அனுமதி - என்று கொள்ளவேண்டும்.