Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 51)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

பக்திதன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே இதுதான் குலையக்கடவ தாயிருக்கும்.

– ஆக, ப்ரபத்த்யதிகாரி த்ரைவித்யத்துக்கு ப்ரமாணம் காட்டினாராய் நின்றார்கீழ்; இந்த த்ரிவித ப்ரத்தியிலும் பக்திபாரவச்ய ப்ரபத்தியே முக்கியமென்றிறே கீழ்ச்சொல்லிற்று. ஏவம்பூத ப்ரபத்தி நிஷ்டரானவர்கள் தந்நிஷ்டை குலைந்து பகவல்லாபார்த்தமாக ஸ்வயத்நத்திலே மூளுவது, அவன் வரக் கொள்ள அவனையு பேக்ஷிப்பதாகிறவிவற்றுக்கு நிதாநமேதென்ன, அருளிச்செய்கிறார் “பக்தி தன்னிலே” என்று தொடங்கி.

– இப்படியாக மூன்று வகையான ப்ரபத்தி அதிகாரிகளின் பிரிவைத் தகுந்த ப்ரமாணங்கள் மூலம் உணர்த்தினார். இப்படியாக உள்ள மூன்று வகைகளில் பக்தியின் மூலம் கட்டுண்டு, அதன் காரணமாகப் பரவசம் அடைந்து செய்யும் ப்ரபத்தியே மிகவும் முக்கியம் என்று சூர்ணை 48ல் உரைத்தார். இப்படிப்பட்ட ப்ரபத்தியில் நிலைநிற்பவர்கள் தங்களது உறுதி குறைந்து எம்பெருமானைப் பெறுவதில் தங்களது சொந்த முயற்சியில் ஈடுபடுவது, எம்பெருமான் வந்தால் அவனை வெறுப்பது முதலானவற்றுக்கான காரணம் என்ன என்பதை இங்கு அருளிச்செய்கிறார்.

– ”பக்திதன்னிலே அவஸ்தாபேதம் பிறக்கையாவது” கரணசைதில்யத்தாலே ஸ்வயத்ந க்ஷமரன்றிக்கே அவனேயுபாயமாக அத்யவஸித்து, அவன் வரவு பார்த்திருக்கு மவஸ்தையளவன்றிக்கே கண்ணாஞ்சுழலையிட்டு, ஏதேனுமொருபடியாலேயாகிலும் அவனையிப்போதே பெறவேண்டும் என்னுமதிமாத்ர த்வராவஸ்தை விளைகை. ”இது” என்று ப்ரபத்தியைச் சொல்லுகிறது. தாத்ருசாவஸ்தை பிறந்தால் ப்ரபத்தி குலைகையாவது ”என்னான் செய்கேன்” என்று ஸ்வப்ரவ்ருத்தியிலந்வயமற்று பகவதி ந்யஸ்தபரராயிருக்ரு மிருப்புக்குலைகை.

” பக்திதன்னிலே அவஸ்தாபேதம் பிறக்கை” என்றால் என்ன? பொதுவாக எப்படி இருக்கவேண்டும் என்றால் அவன் மீது கொண்ட பக்தி காரணமாகத் தங்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் திறன் இழந்து, அவனை அடைவதற்குத் தாங்களாகவே முயற்சி செய்வதற்கு எந்தவிதமான சக்தியும் இன்றி இருத்தல் வேண்டும்; அவனை மட்டுமே தங்கள் உபாயமாக எதிர்பார்த்து நிற்கவேண்டும். ஆனால் இப்படிப்பட்ட நிலையில் இல்லாமல், காலதாமதத்தைப் பொறுக்க இயலாமல் தாங்களாகவே ஏதேனும் முயற்சியில் ஈடுபட்டு, அவனை எப்படியும் இப்போதே அடையவேண்டும் என்னும் அளவு கடந்த வேகத்தின் காரணமாக ஒரு நிலையை அடைதல் – என்பதாகும். “இது” என்பதன் மூலம் ப்ரபத்தி கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட நிலை உண்டானால், ப்ரபத்தி குலைகிறது. ப்ரபத்தி குலைதல் என்றால் – “என்னான் செய்கேன்” என்று தனது முயற்சியில் மேலும் தொடராமல், எம்பெருமானிடம் தனது பாரம் முழுவதையும் வைத்தல் என்ற உறுதி மாறிவிடுவதாகும்.