Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 50)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
“இதம் சரணமஜ்ஞாநாம்”
அநந்தரம், இவ்வர்த்த விஷயமாக, அகிலஜகந்மாதாவாய் ஆப்ததமையான பிராட்டி லக்ஷ்மீ தந்த்ரத்திலருளிச் செய்த வசநத்தை யுபாதாநம் பண்ணுகிறார் “இதம் சரணமஜ்ஞாநாம்” என்று.
அடுத்து ப்ரபத்தி அதிகாரிகளை மூன்று விதமாகப் பிரித்தமை குறித்து, அனைத்து உயிர்களின் தாயாக உள்ளவளும், உறுதியாக நம்பவல்லவளும் ஆகிய பெரிய பிராட்டி, லக்ஷ்மீ தந்த்ரத்தில் தனது திருவாய் மலர்ந்தருளிய சொற்களை ப்ரமாணமாக அருளிச்செய்கிறார்.
இதம் சரணமஜ்ஞாநா மிதமேவ விஜாநதாம், இதம் திதீர்ஷதாம் பாரமிதமாநந்த்யமிச்சதாம். இந்த ச்லோகத்தில், “இதம்” என்று பராமர்சிக்கிறது கீழ்ச்சொன்ன சரணாகதியை. ”அபாயோபாயநிர்முக்தா மத்யமாம் ஸ்திதிமாஸ்திதா, சரணாகதி ரக்ர்யைஷா ஸம்ஸாரார்ணவ தாரிணீ” என்றிறே கீழ்ச்சொல்லி நின்றது ”இயம்” என்று ஸ்த்ரீலிங்க நிர்தேசமன்றிக்கே, “இதம்” என்று நபும்ஸக லிங்க வ்யத்யயம் சரண சப்த விவக்ஷையாலே. இதில் அஜ்ஞஸர்வஜ்ஞர்களை ஸ்புடமாகச் சொல்லுகையாலே, மேல் பக்திபரவசரைச் சொல்லுகிறதென்று கொள்ளவேணும். “இதம் திதீர்ஷதாம் பாரம்” என்றது - சடக்கென அநிஷ்ட நிவ்ருத்தி பிறக்க வேணுமென்னும் த்வரையை யுடையார்க்கென்றபடி. ”ஆநந்த்ய மிச்சதாம்” என்றது ஸ்வரூப ப்ராப்த பரிபூர்ண பகவதநுபவத்தைப் பெற்றாலல்லது தரிக்கமாட்டாதார்க்கென்றபடி. இவையிரண்டும் பக்தியினுடைய பூமாவாலே வருமவையிறே. பக்திபாரவச்யம் உபாயாந்தராநுஷ்டாநத்தில் அசக்திக்குமுறுப்பாய், அநிஷ்ட நிவ்ருத்தியிலு மிஷ்டப்ராப்தியிலுமுண்டான விளம்பாக்ஷமதைக்கு முடலாயிறே யிருப்பது; அதில், விளம்பாக்ஷமதைக்குடலான ஆகாரத்தை இந்த ச்லோகத்தில் சொல்லுகிறது. ஆனால், கீழ் அசக்திக்குடலாகவன்றோ சொல்லிப்போந்தது, அதுக்கிது ப்ரமாணமாமோவென்னில்; அதிகாரி த்ரைவித்யாம் தர்சிப்பிக்கிற இவ்வளவே இவ்விடத்திலபேக்ஷிதமாகையாலே இது ப்ரமாணமாகச் சொல்லத் தட்டில்லை. ”அவித்யாத:” என்கிற ச்லோகத்தில், ஜ்ஞாநாதிக்யத்துக்குடலாகச் சொன்னதும் கீழ்ச் சொல்லிவந்ததும் பிந்நமாயிருக்கச் செய்தே, அதிகாரி த்ரைவித்யத்துக்கு ப்ரமாணமாகவத்தைச் சொன்னாப்போலே.
