Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 53)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
இந்த ஸ்வபாவவிசேஷங்கள் கல்யாண குணங்களிலும் திருச்சரங்களிலும் திருநாமங்களிலும் திருக்குழலோசையிலுங் காணலாம்.
”தன்னைப் பேணுவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும்” என்று எம்பெருமான் வருகைக்குடலாக க்ருஷி பண்ணுகையும் அவன் வரக்கொள்ள அவனை யுபேக்ஷிக்கையுமாகிற பரஸ்பர விருத்த ஸ்வபாவங்களை விளைக்குப்படியையிறே சொல்லிற்று; இப்படி பக்தியானது ஸ்வாவஸ்தா விசேஷங்களாலே சேதநர்க்கு விளைக்கும் பரஸ்பர விருத்த ஸ்வபாவங்கள் தத்விஷய மாத்ரத்திலன்றிக்கே தத்ஸம்பந்தி வஸ்துக்கள் விஷயமாகவும் காணலாமென்கிறார் மேல் (இந்த என்று தொடங்கி).
கடந்த சூர்ணையில், “தன்னைப் பேணுவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும்” என்று கூறுவதன் மூலம் ஸர்வேச்வரன் வருவதற்காகச் செய்யவேண்டிய முயற்சிகள் அனைத்தையும் செய்தபடி இருத்தலும், அப்படி அவன் வந்தபோது அவன் தாமதமாக வந்தான் என்று அவனை வெறுப்பதுமான முரண்பட்ட செயல்களைப் பக்தியானது உண்டாக்கும் தன்மையை அருளிச்செய்தார். இப்படிப்பட்ட பக்தியானது தனது நிலை மாறுபாடு காரணமாக நமக்கு உண்டாகும் முரண்பட்ட நிலைகள் எம்பெருமான் விஷயத்தில் மட்டுமே அல்ல, அவன் தொடர்புடைய பொருள்கள் விஷயத்திலும் ஆக்கிவிடுவதை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
(இந்த ஸ்வபாவ விஷயங்கள்) என்று – கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லுகிறதன்று, இப்படிப்பட்ட ஸ்வபாவ விசேஷங்களென்றபடி. அவையாவன – அநுபாவ்ய விஷய மொருபடிப்பட்டிரா நிற்கச்செய்தே, அத்தை யநுபவிக்கிறவர்களுக்கு தாரகமாய்த் தோற்றுகையும், பாதகமாய்த் தோற்றுகையும். (கல்யாண குணங்கள்) இத்யாதி. ”கோவிந்தன் குணம் பாடி யாவி காத்திருப்பேனே” என்று தாரகமாகவும், ”வல்வினையேனையீர்க்கின்ற குணங்களையுடையாய்” என்று பாதகமாகவும் சொல்லுகையாலே – கல்யாண குணவிஷயமாகவும்; ”சரங்களாண்ட தண்டாமரைக் கண்ணனுக்கனறியென் மனந்தாழ்ந்து நில்லாதே” என்று தாரகமாகவும், ”சரங்களே கொடிதாயடுகின்ற” என்று பாதகமாகவும் சொல்லுகையாலே – திருச்சர விஷயமகவும்; “திருமாலைப் பாடக் கேட்டு மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே” என்று தாரகமாகவும், “கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்” என்று பாதகமாகவுஞ் சொல்லுகையாலே – திருநாம விஷயமாகவும்; “எங்களுக்கேயொருநாள் வந்தூதவுன் குழலின்னிசை போதராதே” என்று தாரகமாகவும், “அவனுடைத் தீங்குழலீருமாலோ” என்று