Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 55)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பொறாதொழிகை.

ஆனால் இது தனக்கு ஸ்வரூபமேதென்ன வருளிச்செய்கிறார் (இது தனக்கு) என்று தொடங்கி.

– இந்த ப்ரபத்தியின் தன்மை என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.

(இது தனக்கு ஸ்வரூபம்) என்றது - இப்ப்ரபத்தி தனக்கு அஸாதாரணாகாரமென்றபடி (தன்னைப் பொறாதொழிகையாவது) - உபாயவரணாத்மகமான தன்னை உபாயமென்ன ஸஹியாதபடியாயிருக்கை. அதாவது - ஆபாதப்ரதீதியி லொழிய உள்ளபடி நிரூபித்தால் ஸ்வஸ்மிந்நுபாயத்வ ப்ரதிபத்திக்கு யோக்யமாகமாட்டாதபடியிருக்கை யென்றபடி. அன்றிக்கே, (தன்னைப் பொறாதொழிகை) என்கிறவிடத்தில், உபாயத்வேந ப்ரதீதமான தன்னைப் பொறாதொழிகையென்று அநத்யாஹாரேண யோஜிக்கவுமாம்; இப்படி சொன்னாலும், ஸ்வஸ்மிந் நுபாயத்வப்ரதிபத்த் யஸஹத்வமே பொருளாமிறே.

– ”இது தனக்கு ஸ்வரூபம்” என்றால் “இந்த ப்ரபத்திக்கே உரிய சிறப்புத்தன்மை” என்று பொருள். ”தன்னைப் பொறாதொழிகையாவது” என்றால் – உபாயமாக உள்ள (தன்னை) ப்ரபத்தியை உபாயம் என்று கூறினால், அப்படிக் கூறுவதைத் தாங்க இயலாத தன்மை என்று பொருள். ஆபாதப் பிரதீதி தவிர (ஆபாத ப்ரதீதி என்றால் ஒன்றை நன்றாக உணர்ந்து அறிவதற்கு முன்பாக, அதனைப் பற்றிக் கேட்பதன் மூலம் உண்டாகும் ஞானம்) உள்ளபடி நிரூபித்தால் தன்னிடம் உபாயமாகும் தன்மை உள்ளது என்று சிந்தனையை ப்ரபத்தி ஏற்படுத்தாமல் இருப்பதாகும் (ப்ரபத்தியைப் பற்றி நன்கு உணர்ந்து அறிந்த பின்னர், அது உபாயம் அல்ல என்ற எண்ணம் உண்டாகும்; இந்த எண்ணத்தை ப்ரபத்தியே உண்டாகும்). அல்லது ”தன்னைப் பொறாதொழிகையாவது” என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். உபாயமாகத் தோற்றம் அளிக்கவல்லபோதும் தன்னை உபாயமாக எண்ணுவதைப் பொறாது எனலாம். இப்படியாக அநத்யாகாரமாகப் பொருள் உரைக்கலாம் (ஒன்றை விளக்க மற்ற எதனையும் கூறாமல் அங்குள்ளவற்றை மட்டுமே கூறி விளக்குதல்). இப்படியாக விளக்கும் போதும் தன்னை உபாயம் என்று எண்ணுவதைப் பொறாது ஒழிகை என்று கொள்ளவேண்டும்.