Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 59)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
இது இரண்டையும் பொறாது.
(இதிரண்டையும் பொறாது) என்றது, ஸித்தோபாய வரண ரூபமாய், நிவ்ருத்தி ஸாத்ய ரூபமாய் அதிகாரி விசேஷணமாய், ஸ்வரூபாநதிரேகியா யிருக்கிறவிந்த ப்ரபத்தி, உபாயாஸஹமா யிருக்கு மென்றபடி. ஆகையால் ஸித்த ஸாத்யோபாய வ்யாவ்ருத்த வேஷையா யிருக்கிறவிந்த ப்ரபத்திக் குபாயத்வ மஸம்பாவித மென்ற தாய்த்து. அன்றிக்கே (இது தனக்கு ஸ்வரூபம்) இத்யாதிக்கு – ஆனால் ஸாங்கமாக சாஸ்த்ர விஹிதமானவிந்த ப்ரபத்திக்கு ஸ்வரூபமேது, இதுக்குச் சொல்லுகிற அங்கந்தா னேதென்ன; அவையிரண்டையுமடையவே யருளிச் செய்கிறார் (இது தனக்கு) இத்யாதி வாக்யத்தாலே. ஆனால் தன்னைப் பொறுப்ப தேதென்னவருளிச் செய்கிறார் (உபாயம்) இத்யாதி. தன்னையும் தன்னையொழிந்தவற்றையும் பொறுக்குமதேதென்ன வருளிச் செய்கிறார் (உபாயாந்தரம்) இத்யாதி. இந்த ஸித்தஸாத்யோபாயங்க ளிரண்டிலும் இப்ப்ரபத்திக் குண்டான வ்யாவ்ருத்தியை தர்சிப்பியா நின்று கொண்டு உக்தார்த்தத்தை நிகமிக்கிறார் (இதிரண்டையும்) இத்யாதி - என்றிங்ஙனே ஸங்கதியாகவுமாம். அதவா, இதினநுபாயத்வத்தை ஸாதிக்கைக்காக இதினுடைய ஸ்வரூபாங்கங்க ளிரண்டையும் தாமே யருளிச் செய்கிறார் (இது தனக்கு) இத்யாதி வாக்ய த்வயத்தாலே. இதினநுபாயத்வத்தை ஸ்புடமாக்குகைக்காக ஸித்தஸாத்யோபாயங்களின் படிகளை தர்சிப்பிப்போமென்று திருவுள்ளம் பற்றி, ப்ரதமம் ஸித்தோபாயத்தின் படியை அருளிச் செய்கிறார் (உபாயம்) இத்யாதியால். அநந்தரம், ஸாத்யோபாயத்தின் படியை யருளிச் செய்கிறார் (உபாயாந்தரம்) இத்யாதியாலே. இவையிரண்டிலும் ப்ரபத்திக்குண்டான வ்யாவ்ருத்தியை தர்சிப்பிக்கிறார் (இதிரண்டையும்) இத்யாதியால், என்றிங்ஙனே ஸங்கதியாகவுமாம். இவ்வுபய ஸங்கதிக்கும் வாக்கியங்களுக்கர்த்தம் பூர்வவத்.
“இதிரண்டையும் பொறாது” என்பது என்ன? ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றக் கூடிய ரூபமாக, மற்ற அனைத்தையும் கைவிட்ட பின்னர் பெறக்கூடியதாக, அதிகாரிகளுக்கு ஏற்றதாக, ஸ்வரூபத்தில் நிலை பெறத்தக்கதாக உள்ள ப்ரபத்தி என்பது இரண்டையும் பொறுத்துக் கொள்ள இயலாததாக இருக்கும் என்று கருத்து. எனவே ஸித்தோபாயம் மற்றும் ஸாத்யோபாயம் ஆகிய இரண்டைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டதாக் உள்ள ப்ரபத்திக்கு, உபாயமாக உள்ள தன்மை என்பது ஏற்புடையது அல்ல என்றாகிறது. – அல்லது ” இது தனக்கு ஸ்வரூபம்” என்று தொடங்கும் சூத்திரம் முதலாக உள்ள சூத்திரங்களுக்கு வேறு பொருள் உணரலாம். ஆனால், அங்கத்துடன் கூடியதாக உள்ளது என்று சாஸ்த்ரங்கள் மூலம் விதிக்கப்படும் ப்ரபத்தியின் தன்மை என்ன? அப்படி கூறப்படும் அங்கம் எது? – இதற்கான விடைகளை “இது தனக்கு” மற்றும், “அங்கம் தன்னை” ஆகிய இரண்டு சூர்ணைகள் மூலமாக அருளிச் செய்கிறார். மேலும் “தன்னையும், தன்னைத் தவிர உள்ள மற்றதையும் எது பொறுத்துக்கொள்ளும்?” என்ற கேள்விக்கு “உபாயாந்தரம்” என்ற சூர்ணையால் பதில் அருளிச் செய்கிறார். ஸித்தோபாயம், ஸாத்யோபாயம் ஆகிய இரண்டிலும் ப்ரபத்திக்கு உள்ள வேறுபாடு என்பதைக் காண்பிக்காமல் நின்றபடி தான் கூறிய பொருளை முடிக்கிறார். அல்லது ப்ரபத்தி என்பது உபாயம் ஆகாது என்பதைத் தெளிவாக உணர்த்துவதற்காக இந்த ப்ரபத்தியின் தன்மை மற்றும் அங்கம் ஆகிய இரண்டையும் தாமே தாமே இங்கு அருளிச்செய்கிறார் எனலாம். இவற்றையே “இது தனக்கு” உள்ளிட்ட சூர்ணைகளில் கூறுகிறார். இத்தகைய ப்ரபத்தி உபாயம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக ஸித்தோபாயம் மற்றும் ஸாத்யோபாயம் குறித்து முதலில் விளக்கத் திருவுள்ளம் பற்றினார். எனவே இவற்றில் முதலில் ஸித்தோபாயத்தின் தன்மையைக் காட்டுகிறார். இதனை “உபாயம்” என்ற சூர்ணையால் காண்பித்தார். அதன் பின்னர் “உபாயாந்தரம்” என்பதன் மூலம் ஸாத்யோபாயத்தின் தன்மையை உணர்த்தினார். இந்த இரண்டிலும் ப்ரபத்திக்கு உள்ள வேறுபாட்டினை “இது இரண்டையும்” என்பதன் மூலம் அருளிச் செய்கிறார்.