Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 44)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தைப் பற்ற.

இப்படி அஜ்ஞாநாதிகளோரொன்றே யிவர்களுக்கு ப்ரபதந ஹேதுவாகச் சொல்லுகைக்கு மூலமின்ன தென்கிறார் (இப்படி என்று தொடங்கி).

இப்படியாக அஜ்ஞாநம் போன்ற மூன்றுக்குள் ஏதேனும் ஒன்று மட்டுமே ஒருவரின் ப்ரபத்திக்குக் காரணம் என்று கூறுவதன் மூலகாரணம் எது என்பதை அருளிச் செய்கிறார்.

– அதாவது அஜ்ஞாநாசக்திகளும் ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞாநமும் பகவத் பக்தியுமாகிறவிவை மூன்றிலும், மூவர்க்கு மந்வய முண்டாயிருக்கச்செய்தே, ஓரொன்றே யிவர்களுக்கு ப்ரபதந ஹேதுவாகச் சொல்லுகிறதும் இவற்றில் ஒரொன்றே இவ்வதிகாரிகள் பக்க லுறைத்திருக்கையாலே யென்கை. – இத்தால், முற்பட்டவர்கள் பக்கல் ஜ்ஞாந பக்திகளிரண்டும் குறைந்து அஜ்ஞாநமே விஞ்சியிருக்கும்; நடுவிலவர்கள் பக்கல், அஜ்ஞாந மல்பமாய் பக்தியுமளவு பட்டு ஜ்ஞாநமே விஞ்சியிருக்கும்; பிற்பட்டவர்கள் பக்கல், அஜ்ஞாநம் அத்யல்பமாய் ஸ்வரூப ஜ்ஞாநமுங் குறைவற்றிருக்கச்செய்தே, ப்ரேமமே கரைபுரண்டிருக்கும்; ஆகையால், எல்லா மெல்லார் பக்கலிலுமுண்டேயாகிலும் அல்பங்களானவை கிடக்கச்செய்தே அதிகமானதுவே அவ்வவர்க்கு ப்ரபதந ஹேதுவாமென்றதாய்த்து. இந்த யோஜநைக்கொரு குறையுண்டு. மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களுக்கும் அஜ்ஞானம் சிறிது கிடக்கிறதுண்டென்று கொள்ள வேண்டி வருகையாலே, ஆனால் செய்வதென்னென்னில், (ஊற்றத்தைப் பற்ற) என்கிறவித்தை அநுஸந்தாந பரமாக்கி யோஜிக்குமளவி லிவ்விரோதமில்லை; அப்போது (இப்படி) இத்யாதிக்கு - அஜ்ஞாநாசக்திகளும் ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞாநமும் பகவத் பக்தியுமாகிற இம் மூன்றினுடையவு மநுஸந்தாநம் மூவர்க்கு மேதேனுமொருபடி யுண்டாயிருக்கச் செய்தே ஓரொன்றே யிவ்வதிகாரிகளுக்கு ப்ரபதந ஹேதுவாகச் சொல்லுகிறதும் இவற்றி லோரொன்றிலே யிவ்வதிகாரிகளுக் கூற்றமாகையாலே யென்று பொருளாகக்கடவது. அதாவது, அநந்யகதிகளாய் ப்ரபந்நராகைக்குடலான அஜ்ஞாநாதி த்ரயாநுஸந்தாநமும் மூவர்க்கு முண்டானாலும், மூன்றிலும் வைத்துக்கொண்டு ப்ரசுரமானதே தந்தாமுக் கநந்யகதிகளாய் ப்ரபத்தியிலிழிகைக்கு ஹேதுவாக வநுஸந்தித் திருக்கையாலே யென்றபடி. இதில் ப்ரதமாதிகாரிகளுக்கு அஜ்ஞாநாநுஸந்தாநம் ஸ்வரஸம்; நடுவு சொன்னவர்களுக்கு, ப்ராமணிகராகையாலே அஜ்ஞாநத்தினுடைய ஸவாஸந நிவ்ருத்தி கூடாமையால், அஜ்ஞாநாநு ஸந்தாநம் கூடும்; பிற்பட்டவர்கள் மயர்வற மதிநலம் பெற்றவர்களாகையாலே அஜ்ஞாநாநுஸந்தாநம் நைச்ய நிபந்தநமா மித்தனை.

