Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 60)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

பலத்துக்கு ஆத்மஜ்ஞாநமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது.

இப்படி இப்ப்ரபத்தியுபாயமல்லவாய் விட்டால், பலஸித்திக் கிவன் பக்கலிலும் சில வேண்டாவோவென்ன வருளிச்செய்கிறார் (பலத்துக்கு) என்று தொடங்கி.

– ப்ரபத்தி என்பது உபாயம் அல்ல என்று கூறிவிட்டால், தகுந்த பலன் கிட்டுவதற்கு சேதனனிடம் வேறு ஏதாவது உபாயம் வேண்டும் அல்லவோ என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை அருளிச்செய்கிறார்.

– ”பலத்துக்கு” என்றது – பல ஸித்திக்கென்றபடி. ”ஆத்ம ஜ்ஞாநமாவது” - ஸ்வஸ்வரூபஜ்ஞாநம். அதாவது - ததேகசேஷத்வ ததேகரக்ஷ்யத்வங்களையறிகை. ”அப்ரதிஷேதமாவது” – நிருபாதிக சேஷியாய் நிருபாதிக ரக்ஷகணானவவன் பண்ணும் ரக்ஷணத்தை விலக்காமை. அதாவது – ஸ்வரக்ஷணே ஸ்வாந்வய நிவ்ருத்தி. அவதாரணத்தால் – இவையிரண்டுமொழிய பின்னையொன்றும் வேண்டாவென்றபடி. சரமபதத்தில் சொல்லுகிற பலத்துக்கு, ப்ரதமபத்தில் சொல்லுகிற வாத்ம ஜ்ஞாநமும், மத்யமபதத்தில் சொல்லுகிற அப்ரதிஷேதமுமிறே வேண்டுவது.

– ”பலத்துக்கு” என்றால் “பலன் கிட்டுவதற்கு” என்று பொருள். “ஆத்மஜ்ஞாநம்” என்றால், தனது ஸ்வரூபத்தைப் பற்றிய ஞானம். இந்த ஞானம் என்பது எம்பெருமானுக்கு மட்டுமே அடிமைப்பட்டிருத்தல் மற்றும் அவனால் மட்டுமே நாம் காக்கப்படுகிறோம் என்று அறிவதாகும். ”அப்ரதிஷேதம்” என்றால் எந்தவிதமான கைம்மாறும், காரணமும் இன்றி நம்மைக் காப்பாற்றுகின்றபோது எம்பெருமானை விலக்காமல் இருத்தல்; நாமாகவே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலும் என்பதான முயற்சியைக் கைவிடுதல். சூர்ணையில் உள்ள ஏவகாரம் (அப்ரதிஷிதமே என்பதில் உள்ள ஏவகாரம்) மூலம், இவை இரண்டும் இல்லை என்று கூறப்பட்டது. திருஅஷ்டாக்ஷரத்தில் உள்ள “நாராயணாய” என்ற இறுதிப் பதத்திற்குக் கூறப்படும் பலன் என்பது - முதலில் உள்ள ப்ரணவம் மூலம் உரைக்கப்படும் ஆத்மஞானம் கிட்டுதலும், நடுவில் உள்ள “நம” என்பதன் மூலம் உணத்தப்படும் விலக்காமை என்பதே ஆகும். இது போன்றே இங்கும் கொள்ளவேண்டும்.