கீழே உள்ள லக்ஷ்மீ தந்த்ர வரிகள் காண்க. (17-101) இதம் சரணமஜ்ஞாநா மிதமேவ விஜாநதாம் - இந்த ப்ரபத்தி என்பதே அறிவற்றவர்களுக்கும், நன்கு அறிந்தவர்களுக்கும் உபாயம் (17-102) இதம் திதீர்ஷதாம் பாரமிதமாநந்த்யமிச்சதாம் – ஸம்ஸாரம் என்ற பிறவிக்கடலை கடக்க எண்ணும் அனைவருக்கும் இதுவே உபாயம் இங்குள்ள ”இதம்” என்ற பதம் கடந்த ச்லோகத்தில் (17-100) கூறப்பட்ட சரணாகதியைக் குறிக்கிறது. அந்த வரிகள் - (17-100) - அபாயோபாயநிர்முக்தா மத்யமாம் ஸ்திதிமாஸ்திதா, சரணாகதி ரக்ர்யைஷா ஸம்ஸாரார்ணவ தாரிணீ - பாவங்கள் மற்றும் மற்ற உபாயங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டு, நடுநிலையானதும் உறுதியானதும் ஆகிய முதன்மையான இந்தச் சரணாகதி என்பது ஸம்ஸாரம் என்ற கடலில் உழன்று துன்பம் கொண்டவர்களை அதிலிருந்து கரை சேர்க்கிறது. “இதம்” என்ற பதம் சரணம் என்ற சப்தத்தைக் குறிப்பதாக உள்ளது. இங்கு ச்லோகம் 17-101ல் அறியாமல் உள்ளவர்கள், அனைத்தும் அறிந்தவர்கள் ஆகிய இருவரும் கூறப்படுவதால் ச்லோகம் 17-102ல் பக்திப்பரவசம் அடைந்தவர்கள் கூறப்படுவதாகவே கொள்ள வேண்டும். ”இதம் திதீர்ஷிதாம் பாரம்” என்பதன் மூலம் தங்களது உபாய விரோதிகள் உடனே நீங்கவேண்டும் என்ற வேகம் கொண்டவர்களுக்கு இந்த வரி உள்ளது என்பது உணர்த்தப்பட்டது. ச்லோகம் 17-102ல் ”ஆநந்த்யம் இச்சதாம்” என்பதன் மூலம் – தங்களது ஆத்மாவிற்கு ஏற்றதான பகவத் அனுபவத்தைப் பரிபூர்ணமாகப் பெற்றால் மட்டுமே தரிப்பர், இல்லையேல் தரிக்கமாட்டனர் என்பதான நிலையில் உள்ளவர்களுக்கு இந்த வரியானது கூறப்பட்டது என்று உணர்த்தப்பட்டது. இந்த இரண்டுமே (தங்கள் உபாய விரோதி உடனே நீங்கவேண்டும், பகவத் அனுபவம் அடைந்தால் மட்டுமே உயிர் தரிப்பது) பக்தியின் மிகுதி காரணமாக மட்டுமே அல்லவோ உண்டாகும்? பக்தியினால் கட்டுண்டு நிற்கும் நிலை என்பது கீழே உள்ள இரண்டு நிலைகளுக்கும் அடிப்படையாக உள்ளது: மற்ற உபாயங்களைக் கைக்கொள்வதில் சக்தி இல்லாமை வேண்டுவதை அடைதல், அவசியம் அற்றவை கழிதல் ஆகிய இரண்டில் ஏற்படும் காலதாமதத்தைப் பொறுக்க இயலாமல் தவித்தல் இந்த இரண்டில், காலதாமதம் ஏற்படுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் உள்ள நிலையைப் பக்தி ஏற்படுத்துகிறது என்பதே இங்கு கூறப்பட்டது. ஆனால் சூத்திரம் 46ல் பக்தியின் மூலம் பரவசம் அடைந்து நிற்கும் நிலை என்பதே மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள திறனற்ற நிலைக்குக் காரணம் என்று அல்லவோ கூறப்பட்டது? அதற்கு இந்த ச்லோகம் ப்ரமாணமாகுமோ? இந்தக் கட்டத்தில் ப்ரபத்தியின் அதிகாரிகள் மூன்று விதமாக உள்ளனர் என்பதற்கு அடிப்படையாக மூன்று பிரிவுகளை உணர்த்துவது மட்டுமே போதுமானது என்பதால், இந்த ச்லோகம் அதற்கும் ப்ரமாணம் என்று கூறுவதில் எந்தவிதமான தோஷமும் இல்லை. சூர்ணை 49ல் எடுக்கப்பட்ட அவித்யாத என்ற ப்ரமாணம் மூலம் ஞானாதிக்யத்திற்குக் காரணம் இன்னது என்று கூறப்பட்டதும், சூர்ணை 42ல் கூறப்பட்டதும் வெவ்வேறாக உள்ளபோதிலும், மூன்று வகையான அதிகாரிகளுக்கு அவித்யாக என்று ச்லோகமே ப்ரமாணமாகக் காட்டப்பட்டது. இது போன்றே இங்கும் கொள்ளக் குறையில்லை.