Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 58)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

உபாயாந்தர மிரண்டையும் பொறுக்கும்.

– (உபாயாந்தர மிரண்டையும் பொறுக்கும்) என்றது - ஸித்தோபாயேதரமான ஸாத்யோபாயம், ஸ்வபாரதந்த்ர்ய ஜ்ஞாரஹிதாராய் ஸ்வயத்நபாரா யிருப்பார்க்கு மோக்ஷ ஸாதநதயா சாஸ்த்ர விஹிதமாகையாலே ஸ்வஸ்மிந் உபாயத்வ ப்ரதிபத்தி ஸஹமூமாய் ஸ்வோத்பத்த்யாதிகளில் ப்ரவ்ருத்தி ரூபாங்க ஸாபேக்ஷமாகையாலே ஸ்வவ்யதிரிக்தங்களையும் ஸஹிக்குமதா யிருக்குமென்றபடி ”பக்த்யா லப்யஸ் த்வநந்ய்யா”, ”உபாய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக பக்தியோகைக லப்யா”, ”ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ த்யாந ஸமாதிபி: நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்னக் கடவதிறே.

“உபாயாந்தர மிரண்டையும் பொறுக்கும்” என்பது என்ன? இங்கு ஸித்தோபாயத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஸாத்யோபாயம் பற்றிக் கூறுகிறார். ஒரு சிலர் தாங்கள் யாருக்கு (எம்பெருமான்) வசப்பட்டவர்கள் என்ற ஞானம் இல்லாமல், தங்களது முயற்சிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டபடி இருக்கக்கூடும். அவர்கள் மோக்ஷத்திற்கு ஒரு ஸாதனமாக விதிக்கப்பட்ட ஸாத்யோபாயத்தை உபாயமாக எண்ணக்கூடும். இப்படியாக அவர்கள் தன்னை உபாயமாக எண்ணுவதை அந்தச் ஸாத்யோபாயம் பொறுத்துக் கொள்ளும். இத்தகைய ஸாத்யோபாயம் என்பது, தன்னைப் பற்றி மனிதர்கள் எண்ணுவதும், சிந்திப்பதும் ஆகிய செயல்கள் நிறைவேறச் செயல் வடிவமாக உள்ள கர்மம், ஞானம் போன்ற வற்றையே தனது அங்கமாக விரும்பி நிற்கும். ஆகவே தனக்கு வேறாக உள்ள மற்றவற்றையும் இத்தகைய ஸாத்யோபாயம் பொறுத்துக்கொள்ளும். கீழே உள்ள வரிகள் காண்க: கீதை – பக்த்யா லப்யஸ் த்வநந்ய்யா - மற்ற எதுவும் கலக்காத தூய பக்தியினால் அடையத்தக்கவன் ஆளவந்தாரின் ஆத்மஸித்தி – உபாய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக பக்தியோகைக லப்யா – ஒருவன் கர்மம் மற்றும் ஞானம் மூலம் அலங்கரிக்கப்பட்ட மனம் கொண்டிருக்கக்கூடும். இத்தகைய தூய்மையான மனம் கொண்ட அவன் வேறு எந்த உபாயத்தையும் எண்ணாமல், இத்தகைய பக்திக்கு மேல் வேறு ஏதும் இல்லை என்று எண்ணியபடிச் செய்யும் பக்தியால் மட்டுமே எம்பெருமான் அடையப்படுகிறான். ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ த்யாந ஸமாதிபி: நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே – ஆயிரம் பிறவிகளில் செய்யப்பட்ட தவம் என்ற கர்மம், ஞானம் மற்றும் பக்தியால் பாவங்கள் ஒருவனுக்கு விலகக்கூடும். அதன் பின்னரே அவனுக்கு க்ருஷ்ணனிடம் பக்தி உண்டாகிறது.