Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 49)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
“அவித்யாத:” என்கிற ச்லோகத்திலே இம்மூன்றும் சொல்லிற்று.
இவ்வதிகாரித்ரயத்துக்கு ப்ரமாணமுண்டோவென்ன? ப்ரதமம் பட்டரருளிச்செய்ததொரு ச்லோகத்தை யுதாஹிரிக்கிறார் ”அவித்யாத:” என்று தொடங்கி.
– இப்படியாக மூன்றுவிதமான காரணங்களால் மூன்றுவிதமான ப்ரபத்தி உண்டு என்றும், அதற்கு ஏற்ப மூன்றிவிதமான அதிகாரிகள் உண்டு என்றும் கூறுவதற்கான ப்ரமாணம் ஏதேனும் உண்டா என்ற கேள்வி எழலாம். இதற்கு முதலில் ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்த ஒரு ச்லோகத்தைக் கூறுகிறார்.
– ”அவித்யாதோ தேவே பரிப்ருடதயாவா விதிதயா ஸ்வபக்தேர் பூம்நாவா ஜகதி கதி மந்யா மவிதுஷாம், கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜிநந்தாஹ்வய மநோ: ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸகலு பகவாந் ஸௌநகமுநி:” - இச்லோகார்த்தம், ஜிதந்தா வ்யாக்யாநோபோத்காதத்திலே, ”ப்ரபத்திக்கதிகாரிகள் அஜ்ஞரும் ஸர்வஜ்ஞரும் பக்திபரவசருமென்று த்ரிவிதமாக பட்டரருளிச்செய்தாரிறே?” என்று தொடங்கி, ”அஜ்ஞனாகிறான் - பகவல்லாபத்துக்குத் தன்பக்கலில் ஜ்ஞாந சக்திகளில்லாதவன்; ஸர்வஜ்ஞனாகிறான் தேசகாலவஸ்துக்களால் பரிச்சேதிக்கவொண்ணாத வைபவத்தையு டையவனீச்வரனென்றிருக்கையாலே அநந்யஸாத்யமென்றிருக்குமவன்; பக்திபரவ சனாகிறான் ஜ்ஞாந சக்திகளுண்டாயிருக்கசெய்தே அடைவுபட அநுஷ்டிக்க மாட்டாதவன்; இவர்கள் மூவரும், பகவத்விஷயமொழிய வேறு உபாயமுண்டென் றறியாதவர்கள்; இவர்களுக்கு ப்ராபகனுமாய் ப்ராப்யனுமாயிருக்கும் ஸர்வேச்வரன்” என்று, ஜிதந்தையென்று பேரையுடைத்தான மந்த்ர ரஹஸ்யத்தை, ஸர்வஜ்ஞனான ஸ்ரீசௌநகபகவான் வ்யாக்க்யாநம் பண்ணப் பெறுவதே! என்கிறார்” என்று ஆச்சான்பிள்ளையருளிச் செய்தார். ”ஜ்ஞாநாதிக்யத்தாலே ப்ரபந்நர்” என்றவிடத்தில், ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞாநம் ப்ரபதந ஹேதுவாகச் சொல்லிற்று; இந்த ச்லோகத்தில், பகவதநந்ய ஸாத்யத்வ ஜ்ஞாநம் ப்ரபதந ஹேதுவாகச் சொல்லிற்று; ஆகையால், இரண்டும் ஜ்ஞாநாதிகர்க்கு அநந்யகதித்வ பூர்வகமான ப்ரபதநத்துக்கு ஹேதுவாமென்று கொள்ளவேண்டும். கீழுமிதுதானே அர்த்தமானாலோவென்னில், ஒண்ணாது; ”இம்மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றிவரும்” என்றத்தோடு சேராமையாலே.