பாதகமாகவும் சொல்லுகையாலே திருக்குழலோசை விஷயமாகவும் காணலாமென்றபடி. என்றுமொக்க போக்யங்களாயிருந்துள்ள கல்யாண குணாதிகள் தாரகமாய்த் தோற்றுவது, பாதகமாய்த் தோற்றுவதாகிறது - அது போக்தாக்களான விவர்களுடைய ப்ரேம ஸ்வபாவ விசேஷங்களாலேயிறே; அல்லது குணாதிகளின் ஸ்வரூப பேதத்தாலன்றே. ஆகையால், பக்த்யவஸ்தாபேத ஜநிதங்களான ஸ்வபாவ விசேஷங்கள் இவ்வோ வஸ்துக்கள் விஷயமாகவுங் காணலாமென்கிறது. குணாதிகள் தாரகங்களாகவும் பாதகங்களாகவும் பேசுகிறவிடத்தில் இரண்டுமொருவர் பேச்சன்றிக்கே யிருந்ததேயாகிலும், ஆழ்வார்களெல்லாரும் ஏக ப்ரக்ருதிகளாகையாலும், எல்லாருடைய பக்தியும் பகவத் ப்ரஸாத லப்தையான பரபக்தியாகையாலும், அந்த பக்தி ஸ்வபாவ விசேஷங்கள் காட்டுகிற மாத்ரமே யிவ்விடத்தி லபேக்ஷிதமாகையாலே விரோதமில்லை. “சரங்களே கொடிதாயடுகின்ற” என்கிறவிது பராஜித ராக்ஷஸர் பாசுரமன்றோ, அத்தை, “சரங்களாண்ட” என்கைக்கு ப்ரதிகோடியாகச் சொல்லலாமோ வென்னில்; ராமவிஜயம் தமக்கிஷ்டமாகையாலே, அந்த விஜயத்துக்கிலக்காய், தோற்ற ராக்ஷஸர் தசைபிறந்து, பிராட்டிமார் தசை பிறந்து போசுமாப் போலே தாமான தன்மை தோற்றாதே தோற்ற ராக்ஷஸர் பாசுரத்தாலே விஜயத்தைப் பேசியநுபவிக்கிறா ரென்றிறே இத்திருமொழிக்கு வ்யாக்யாநம் பண்ணியருளுகிற வாசார்யர்களருளிச்செய்வது. ஆகையால் தம்முடைய ப்ரேம ஸ்வபாவத்தாலே ததஸ்தாபந்நமான பின்பு திருச்சரங்கள் பாதகமாய்த்ததும் தமக்கேயாய்த் தோற்றிப் பேசுகையாலே அப்படி சொல்லக் குறையில்லை. – அதவா, (தன்னைப் பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும்) என்ற விவையிரண்டாலும் அவன் தானே வருமளவும் தரியாமல் வரவுக்குடலாக யத்நிக்கப் பண்ணுவது, வரக்கொள்ள ப்ரணயரோஷத்தாலே தள்ளித் தரித்திருக்கப்பண்ணுவதாம் படியையிறே சொல்லிற்று; இப்படி விருத்த ஸ்வபாவங்களை யொன்றுதானே செய்கிறார் (இந்த) என்று தொடங்கி. அதாவது - இப்படிப்பட்ட ஸ்வபாவ விசேஷங்கள், ”கோவிந்தன் குணம்பாடி” என்று தொடங்கி கீழ்சொன்னபடியே ஒரு தசையிலே தாரகமாகப் பேசுவது, ஒரு தசையிலே பாதகமாகப் பேவதாம்படி, இவர்களுக்கு தரிப்பும் பாதையுமாகிற விருத்த ஸ்வபாவங்களை விளைக்கிற கல்யாணகுணாதிகளிலேயுங் காணலாமென்கை. ஆக, (ப்ரபத்திக்கு) என்று தொடங்கி இவ்வளவாக – ப்ரபத்தி வைபவத்தையும்; தத்விஷய வைபவத்தையும், தத்திகாரி த்ரைவித்யத்தையும், த்ரிவித ப்ரபத்தியிலும் பக்திபாரவச்ய ஹேதுக ப்ரபத்தியினுடைய முக்க்யத்தையும், அது தனக்கு ஸ்வ ஹேதுபூத பக்த்யவஸ்தா பேதத்தால் வரும் குலைதலையும், அந்த பக்த்யவஸ்தாபேதஞ் செய்விக்கு மம்சங்களையு மருளிச்செய்தார்.
