Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 52)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
தன்னைப் பேணவும் பண்ணும், தரிக்கவும் பண்ணும்.
இப்படி ப்ரபத்தி நிஷ்டை குலையும்படி பிறந்த பக்தியும் அவஸ்தா பேதம் விளைக்குமத்தையருளிச் செய்கிறார் “தன்னை” என்று தொடங்கி.
இப்படி ப்ரபத்தியின் மீது கொண்ட உறுதியானது தவறும்படியாக ஏற்பட்ட பக்தி என்பது பலவிதமான நிலைகளை உண்டாக்கும் என்கிறார்.
– ”தன்னைப் பேணப்பண்ணுகையாவது” காறைபூணும் இத்யாதியிற்படியே அவன் வரவுக் குடலாகத் தன்னையலங்கரிக்கும்படி பண்ணுகை. அதாவது பகவல்லாபார்த்தமாக ஸ்வயத்னத்திலே மூட்டுமென்றபடி. இது, மடலெடுக்கை முதலானவற்றிலே மூட்டுமதுக்குமுபலக்ஷணம். ”தரிக்கப் பண்ணுகையாவது” – அரைக்ஷணமவனையொழிய தரிக்கமாட்டாமையாலே, அவன் வரவுக்குடலாக ஸ்வயத்னத்திலே மூளும்படி பண்ணினவதுதானே, அவன் வரக்கொள்ள விளம்ப ரோக்ஷத்தாலே ”போகு நம்பி”, ”கழக மேறேல் நம்பி” என்று அவனையுபேக்ஷித்துத் தள்ளி தரித்திருக்கும்படி பண்ணுகை. ஆக இவையிரண்டாலும் – ”என்னான் செய்கேன்” என்றும், “தரியேனினி” என்றுமிருக்குமிருப்புக்கு ப்ரதிகோடியை விளைக்குமென்றபடி. ஆகையாலே, ப்ரபத்தி நிஷ்டை குலைந்து ஸ்வப்ரவ்ருத்த்யாதிகளிலிழிகைக்கடி பக்தியினுடைய அவஸ்தா பேதமென்று கருத்து.
– ”தன்னைப் பேணப்பண்ணுகையாவது” என்றால் பெரியாழ்வார் திருமொழி (3-7-8) – காறைபூணும் - என்ற பாசுரத்திற்கு ஏற்றபடி, அவன் தன்னை நாடிவரும் பொருட்டுத் தன்னை அலங்கரித்துக் கொள்ளும்படிச் செய்வது – என்பதாகும். அதாவது அவனை அடைவதற்காகத் தனது முயற்சியில் ஈடுபடுதல் என்பதாகிறது. இதுவே மடல் எடுத்தல் போன்ற முயற்சியில் ஈடுபடும் செயல்கலையும் குறிக்கிறது. “தரிக்கப் பண்ணுகையாவது” என்றால் – அவன் இல்லாமல் அரைநொடி கூடத் தாங்க இயலவில்லை என்ற நிலை உண்டாகிறது; இதன் விளைவாகவே அவன் வரும்வரை காத்திருக்க இயலாமல், அவனை அடைவதற்குத் தானே முயல்வதற்கான செயல்களில் ஈடுபடும்படியாக பக்தி மாறுகிறது; இத்தகைய பக்தியானது அவன் சற்று காலம் தாழ்த்தி வந்தவுடன், ”இத்தனை காலம் கழித்து வந்தானே” என்று ஆதங்கத்தை உண்டாக்குகிறது. இதனால் அவன் மீது கோபம் கொள்ளும்படிச் செய்து, கீழே உள்ள பாசுரங்களில் கூறப்பட்டது போன்று அவனை வெறுத்துத் தள்ளும்படிச் செய்துவிடுகிறது: திருவாய்மொழி – போகு நம்பீ திருவாய்மொழி – கழகம் ஏறேல் நம்பீ ஆக, இந்த இரண்டாலும் “என்னான் செய்கேன்”, ”தரியேன் இனி” என்ற இரு நிலைகளையும் மாற்றி, இத்தகைய நிலையில் இருக்கவிடாமல் உள்ள நிலையைக் கொண்டு சேர்க்கும் என்றார். ஆகவே, ப்ரபத்தியில் உள்ள உறுதி குலைந்து, தனது முயற்சியில் ஈடுபடுவதற்கான காரணம் பக்தியின் நிலையில் ஏற்படும் மாறுபாடே காரணம் என்கிறார்.