Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 62)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ஆபத்தைப் போக்கிக்கொள்ளுகிறோமென்று ப்ரமித்து அத்தை விளைத்துக் கொள்ளாதொழிகையே வேண்டுவது.

ஆனாலும் அநந்த க்லேச பாஜநமான ஸம்ஸாரஸாகரத்தில் அழுந்திக் கிடந்தலைகிற தன்னாபத்தை யுணர்ந்தால், ஆபத்ஸகனான வீச்வரனை ஸ்வ ப்ரபத்தியாலே வசீகரித்து, தத்ப்ரஸாதத்தாலே இத்தைக் கழித்துக் கொள்ளவேண்டாவோ வென்ன வருளிச்செய்கிறார் (ஆபத்தை) என்று தொடங்கி.

இந்த உலக வாழ்க்கை என்பது எல்லையற்ற துன்பங்களின் இருப்பிடமாக உள்ளது. இத்தகைய உலகில் ஸம்ஸாரம் என்ற கடலில் அழுந்திக் கிடக்கின்ற சேதனன் தனது துயரமான (ஆபத்தான) நிலையை எண்ணிப் பார்க்கிறான். உடனே இத்தகைய ஆபத்தை நீக்கவல்லவன் ஸர்வேச்வரன் மட்டுமே என்று அறிந்து, அவனைத் தனது ப்ரபத்தி மூலம் வசீகரம் செய்து, அவனது கடாக்ஷம் மூலமாகத் தனது ஆபத்தை உடனே போக்க முயலவேண்டாமோ என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஸர்வேச்வரன் திருவடிகளிலே ப்ரபத்தி பண்ணி ஸம்ஸாரமாகிற ஆபத்தைப் போக்கிக்கொள்ளுகிறோமென்று, தான் பண்ணுகிற ப்ரபத்தியாலே தன்னாபத்தைப் போக்கிக்கொள்ளுகிறானாக ப்ரமித்து, ததேக பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூப ஹாநியாகிற ஆபத்தை விளைத்துக் கொள்ளாதொழிகையே தந்நிவ்ருத்திக்கு இவன் செய்யவேண்டுவதென்றபடி. ஓராபத்தைப் பரிஹரிக்கப்புக்கு ஓராபத்தை விளைத்துக்கொள்ளாதே, இவன் ஸ்வயத்நத்தில் நிவ்ருத்தனாயிருக்கவே எம்பெருமான் தானே ரக்ஷிக்குமென்று கருத்து. ”அத்தை” என்றது - ஆபத் ஸாமாந்யத்தைப் பற்ற; அல்லது, ப்ரக்ருதாபத்து தன்னையே பராமர்சித்தபடி யன்று.

ஸர்வேச்வரனின் திருவடிகளில் நாம் ப்ரபத்தி செய்துவிட்டோம்; இதனால் ஸம்ஸார வாழ்க்கையின் ஆபத்துக்களை நீக்கிக்கொண்டோம் - என்று தான் செய்த ப்ரபத்தியால் மட்டுமே தனது ஆபத்து நீங்கியது என்று சிலர் மயங்கியபடி இருக்கக்கூடும். அவ்விதம் இருத்தல் கூடாது. உண்மையில் ஸம்ஸாரத்தின் மூலம் உண்டாகும் ஆபத்து நீங்க வழி என்னவென்றால் - ஸர்வேச்வரன் ஒருவனுக்கு மட்டுமே தான் அடிமைப் பட்டவன் என்று உள்ள நிலைமைக்குப் பங்கம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுகிற நிலையே ஆபத்து நீங்க வழியாகும். அதாவது, ஓர் ஆபத்தை நீக்கிக் கொள்ள எண்ணி மற்றோர் ஆபத்தை இவன் தனக்கு உண்டாக்கிக் கொள்ளாமல் தடுக்கும் பொருட்டு, இவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தானே முயலாதபடி, எம்பெருமான் காத்து நிற்பான் என்று இருத்தல் வேண்டும். சூர்ணையில் உள்ள ”அத்தை” என்பது - மேலே கூறப்பட்ட ஸம்ஸார ஆபத்தை மட்டுமே கூறவில்லை, பொதுவாக உணர்த்தப்பட்டது.