Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 63)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ரக்ஷணத்துக்கபேக்ஷிதம் ரக்ஷயத்வாநுமதியே.

– ஆனாலும், ”ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்று ரக்ஷகனான ஸர்வேச்வரன் ரக்ஷயபூதனான விச்சேதநனுடைய வபேக்ஷையைக் பார்த்திருக்கு மென்கையாலே, அவன் பண்ணும் ரக்ஷணத்துக்கு இவனுடைய வபேக்ஷையும் வேண்டியன்றோ இருக்கிறதென்ன வருளிச்செய்கிறார் (ரக்ஷணத்துக்கு) என்று தொடங்கி.

ஆனால் லக்ஷ்மீதந்த்ரம் - ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே - பாதுகாக்கப்படுகின்றவனின் வேண்டுதலை எதிர்பார்த்தபடி - என்று கூறுவதற்கு ஏற்ப, காப்பவனாகிய ஸர்வேச்வரன், தன்னால் காக்கப்படுகின்ற சேதனனின் “என்னைக் காப்பாற்றவேண்டும்” என்ற வேண்டுதலை எதிர்பார்க்கிறான். ஆக அவன் காப்பாற்றுவதற்கு இவனுடைய வேண்டுதலும் தேவையாக உள்ளது அல்லவோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, நிருபாதிக ரக்ஷகனானவன் பண்ணும் ரக்ஷணத்துக்கு இச்சேதநன் பக்கல் வேண்டுவது, நீ எனக்கு ரக்ஷ்யமென்றால் அல்லே னென்னாதே தன்னுடைய ரக்ஷயத்வத்தை யிசையு மிவ்வளவே என்கை. ”ரக்ஷயாபேக்ஷாம்” என்கிறவிடத்தில் சொல்லுகிற வபேக்ஷை, ரக்ஷ்யத்வாநுமதி த்யோதகமித்தனை என்று கருத்து. “யாச்நா ப்ரபத்தி: ப்ரார்த்தநா மதி:” என்கிற ஸ்வீகாரத்தை அப்ரதிஷேத த்யோதக மென்றிறே இவர்தா மருளிச்செய்தது.

– எந்த ஒன்றையும் எதிர்பாராமல் காக்கின்ற ஸர்வேச்வரன், சேதனனைக் காப்பாற்றும்போது சேதனனிடம் இருக்கவேண்டியது என்னவென்றால் - ஸர்வேச்வரன் இவனிடம், ”நீ என்னால் பாதுகாக்கப்படுபவன்” என்று கூறும்போது, இவன் எம்பெருமானிடம், ”அல்லேன்” என்று மறுக்காமல், தான் பாதுகாக்கப்படும் பொருளாக இருப்பதை ஒப்புக் கொள்ளுதலே ஆகும். ரக்ஷயாபேக்ஷாம் - பாதுகாக்கப்படும் சேதனனின் விருப்பத்தை - என்கிற வரியில் கூறப்படும் "விருப்பம்” என்பது, எம்பெருமானால் தான் காக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு இருப்பதே ஆகும். லக்ஷ்மீ தந்த்ரத்தில் உள்ள - யாச்நா ப்ரபத்தி: ப்ரார்த்தநா மதி: - வேண்டுதல் வடிவான ப்ரபத்தி, வேண்டுதலுடன் கூடிய புத்தி ஆகிய இரண்டையும் ஏற்பது பற்றி இவரே (ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர்) முமுக்ஷுப்படி சூர்ணை 233-ல் அருளிச்செய்தார் அல்லவோ?