அஜ்ஞானம், ஆற்றல் இல்லாமல் இருத்தல்; ஆத்மாவின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிகின்ற ஞானம்; பகவத் ப்ரேமை ஆகிய மூன்றிலும் மூன்று விதமான அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம். ஆயினும் இவற்றில் ஏதோ ஒன்று மட்டுமே இவர்களது ப்ரபத்திக்குக் காரணமாக இருக்கும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே ஒவ்வொருவரிடமும் உறைந்திருக்கும். இதன் காரணாமாக முதல் வகையைச் சார்ந்தவர்களிடம் (அஜ்ஞானம் உள்ளவர்கள், சக்தி அற்றவர்கள்) ஞானம் மற்றும் பக்தி என்பது குறைவாக இருந்து அறியாமை மட்டுமே அதிகமாகக் காணப்படும். இரண்டாவது வகையைச் சார்ந்தவர்களிடம் (ஞானம் உள்ளவர்கள்) அறியாமை குறைவாகவும், பக்தி என்பது அளவுடன் காணப்பட்டு, ஞானமே அதிகமாக இருக்கும். மூன்றாவது வகையைச் சார்ந்தவர்களிடம் (பக்தி உள்ளவர்கள்) அறியாமை என்பது முகவும் குறைவாகவும், ஞானம் சற்றே குறைவாகவும், பக்தி என்பது கரைபுரண்டு ஓடும்படியும் காணப்படும். ஆகவே மூவரிடத்திலும் மூன்றும் உள்ளது என்றாலும், அவர்களிடம் எது குறைவாக உள்ளனவோ அவற்றைத் தள்ளி, அதிகமாக உள்ளதை மட்டுமே ப்ரபத்தியின் காரணமாக அருளிச்செய்தார். இப்படி நாம் பொருள் கொண்டால் சிறு தோஷம் இதில் உண்டு. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களுக்கும் சற்று அறியாமை உள்ளது என்றாகிவிடும். ஆகவே இப்படிச் சமாதனம் அருளப்பட்டது. அதாவது, அவர்களிடம் மிகுதியாக என்ன உள்ளது என்பதைப் பற்றி மட்டுமே எண்ணும்போது, மேலே கூறப்பட்ட தோஷம் உண்டாகாது. ஆகவே இந்தச் சூர்ணைக்கு எவ்விதம் பொருள் கொள்ளவேண்டும் என்றால் - அறியாமை, ஆத்மஞானம், பகவத் பக்தி ஆகிய மூன்றின் நினைவும் முன்று விதமான அதிகாரிகளுக்கு ஏதேனும் ஒன்று அதிகமாகவும் மற்றவை குறைவாகவும் இருக்கும்; அந்த ஒன்று மட்டுமே இவர்களின் ப்ரபத்திக்குக் காரணமாக ஏன் கூறப்படுகிறது என்றால், அந்த ஒன்றில் மட்டுமே அந்தந்த அதிகாரிகளுக்கு மிகுந்த ஈடுபாடும் சிந்தனையும் உள்ளதால் ஆகும். அதாவது மற்ற புகலிடம் இல்லாமல் உள்ள ப்ரபந்நர்கள் என்பதற்கு இன்றியமையாத தன்மைகளான அறியாமை, ஆத்மஞானம், பகவத் பக்தி ஆகிய மூன்றுமே மூன்று விதமான அதிகாரிகளுக்கு உண்டு; ஆனால் இந்த மூன்றில் ஏதோ ஒன்று மட்டுமே அவர்கள் வேறு புகலிடம் இல்லாமல் பகவானிடம் ப்ரபத்தி செய்வதற்குக் காரணமாக அதிக நினைவுடன் எண்ணும்படி உள்ளது. இங்கு முதல் வகையைச் சார்ந்தவர்களுக்கு அறியாமையை எண்ணுதல் பொருந்தும்; இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களுக்கு ப்ரமாணங்கள் மூலமாக பொருள் உணர்பவர்கள் என்பதால் அறியாமையின் வாசனை அடியுடன் நீங்குதல் என்பது இல்லாமையால் அறியாமையை எண்ணக்கூடும்; மூன்றாம் வகையைச் சார்ந்தவர்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் என்பதால் அறியாமை உள்ளதாக எண்ணுதல், தாங்கள் வேறு புகல் இல்லாதவர்கள் என்று எண்ணுதல், இதனால் தங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணமாகி விடுகின்றன.