Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 43)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
அஜ்ஞாநத்தாலே ப்ரபந்நர் அஸ்மதாதிகள்; ஜ்ஞாநாதிக்யத்தாலே ப்ரபந்நர் பூர்வாசார்யர்கள்; பக்திபாரவச்யத்தாலே ப்ரபந்நர் ஆழ்வார்கள்.
இப்படியிவ்வஜ்ஞாநாதிகளடியாக ப்ரபத்தி பண்ணினவர்களின்னா ரென்னுமிடம் காணலாமிடமுண்டோவென்னுமாகாங்க்ஷையிலே யருளிச் செய்கிறார் ”அஜ்ஞாநத்தாலே” என்று தொடங்கி.
இப்படியாக அஜ்ஞானம் தொடக்கமாக உள்ள மூன்று விதத்தினர் (ப்ரபத்தி செய்தவர்கள்) இவர்கள், இவர்கள் என்று எங்கு காணலாம் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அஜ்ஞாநத்தாலே ப்ரபந்நர் என்றது, இதரோபாயாநுஷ்டாநத்தி லிழிகைக் கீடான ஜ்ஞாநாதிகள் முதலிலே யில்லாமையாலே அநந்யகதிகளாய்க் கொண்டு பகவத் விஷயத்திலே பரந்யாஸம் பண்ணினவர்களென்றபடி. (அஸ்மதாதிகள்) என்று – ஸ்வநைச்யாநுஸந்தாநத்தாலே மந்தாதிகாரிகளோடே தம்மையும் கூட்டி யருளிச் செய்கிறார். (ஜ்ஞாநாதிக்யத்தாலே ப்ரபந்நர்) என்றது - உபாயாந்தரங்கள் ஸ்வரூபநாசக மென்று நடுங்கும்படியான ஸ்வரூபயாதாத்ம்ய தர்சநத்தாலே வந்த ஜ்ஞாந பூர்த்தியாலே அநந்ய கதிகளாய்க் கொண்டு, ஸ்வரூபாநுரூபமாக பகவதி ந்யஸ்தபரரானவர்க ளென்றபடி. (பூர்வாசார்யர்களாகிறார்) நாத யாமுந யதிவராதிகள். (பக்தி பாரவச்யத்தாலே ப்ரபந்நர்) என்றது – பகவத்ப்ரேம பௌஷ்கல்யத்தாலே ”காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்” என்றும், “இட்டகாலிட்டகை” என்றுஞ் சொல்லுகிறபடியே சிதிலகரணரா யிருக்கையாலே, ஸாதநாநுஷ்டாநத்துக்கு ஆளன்றிக்கே அநந்யகதிகளாய்க் கொண்டு அவன் பக்கலிலே பரஸமர்ப்பணம் பண்ணினவர்களென்றபடி. பக்தி பரவசர்க்கு ஸாதநாநுஷ்டாநம் பண்ணப் போகாதென்னுமிடம் ”உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து நானெங்குற்றேனு மல்லேன்” என்றும், ”என் கொள்வன்” என்கிற பாட்டிலும் ஆழ்வார் ஸுஸ்பஷ்டமாக வருளிச்செய்தாரிறே.
“அஜ்ஞாநத்தாலே ப்ரபந்நர்” என்பதன் மூலம், மற்ற உபாயங்களைக் கைக்கொள்வதில் ஞானம் இல்லாத காரணத்தினால், மற்ற புகலிடம் ஏதும் இல்லாமல், பகவானிடம் பரந்யாஸம் செய்தவர்கள் கூறப்பட்டனர். ”அஸ்மதாதிகள்” என்பதன் மூலம், தன்னைத் தாழ்வாகவே எண்ணியபடி உள்ளதால் மற்ற அதிகாரிகளுடன் தன்னையும் சேர்த்துக் கொள்கிறார். “ஜ்ஞாநாதிக்யத்தாலே ப்ரபந்நர்” என்பதன் மூலம் மற்ற உபாயங்கள் அனைத்தும் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அழித்துவிடும் என்பதான நடுங்க வைக்கும் உண்மையை அறிந்தவர்கள்; இந்த உண்மையை உணர்ந்த காரணத்தினால் ஞானம் நிறையப் பெற்றவர்கள்; இதனால் வேறு புகலிடம் தங்களுக்கு இல்லை என்று உணர்ந்து, தங்களது ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி எம்பெருமானிடமே தங்களது பாரத்தை வைத்தவர்கள். ”பூர்வாசார்யார்கள்” என்பது ஸ்வாமி நாதமுனிகள், ஸ்வாமி ஆளவந்தார், ஸ்வாமி எம்பெருமானார் போன்றவர்கள் ஆவர். ”பக்தி பாரவச்யத்தாலே ப்ரபந்நர்” என்பதன் மூலம் எம்பெருமானிடம் கொண்ட ப்ரேமையின் பூர்ணம் காரணமாக பெரியதிருவந்தாதி (34) – காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் – என்றும், திருவாய்மொழி (7-2-4) - இட்டகாலிட்டகை – என்றும் கூறுவது போன்று தங்களது உறுப்புக்கள் என்ன செய்கின்றன என்பதே தெரியாமல் உள்ளவர்கள்; இதனால் ஒரு குறிப்பிட்ட உபாயத்தைக் கைக்கொள்ளாமல், வேறு புகலிடம் இல்லாமல், அவனிடம் மட்டுமே சென்று பரஸமர்ப்பணம் செய்தவர்கள் ஆவர். பக்தி மற்றும் ப்ரேமை ஆகியவற்றின் காரணமாக எந்த ஒரு சாதனத்தையும் கைக்கொள்ளாமல் உள்ள நிலை ஏற்படும் என்பதைத் திருவாய்மொழி (5-7-2) – உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து நானெங்குற்றேனு மல்லேன் – என்றும், திருவாய்மொழி (5-1-4) – என் கொள்வன் - என்றும் கூறியதன் மூலம் ஆழ்வார் தெளிவாக உணர்த்தினார் அல்லவோ?