ஸ்வாமி பராசரபட்டர் அருளிச்செய்த ச்லோகம் - அவித்யாதோ தேவே பரிப்ருடதயாவா விதிதயா ஸ்வபக்தேர் பூம்நாவா ஜகதி கதி மந்யா மவிதுஷாம், கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜிநந்தாஹ்வய மநோ: ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸகலு பகவாந் ஸௌநகமுநி: - என்பதாகும். இந்தச் ச்லோகத்தை ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை தனது ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானத்தின் அவதாரிகையில் – ப்ரபத்திக்கதிகாரிகள் அஜ்ஞரும் ஸர்வஜ்ஞரும் பக்திபரவசருமென்று த்ரிவிதமாக பட்டரருளிச்செய்தாரிறே? – ப்ரபத்திக்குத் தகுதி உடையவர்கள் - அறியாமை உள்ளவர்கள், அனைத்தும் அறிந்தவர்கள், பக்தி வசப்பட்டவர்கள் என்று அருளிச்செய்தார். இதற்கான பொருள் - பகவத் விஷயத்தில் அறியாமை, நன்றாக அறிந்த தன்மை, பக்திப் பரவசம் ஆகியவற்றைத் தவிர இந்த உலகில் வேறு உபாயம் அறியாமல் உள்ளவர்களுக்கு உபாயமும், உபேயமும் ஸ்ரீஹரியே ஆவான் என்ற ஆழ்பொருளை உடையதான ஜிதந்தே என்னும் பெயர் கொண்ட இந்த மந்த்ரத்தின் ரஹஸ்யத்தை சௌனகமுனி அருளிச்செய்தார் - என்பதாகும். இதற்கு வ்யாக்யானம் இட்ட ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை, “அறியாமல் உள்ளவன் யார் என்றால் பகவானை அடைவதற்குத் தன்னிடம் வேறு எந்தவிதமான ஞானமும் இல்லாதவன்; அனைத்தும் அறிந்தவன் யார் என்றால் தேசம், காலம் போன்ற எவற்றாலும் அறிய இயலாதபடி உள்ள வைபவம் கொண்டவன் ஸர்வேச்வரன் என்பதால், அவன் வேறு எந்த உபாயத்தாலும் அடைய இயலாதவன் என்று அறிந்தவன்; பக்திபரவசன் யார் என்றால் ஞானம் போன்ற பலவும் உள்ளபோதிலும் அவனது திருமேனி அழகு முதலானவற்றில் தனது மனம் போன்ற அனைத்தும் ஈடுப்பட்டதால் எதனையும் செய்ய இயலாமல் தவிக்கும் ஒருவன் ஆவான். இப்படியாக உள்ள மூவருமே பகவத் விஷயம் தவிர வேறு உபாயம் உள்ளது என்று அறியாதவர்கள் ஆவர். இவர்களுக்கு உபாயமும் பேறாகவும் உள்ளவன் ஸர்வேச்வரன் ஆவான். இப்படியாக உள்ள ஜிதந்தை என்னும் பெயர் கொண்ட இந்த ரஹஸ்யத்தை அனைத்தும் அறிந்த ஸ்வாமி சௌனகபகவான் அருளிச்செய்தார்”, என்றார். சூத்திரம் 43-ல் ”ஜ்ஞாநாதிக்யத்தாலே ப்ரபந்நர்” என்பதன் மூலம் ஆத்மாவின் தன்மையை உள்ளது உள்ளபடி அறிந்த ஞானம் என்பதே ப்ரபத்திக்குக் காரணம் என்று உரைக்கப்பட்டது; இந்த ச்லோகம் மூலம், எம்பெருமான் வேறு உபாயங்களால் அடைய இயலாதவன் என்ற ஞானமே ப்ரபத்திக்குக் காரணம் என்று உரைக்கப்பட்டது. ஆகவே இந்த இரண்டையும் (ஆத்மாவின் தன்மை பற்றிய ஞானம், எம்பெருமான் வேறு எதனாலும் அடைய இயலாதவன் என்ற ஞானம்) ஞானம் உள்ளவர்களுக்கு, வேறு கதியில்லாத தன்மை என்பதற்கு முன்பாக உள்ள காரணங்கள் என்று கொள்ளவேண்டும். சூத்திரம் 43ல் ஞானம் உள்ளவர்கள் என்பதற்கு, ”எம்பெருமான் வேறு எந்த சாதனம் மூலமும் அடைய இயலாதவன் என்ற ஞானம்”, என்று ஏன் கொள்ளக்கூடாது என்ற கேள்வி எழலாம். அப்படிக் கொள்ள இயலாது. ஏன்? இவ்விதம் கொண்டால் சூத்திரம் 45-ல் கூறப்பட்ட பொருளுக்கு முரண்பாடு உண்டாகும் (ஆகவே ஞானம் என்பது மேலே கூறப்பட்ட இரண்டு ஞானமும் என்றே கொள்ளவேண்டும்).