Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 42)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
அஜ்ஞரும், ஜ்ஞாநாதிகரும், பக்திபரவசரும்.
அவர்களாரென்றுமபேக்ஷையிலேயருளிச் செய்கிறார்.
– அந்த அதிகாரிகள் யாவர் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– “அஜ்ஞராகிறார்” பகவல்லாபத்துக்கு உறுப்பாக ஸாதநாநுஷ்டாநம் பண்ணுகைக்கீடான ஜ்ஞாநமிலாதவர்கள். அஜ்ஞாநம் அசக்திக்குமுபலக்ஷணம். ”ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கு மஜ்ஞாநாசக்திகளன்று” என்று மேலேயிவர் தானே அருளிச்செய்கிறாரிறே. ”ஜ்ஞாநதிகராகிறார்” ஜ்ஞாந சக்திகள் உண்டாயிருக்கச் செய்தேயும், பகவதத்யந்த பரதந்த்ரமான ஸ்வரூப யாதாத்ம்ய தர்சநத்தாலே, உபாயாந்தரங்கள் ஸ்வரூப விருத்தமென்று பரித்யஜிக்கைக்கீடான ஜ்ஞாந பூர்த்தி யுடையவர்கள். “பக்தி பரவசராகிறார்” ஒன்றையுமடைவுபட வநுஷ்டக்க க்ஷமரல்லாதபடி பகவத் ப்ரேமாதிசயத்தாலே சிதிலகரணரா யிருக்குமவர்கள்.
– “அஜ்ஞராகிறார்” – எம்பெருமானை அடைவதற்கான உறுப்பாக உள்ள சாதனங்கள் எதனையும் கைக்கொள்ளத் தகுதியான ஞானம் இல்லாதவர்கள் ஆவர். அறிவில்லாமல் உள்ளனர் என்பதன் மூலம், ஆற்றல் இல்லாமலும் உள்ளனர் என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டது. ”ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கு மஜ்ஞாநாசக்திகளன்று” என்று இவரே சூர்ணை 115-ல் அருளிச் செய்ய உள்ளார். “ஜ்ஞாநாதிகர்” – ஞானம் மற்றும் சக்தி ஆகியவற்றைக் கொண்டவர்கள்; ஆயினும் தங்களது ஆத்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்தவிதமான திறனும் அற்றது என்றும், பகவானால் மட்டுமே காப்பாற்ற இயலும் என்றும் அறிந்தவர்கள்; இப்படியாக ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள்; ஆகவே மற்ற உபாயங்கள் அனைத்தும் ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதமாக உள்ளவை என்று அறிந்ததால், அவற்றைக் கைவிடுவதற்கு ஏற்ற ஞானத்தைப் பூர்ணமாகக் கொண்டவர்கள் ஆவர். ”பக்தி பரவசராகிறார்” – எதனையும் தாங்களாகவே செய்யும் ஆற்றலைக் கொள்ளாமல், ஸர்வேச்வரனிடம் உண்டான ப்ரேமை காரணமாக, தங்களது செயல் மற்றும் சித்தம் போன்ற அனைத்தையும் அவனிடம் இழந்து நிற்பார்கள்.