– ”இந்த ஸ்வபாவ விசேஷங்கள்” என்பதன் மூலம் கடந்த சூர்ணையில் கூறப்பட்டவையே மீண்டும் இங்கு விசேஷங்கள் – என்பதைக் கூறுகிறார். இத்தகைய விசேஷங்கள் என்னவென்றால் – அனுபவிக்கப்படுகின்ற பொருளானது ஒரே தன்மையுடன் இல்லாமல் இருத்தலும், அந்த ஒரு பொருளே நன்மை அளிப்பதாகவும் தீமை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது - என்பதாகும். “கல்யாண குணங்களிலும்” என்பதன் மூலம்: நாச்சியார் திருமொழி (8-3) – கோவிந்தன் குணம் பாடி யாவி காத்திருப்பேனே – என்று அவன் திருக்குணங்கள் தனக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான ஒன்றாக உள்ளதையும்; திருவாய்மொழி (8-1-8) – வல்வினையேனை யீர்க்கின்ற குணங்களையுடையாய் – என்று அந்தக் குணங்களே தன்னை பித்துப்பிடித்து நாசம் செய்வதாக உள்ளதையும் கூறுவதால் – கல்யாண குண விசேஷமாகவும்; “திருச்சரங்களிலும்” என்பதன் மூலம்: பெரியதிருமொழி (7-3-4) - சரங்களாண்ட தண்டாமரைக் கண்ணனுக்கனறியென் மனந்தாழ்ந்து நில்லாதே – என்று அவனது அம்புகளே தான் உயிர்வாழக் காரணமாக உள்ளதையும், பெரியதிருமொழி (10-2-9) - சரங்களே கொடிதாயடுகின்ற – என்று அந்த அம்புகளே தனக்குத் தீமை ஏற்படுத்துவதாக உள்ளதையும் கூறுவதால் – திருச்சரங்கள் விஷயமாகவும்; “திருநாமங்கள்” என்பதன் மூலம்: திருநெடுந்தாண்டகம் (14) – திருமாலைப் பாடக் கேட்டு மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே – என்று அவனது திருநாமங்களே தான் தரிப்பதற்குக் காரணமாக உள்ளதையும், திருவாய்மொழி (9-5-8) – கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர் - என்று அந்தத் திருநாமங்களே தனக்குப் பாதமாக உள்ளதையும் கூறுவதால் – திருநாமங்கள் விஷயமாகவும்; “திருக்குழல் ஓசையிலும்” என்பதன் மூலம்: பெருமாள் திருமொழி (6-9) – எங்களுக்கேயொருநாள் வந்தூதவுன் குழலின்னிசை போதராதே – என்று அவனது குழல் ஓசை மட்டுமே தாங்கள் உயிர் வாழக் காரணமாக உள்ளதையும், திருவாய்மொழி (9-8-5) - அவனுடைத் தீங்குழலீருமாலோ – என்று அந்தக் குழல் ஓசையே தன்னை அழிப்பதாகவும் கூறுவதால் – திருக்குழல் ஓசை விஷயமாகவும் காணலாம் (அதாவது நமது பக்தி காரணமாக அவன் மட்டுமே முரண்பட்ட தன்மை உடையவனாக நமக்குத் தோன்றுகிறான் என்பது மட்டும் அல்ல, அவனுடன் தொடர்புடைய பலவும் அவ்விதமே உள்ளதைக் காணலாம் என்றார்). எப்போதுமே இன்பம் அளிக்கவல்லதாக உள்ள அவனது திருக்கல்யாண குணங்கள் உள்ளிட்ட பலவும் நன்மை அளிப்பதாகவும் உயிர் வாழ இன்றியமையாதவை எனவும் தோன்றுவதும், அதே பொருள்கள் தீமை அளிப்பதாகத் தோன்றுவதும் எப்படி? அது அனுபவிப்பவர்களின் ப்ரேமை எத்தகையது என்பதன் அடிப்படையில் அமைகின்றது. இவ்விதம் அல்லாமல், முரண்பாடாக உள்ள தன்மை என்பது திருக்கல்யாணகுணங்கள் முதலானவற்றின் தன்மைகளில் உள்ள வேறுபாடுகளால் அல்ல. ஆகவே பக்தியின் நிலைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக உண்டாகும் செயல் விசேஷங்கள் இப்படிப்பட்ட பல பொருள்களின் விசேஷங்களாகப் பிரதிபலிப்பதைக் காணலாம் என்கிறார். மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில், திருக்கல்யாண குணங்கள் போன்ற பலவும் நன்மை அளிப்பதாகவும், தீமை அளிப்பதாகவும் கூறப்பட்டபோதிலும் அங்குள்ள இரண்டுவிதமான பாசுரங்களை (நன்மை அளிப்பதைக் கூறும் பாசுரம், தீமை அளிப்பதைக் கூறும் பாசுரம்) ஒருவரே அருளிச்செய்யவில்லையே என்று கேள்வி கேட்கலாம் (அதாவது ஒருவரே இரண்டையும் கூறியிருந்தால் முரண்பட்ட தன்மைகள் வெளிப்படும். ஆனால் இருவர் கூறியதால், ஒருவருக்கு நன்மை