Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 57)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

உபாயம் தன்னைப் பொறுக்கும்.

இதினுடைய வநுபாயத்வத்தை த்ருடீகரிக்கைக்காக ஸித்த ஸாத்போபாயங்களின்படிகளைச் சொல்லி, அவையிரண்டையும் பற்ற விதுக்குண்டான வ்யாவ்ருத்தியையருளிச் செய்கிறார் (உபாயம்) என்று தொடங்கி, (பொறாது) என்னுமளவாக.

– இத்தகைய ப்ரபத்தி என்பது உபாயம் ஆகாது என்பதை விளக்கும் பொருட்டு ஸித்தோபாயத்தின் (எம்பெருமானின்) தன்மை மற்றும் ஸாத்யோபாயத்தின் தன்மை (பக்தி, மனிதர்கள் மூலம் செய்யப்படுவது) ஆகிய இரண்டையும் கூறுகிறார். மேலும் இவற்றின் இடையே உள்ள வேறுபாட்டினையும் அருளிச்செய்கிறார்

(உபாயம் தன்னைப் பொறுக்கும்) என்றது - ஸித்தோபாயமான ஸர்வேச்வரன் இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களிரண்டுக்கும் ஸ்வயமேவ நிர்வாஹகனா கையாலே, தன்னை யுபாயமென்றால் அதுக்குத் தகுதியாயிருக்கு மென்றபடி ”உபாயோபேயத்வே ததிஹ தவ தத்வம் நது குணௌ” என்று உபேயத்வத்தோ பாதி வஸ்துவுக்கு ஸ்வரூபமாயிறே உபாயத்வமுமிருப்பது. ”யேச வேதவிதோ விப்ரா யோசாத்யாத்மவிதோ ஜநா: தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதனம்”, “சரண்யம் சரணஞ்ச த்வாமாஹுர் திவ்யா மஹர்ஷய:”, ”அம்ருதம் ஸாதநம் ஸாத்யம் ஸம்பச்யந்தி மநீஷிண:” என்னக்கடவதிறே – (தன்னைப் பொறுக்கும்) என்கிற விவ்வளவே சொல்லிவிடுகையாலே – தன்னை யொழிந்தவற்றைப் பொறாமை அர்த்தாத் ஸித்தம். இந்த ஸித்தோபாயம் ளஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிறே யிருப்பது, “இவ்வுபாய விசேஷம் ஸ்வவ்யதிரிக்தமா யிருப்பதொன்றை ஸஹியாமை யாலேயிறே அநுகூல்ய ஸங்கல்பாதிகளுக் குபாயாங்கத்வமன்றிக்கே, அவகாத ஸ்வேதம் போலே ஸம்பாவித ஸ்வபாவத்வமுண்டாகிறது” என்று இவ்வர்த்தத்தை பரந்தபடியிலே இவர்தாமே யருளிச்செய்தாரிறே.

“உபாயம் தன்னைப் பொறுக்கும்” என்பதன் மூலம் ஸித்தோபாயமாக உள்ள ஸர்வேச்வரன் தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல், அவர்களுக்கு எது விருப்பம் இல்லையோ அவற்றை விலக்குதல் ஆகிய இரண்டையும் செய்கிறான். இதன் காரணமாக, “எம்பெருமான் உபாயம்” என்று கூறினால், அவ்விதம் கூறப்படுவதற்கான தகுதி முழுவதும் கொண்டவனாக இருக்கிறான். இதனை ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் – உபாயோபேயத்வே ததிஹ தவ தத்வம் நது குணௌ - உபாயம் மற்றும் உபேயமாக உள்ள தன்மை ஆகிய இரண்டும் உனக்கு ஸ்வரூபங்கள்; அவை உனக்கு வந்த ஏறிய குணங்கள் அல்ல - என்கிறார். ஆக உபேயமாக உள்ள தன்மை போன்றே உபாயமாக உள்ள தன்மையும் எம்பெருமானின் ஸ்வரூபம் ஆகும். கீழே உள்ள வரிகள் காண்க: யேச வேதவிதோ விப்ரா யோசாத்யாத்மவிதோ ஜநா: தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதனம் – எந்த அந்தணர்கள் வேதம் அறிந்தவர்களாக உள்ளனரோ, எந்த மனிதர்கள் வேதாந்தம் அறிந்தவர்களோ அப்படிப்பட்டவர்கள் க்ருஷ்ணனையே எப்போதும் உள்ள மோக்ஷ ஸாதனம் என்று கொள்கின்றனர். சரண்யம் சரணஞ்ச த்வாமாஹுர் திவ்யா மஹர்ஷய: – உன்னைக் காப்பாற்றுபவன் என்றும், உபாயம் என்றும் மஹரிஷிகள் கூறுகின்றனர். அம்ருதம் ஸாதநம் ஸாத்யம் ஸம்பச்யந்தி மநீஷிண: - அனைத்தும் அறிந்தவர்கள் எம்பெருமானையே உபாயம் மற்றும் பலன் என்று காண்கின்றனர். ஆக இங்கு “தன்னை” என்று மட்டுமே கூறி நிறுத்தி வருவதால், “தன்னைத் தவிர மற்ற ஸாதனங்களை இவன் பொறுத்துக் கொள்வதில்லை” என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்ட ஸித்தோபாயம் என்பது மற்ற ஸாதனங்களின் சேர்க்கை என்பதைப் பொறுத்துக் கொள்ளாமல் உள்ளதாகும். இதனைப் பரந்தபடியில் - இவ்வுபாய விசேஷம் ஸ்வவ்யதிரிக்தமா யிருப்பதொன்றை ஸஹியாமை யாலேயிறே அநுகூல்ய ஸங்கல்பாதிகளுக் குபாயாங்கத்வமன்றிக்கே, அவகாத ஸ்வேதம் போலே ஸம்பாவித ஸ்வபாவத்வமுண்டாகிறது - இப்படிப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமான் தன்னைத் தவிர மற்ற உபாயங்கள் எதனையும் பொறுத்துக்கொள்வதில்லை; இதனால் தான் நன்மை செய்தல் போன்ற பலவற்றையும் தனக்கு அங்கமாக வந்து ஏறிய தன்மை போன்று அல்லாமல், அவற்றைத் தனது ஸ்வரூபமாகவே கொண்டுள்ளான் - என்றது காண்க.