Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 46)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
”என்னான் செய்கேன்” என்கிறவிடத்தில் இம்மூன்றுமுண்டு.
அதிகாரி த்ரயத்துக்கும் அஜ்ஞாநாதி த்ரயத்திலுமந்வய முண்டாயிருக்க, ஓரொன்றே ப்ரபதந ஹேதுவாகச் சொல்லுகிறது ”ஊற்றத்தப் பற்ற” என்றிறே சொல்லிற்று; இப்படி ஏகாதிகாரி பக்கலிலே இம்முன்று முண்டென்னு மிடங்காணாலாமிட முண்டோவென்ன வருளிச்செய்கிறார் ”என்னான்” என்று தொடங்கி.
– மூன்று வகையான அதிகாரிகளுக்கும் இந்த மூன்று விஷயங்களிலும் தொடர்பு உள்ளபோது, இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே அந்தந்த அதிகாரிகள் ப்ரபத்தியில் ஈடுபடக் காரணம் என்பதாக அல்லவோ சூர்ணை 44-ல் கூறப்பட்டது? ஒரு அதிகாரியிடமே இப்படியாக மூன்றையும் காண இயலுமோ என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.
– அதாவது, எம்பெருமான் தம்முடைய ஆர்த்தி கண்டிரங்கக் காணாமையாலே தன்னைப் பெறுமிடத்தில் சில ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேணுமென்றிருந்தானாகக் கொண்டு, உபாயாந்தராநுஷ்டாநத்துக்கு யோக்யதை யில்லாதபடி அஜ்ஞனான நான் என் செய்கேன்; ஜ்ஞாநம் தந்தோமே என்னில், நீ தந்த ஜ்ஞாநத்தாலே ஸ்வருப பாரதந்த்ர்யத்தை யுணர்ந்து ஸாதநாநுஷ்டாநம் அப்ராப்த மென்றிருக்கிற நானென் செய்கேன்; ஸ்வரூபத்துக்கு சேராதாகிலும் உன்னை பொறலாமாகில் இது தன்னை அநுஷ்டிக்கலாய்த்திறே ஜ்ஞாந மாத்ரத்தைத் தந்தாயாகில், பக்திரூபாபந்ந ஜ்ஞாநத்தைத் தருகையாலே ஒன்றையுமடைவுபட அநுஷ்டிக்க க்ஷமனல்லாதபடி பக்தி பரவசனான நானென் செய்கேன் என்று இம்மூன்று மாழ்வார்க்கு விவக்ஷிதமாகையாலே அவ்விடத்திலே இம்மூன்று முண்டென்கை. ஆகையால் இவ்விடத்திலே காணலாமென்று கருத்து.
ஸர்வேச்வரன் தனது துன்பமான நிலையைக் கண்டு சற்றும் இரங்காமல் உள்ளதால், “இவன் நம்மை அடைவதற்கு வேறு சில உபாயங்களையும் கைக்கொள்ள வேண்டும்”, என்று எம்பெருமான் எண்ணுவதாக ஒருவன் நினைக்கக்கூடும். அப்படி உள்ள மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளும் தகுதி தன்னிடம் இல்லை என்பதால், “நான் என்ன செய்வேன்” , என்று கூறக்கூடும். அப்போது அந்த அதிகாரி எம்பெருமானிடம், ”நீ எனக்கு அளித்த ஞானம் மூலமாக ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்தேன். இதனால் ஆத்மவானது மற்ற யாருக்கும் வசப்பட்டது அல்ல, உனக்கு மட்டுமே வசப்பட்டது என்று ஆத்மாவின் பாரதந்த்ர்யத்தை உணர்ந்தேன். ஆகவே மற்ற உபாயங்களைக் கைக் கொள்வது எனது ஆத்மாவின் தகுதிக்கு ஏற்றது அல்ல என அறிந்த நான் என்ன செய்வது?”, என்று இருக்கலாம் (இது ஆத்மஞானம் பெற்ற நிலையாகும்). “அப்படியே மற்ற உபாயங்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்புடையது அல்ல என்றாலும், உன்னை அடைவதற்கு அந்த உபாயங்கள் உதவும் என்றால், அவற்றைச் செய்வதற்கான தகுதியை நீயே எனக்கு அளிக்கக்கூடும். இப்படியாக பக்தியின் ரூபமாக உள்ள ஞானத்தை நீ அளிக்கலாம். இதன் காரணமாக வேறு ஒன்றிலும் முழுமையாக ஈடுபட இயலாதபடி பதியினால் கட்டுண்ட நான் என்ன செய்வேன்?”, என்று கூறலாம். இப்படியாக உள்ள மூன்று சிந்தனைகளும் ஆழ்வாருக்கு உண்டு என்பதால், ஒருவரிடமே இந்த மூன்றையும் காணலாம் என்றாகிறது.