Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 45)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
இம்மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும்.
இவ்வஜ்ஞாநாதி த்ரயத்துக்கு காரணமின்னதென்கிறார் (இம்மூன்றும்) என்று தொடங்கி.
– இப்படியாக உள்ள மூன்றுக்கும் (அறியாமை, ஆத்மஞானம், பக்தி) என்ன காரணங்கள் என்பதை அருளிச்செய்கிறார்.
– ”மூன்று தத்வத்தையும் பற்றி வரும்” என்றது – ஸாதநாநுஷ்டாநத்தில் அஜ்ஞாநாசக்திகளுக்கு மூலம் கர்ம நிபந்தநமான அசித் ஸம்பந்தமாகையாலே, அஜ்ஞாநம் அசித்தத்வத்தைப் பற்றிவரும்; இதர ஸாதநங்கள் ஸ்வரூப விருத்தமென்று பரித்யஜிக்கைக் குடலான ஜ்ஞாந பூர்த்திக்கடி மத்யம பதத்தில் சொல்லுகிற ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய தர்சநமாகையாலே, ஜ்ஞாநாதிக்யம் ஆத்மதத்வத்தைப் பற்றி வரும்; ஒன்றையுமடைவுபட அநுஷ்டிக்கமாட்டாதபடி கரணசைதில்யத்தைப் பண்ணும் பக்திவிவ்ருத்திக்குக் காரணம் ”காதல் கடல் புரைய விளைவித்த காரமர்மேனி” என்னும் பகவத் விக்ரஹ வைலக்ஷண்யமாகையாலே பக்தி பாரவச்யம் பகவத் தத்வத்தைப் பற்றி வருமென்றபடி.
– மற்ற சாதனங்களில் ஈடுபடுவதில் உள்ள அறியாமை மற்றும் ஆற்றல் அற்ற தன்மை ஆகியவற்றுக்கு மூலகாரணம் என்னவென்றால் – கர்மத்தின் தொடர்பினால் உண்டான சரீர ஸம்பந்தம் ஆகும். ஆகவே அறியாமை என்பது சரீர தத்வதைப் பற்றியே உண்டாகும். மற்ற சாதனங்கள் அனைத்தும் ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு முரண்பட்டே உள்ளன என்று உணர்ந்து, அவற்றை விலக்குதல் என்பது ஞானத்தின் அடிப்படையாகும். இத்தகைய ஞானம் பூர்ணமாக விளைவதற்கு அடிப்படை என்னவென்றால், நம: என்ற பதம் மூலம் உணர்த்தப்படும் ஆத்மாவின் தன்மையை உள்ளது உள்ளபடி அறிதலே ஆகும். ஆகவே ஞானத்தின் மேன்மை என்பது ஆத்மாவைப் பற்றியே உண்டாகும். மற்ற எதனையும் முழுமையாகச் செய்ய இயலாதபடி, உடல் உறுப்புக்கள் அனைத்தையும் குலைந்து போகும்படிச் செய்வது பக்தியாகும். இதற்குக் காரணம் திருவாய்மொழி (5-3-4) – காதல் கடல் புரைய விளைவித்த காரமர்மேனி - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள எம்பெருமானின் திருமேனி அழகு ஆகும். ஆகவே பக்தி மூலம் பரவசம் கொண்ட நிலை என்பது எம்பெருமான் என்ற தத்துவதைப் பற்றியே நிற்கும்.