Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 41)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
இதில் ப்ரபத்தி பண்ணுமதிகாரிகள் மூவர்.
– “ப்ரபத்திக்கு தேச நியமம்” என்று தொடங்கி இவ்வளவும் – உபாய வரணாத்மிகையான ப்ரபத்தியினுடைய தேச காலாதி நியமாபாவமும் விஷய நியமமும் தர்சிப்பிக்கப்பட்டது; இப்படி விஷய விசேஷத்தை தர்சிப்பித்தவநந்தரம் பகவச்சாஸ்த்ராதி ஸித்தமான அதிகாரி விசேஷங்களையும் ப்ரகாசிப்பிக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றி அதிகாரி விசேஷத்தையருளிச்செய்கிறார் ”இதில் ப்ரபத்தி பண்ணுமதிகாரிகள் மூவர்” என்று.
– ”ப்ரபத்திக்கு தேச நியமம்” என்று தொடங்கும் 23-வது சூர்ணை தொடங்கி இதுவரை உள்ள சூர்ணைகளில் ஸர்வேச்வரனை உபாயமாகப் பற்றுதல் என்னும் ப்ரபத்திக்கு தேசம், காலம் போன்ற நியமங்கள் இல்லை என்றும், உபாயமாகப் பற்றப்படும் பொருளின் நியமமும் கூறப்பட்டன. இப்படியாக ப்ரபத்திக்கு விஷயமாக உள்ள வஸ்துவின் மேன்மைகளைக் கூரிய பின்னர், பாஞ்சராத்ரம் உள்ளிட்ட பல சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ள அதிகாரிகளின் விசேஷங்கள் யாவை என்று விளக்க வேண்டும் எனத் திருவுள்ளம் கொண்டார். இந்தச் சூர்ணையில் அதிகாரிகளின் விசேஷத்தை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஸௌலப்யாதி குணபூர்த்தியாலே ப்ரபத்திக்கு நியத விஷயமான இவ்வர்ச்சாவதாரத்தில் ப்ரபத்தி பண்ணுமதிகாரிகள் ப்ரபதந ஹேது பேதத்தாலே மூன்று வகைப்பட்டிருப்பர்களென்கை.
– ”இதில் ப்ரபத்தி பண்ணுமதிகாரிகள் மூவர்” என்பதன் மூலம் ஸௌலப்யம் உள்ளிட்ட பல திருக்கல்யாண குணங்கள் பரிபூர்ணமாக உள்ளதால் ப்ரபத்திக்கு விஷயமாக உள்ள அர்ச்சாவதாரம் கூறப்பட்டது. இந்த அர்ச்சையில் ப்ரபத்தி செய்யும் அதிகாரிகள், தாங்கள் ப்ரபத்தி செய்வதற்கான காரணங்கள் வேறுபடுவதால், மூன்று வகைப்பட்டிருப்பார்கள் .