அளிக்கும் பொருள் மற்றவருக்குத் தீமை அளிக்கலாமே என்பது இயல்பான சந்தேகத்தின் அடிப்படையில் எழும் கேள்வி). இந்தச் சந்தேகம் எழ அவசியமே இல்லை – காரணம், ஆழ்வார்கள் அனைவரும் ஒரே தன்மை உள்ளவர்கள், அவர்கள் அனைவரது பக்தி என்பது எம்பெருமானின் கடாக்ஷம் காரணமாக உண்டான பரபக்தியே ஆகும் – எனவே பக்தியின் தன்மை குறித்து மட்டுமே இங்கு கூறப்படுவதால் எந்தவிதமான முரண்பாடும் இல்லை என்றாகிறது. பெரியதிருமொழி (10-2-9) – சரங்களே கொடிதாயடுகின்ற – என்று கூறப்படும் பாசுரம் இராமனிடம் தோற்றுப்போன அரக்கர்கள் கூறுவது அல்லவோ? இதனை எவ்விதம் பெரியதிருமொழி (7-3-4) – சரங்களாண்ட - என்ற பாசுரத்திற்கு முரண்பட்ட தன்மை அளிக்கிறது என உரைக்க இயலும் (அதாவது நன்மை அளிப்பதாகக் கூறுவதும், தீமை அளிப்பதாகக் கூறுவதும் பக்தியினால் கட்டுண்டவன் அல்லவோ கூறவேண்டும்?). அதாவது இராமனின் வெற்றி என்பது தனக்கு விருப்பமான ஒன்று என ஆழ்வார் உள்ளார். இதன் காரணமாக இவர் செய்தது என்னவென்றால் – நாயகி பாவத்தை எடுத்துக்கொண்டு பேசுவது போன்று இங்கு இவர் அரக்கர்களின் பாவத்தை எடுத்துக்கொண்டு, தான் பேசுவது போன்று அல்லாமல், தோற்றுப்போன அரக்கர்கள் மூலமாக வெற்றியைக் கூறி அனுபவிக்கிறார் என்று கருத்து – இப்படி அல்லவோ இந்தத் திருமொழிக்கு நமது பூர்வர்கள் வ்யாக்யானம் இட்டனர்? எனவே தனக்குப் பெருகி நின்ற ப்ரேமை காரணமாக, அந்த அரக்கர்களின் நிலையில் நின்று, அவர்களுக்குத் தீமை செய்யும் அம்புகள் தனக்கும் தீமையே செய்தன என்று மயங்கிப் பேசுவதால் இங்கு எந்த வ்ரோதமும் இல்லை. அல்லது கடந்த சூர்ணையான ”தன்னைப் பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும்” என்பதற்கு இங்கு வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். கடந்த சூர்ணையில் கூறப்பட்ட பொருள் – அவன் தானாகவே தன்னைத் தேடி வரும்வரை பொறுத்துக்கொள்ள இயலாமல், அவன் விரைந்து வரும் பொருட்டு தானே சில முயற்சிகளில் ஈடுபடுவதும்; அவன் தாமதமாக வந்த காரணத்தால் அவனை வெறுத்து ஒதுக்குவது போன்று செய்வதும் – என்பதாகும். இப்படிப்பட்ட மாறுபட்ட தன்மைகளை ஏற்படுத்தும் பொருள் ஒன்றுதான் இருக்க இயலும்; இதனை ஏற்படுத்தும் வேறு பொருள்களும் உள்ளனவோ, இந்தத் தன்மையை வேறு பொருள்களிலும் காணலாமோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். இப்படிப்பட்ட நிலைமாறுபாடுகள் “கோவிந்தன் குணம்பாடி” என்று தொடங்கி மேலே கூறியபடி ஒரு நிலையில் இவர்களுக்கு நன்மை அளிப்பதற்குக் காரணமாகவும், மற்றோரு நிலையில் இவர்களுக்குத் தீமை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ளது என்று பேசும்படிச் செய்கின்ற தன்மை; அதாவது இவர்களுக்கு இன்பமும் துன்பமும் என்பதான மாறுபட்ட நிலைகளை ஏற்படுத்தும் தன்மை – இவற்றைத் திருக்கல்யாண குணங்கள் போன்றவற்றிலும் காணலாம் என்கிறார் - எனவும் பொருள் கூறலாம். ஆகவே “ப்ரபத்திக்கு” என்றுள்ள சூர்ணை 37 தொடங்கி, இந்தச் சூர்ணை முடிய கீழே உள்ள பலவற்றையும் அருளிச்செய்தார். ப்ரபத்தியின் பெருமை ப்ரபத்தி செய்யும் வஸ்துவின் (ப்ரபத்திக்கு இலக்கான அர்ச்சை) மேன்மை ப்ரபத்தி செய்கின்ற அதிகாரிகளின் மூன்றுவிதமான பிரிவுகள் மூன்று வகையான அதிகாரிகள் செய்யும் ப்ரபத்தியில் பக்தியின் அடிப்படையில் உள்ள ப்ரபத்தியே உயர்ந்தது என்றும், அத்தகைய ப்ரபத்தியே முக்கியம் என்றும் கூறுதல் அத்தகைய ப்ரபத்தி ஏற்படுவதற்குக் காரணமாகத் தன்னிடம் உள்ள பக்தியால் தனக்கு உண்டாகும் நிலைகுலைதல் பக்தி நிலை வேறுபாடுகளால் ஏற்படும் மாற்றங்கள்.