Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 61)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

அல்லாதபோது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம்.

இப்படியன்றிக்கே, பலஸாதநமாகவிவனுஞ் சில செய்யவேணுமென்றால் வரும் தீங்கென்னென்ன வருளிச்செய்கிறார் (அல்லாத) என்று தொடங்கி.

மேலே கூறப்பட்டவற்றைத் தவிர்த்து இவனிடம் வேறு சில உபாயங்கள் இருத்தல் வேண்டும் என்று சிலர் கூறலாம். இவ்விதம் கொண்டால் விளையக்கூடிய தீமை என்ன என்பதை அருளிச்செய்கிறார்.

– ”அல்லாதபோது” என்றது - இவ்வளவன்றிக்கே பலஹேதுவாக விவன் சில செய்யவேண்டும்போதென்றபடி. ”பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாகையாவது - இவனுடைய ரக்ஷணம் தன்பேறாம்படியான வவனுடைய நிருபாதிக நிரபேக்ஷோபாய த்வத்துக்கு அவத்யமாய்த் தலைக்கட்டுமென்கை.

– “அல்லாதபோது” என்பதன் மூலம், ”மேலே கூறப்பட்டது தவிர்த்து பலன் அடைவதற்குச் சாதனமாக ஒருவன் வேறு ஏதாவது செய்ய முற்படும்போது” என்பது கூறப்பட்டது. “பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தை” என்பதன் மூலம் - சேதனனைப் பாதுகாத்தல் என்பதைத் தனது பேறு என்று ஸர்வேச்வரன் உள்ளான்; சேதனன் தன்னைப் பற்ற எதனையும் அவன் எதிர்பாராமல் உள்ளான்; தானே வலியச்சென்று சேதனனுக்கு உபாயமாக நிற்கிறான்; இத்தகைய அனைத்தும் குற்றமாக முடிகின்ற நிலை உண்டாகும் - என்று கூறப்பட்டது.