Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 40)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
இதுதான் சாஸ்த்ரங்களால் திருத்தவொண்ணாதே விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய்ப் போரும் சேதநர்க்கு வைமுக்க்யத்தை மாற்றி ருசியை விளைக்கக்கடவதாய், ருசி பிறந்தாலுபாயமாய், உபாய பரிக்ரஹம் பண்ணினால் போக்யமுமாயிருக்கும்.
இப்படி ஆச்ரணய ருசி பிறந்தார்க்கு ஆச்ரயணீயத்வே ஸுலபமாயிருக்குமளவேயன்று, ருசி ஜநகத்வாதிகளும் இவ்வர்ச்சாவதாரத்துக் குண்டென்று இதன் வைபவத்தையருளிச் செய்கிறார் மேல் (இதுதான்) என்று தொடங்கி.
இப்படியாக அர்ச்சாவதாரம் என்பது இவனை உபாயமாகப் பற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டவர்களுக்குப் பற்ற எளிதாக இருக்கவேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல, இவனைப் பற்ற வேண்டும் என்ற ருசியை உண்டாக்குவதும் அர்ச்சாவதாரமே என்னும் இதன் மேன்மையை இந்த சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
ப்ரக்ருதமான ஸௌலப்யாதி குணயோகத்தையுட்கொண்டு (இதுதான்) என்று பராமர்சிக்கிறார் (சாஸ்த்ரங்களால் திருத்தவொண்ணா மையாவது) ஹிதாநுசாஸநம் பண்ணுகிற ச்ருதி ஸ்ம்ருத்யாதி சாஸ்த்ரங்களானவை அருசி பிறக்கும்படி இதர விஷயங்களினுடைய தோஷாதிக்யத்தையும், ருசி பிறக்கும்படி பகவத் விஷயத்தினுடைய குணாதிக்யத்தையும் உபதேசித்தாலும், அவற்றால் இதர விஷயங்களை விட்டு இவ்விஷயத்தைப் பற்றும்படி பண்ணப் போகாமை துர்வாஸநாபலம் உபதேசத்தை நிரர்த்தகமாக்கிவிடுமிறே; ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு யா புத்திர் பாவிதா நிருணாம், தாமேவ பஜதே ஜந்துருபதேசோ நிரர்த்தக: என்னக்கடவதிறே. (விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய்ப்போருகையாவது) - சிலம்படி யுருவிற் கருநெடுங்கண்ணார் திறந்தனாயறத்தையே மறந்து புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கி என்றும், சுரிகுழல் மடந்தையர் திறத்துக் காதலே மிகுத்துக் கண்டவா திரிந்து என்றும், மாதரார் கயற்கணென்னும் வலையுட்பட்டழுந்துவேனை என்றும் சொல்லுகிறபடியே இதர விஷயங்களிலே அத்யபிநிவிஷ்டராய், யாதானும் பற்றி நீங்கும் விரதத்தையேறிட்டுக் கொண்டு, பகவத் விஷயத்திலே முகம் வைக்கவிசையாதே வர்த்திக்கை; இப்படி போரும் சேதநர்க்கு, (வைமுக்க்யத்தை மாற்றி ருசியை விளைக்கையாவது) - போதரேயென்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பாலாதரம் பெருகவைத்தவழகன் என்கிறபடியே - ஸ்வஸௌந்தர்யாதிகளாலே சித்தாபஹாரம் பண்ணி, தன்னைக் காணவேண்டோமென்றிக்குமிருப்பைக் குலைத்து, கண்ட கண் மாறவைக்க மாட்டாதபடி பண்ணுகை. (ருசிபிறந்தாலுபாயமாகையாவது) இப்படி தன் வைலக்ஷண்ய தர்சநத்தாலே தன்னை நித்யாநுபவம் பண்ணப் பெறவேணுமென்னும் ருசி பிறந்தவநந்தரம், ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் என்கிறபடியே ஸம்ஸார நிவ்ருத்தி பூர்விகையான ஸ்வப்ராப்திக்குத் தானே ஸாதநமாகை. (உபாய பரிக்ரஹம் பண்ணினால் போக்யமுமாயிருக்கையாவது) - தன்னையுபாயமாகப் பரிக்ரஹித்தால், உபேயஸித்திக்கொரு தேச விசேஷத்திலே போமளவும் பார்த்திருக்க வேண்டாதே அணியரங்கனென்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்றும், எனக்குத் தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே என்றுஞ் சொல்லுகிறபடியே நிரதிசய போக்யமாயிருக்கையாலே தானே உபேயமுமாயிருக்கை. – ஆக, ப்ரபத்திக்கு குணபூர்த்தியுள்ளவிடமே விஷயமாக வேணுமென்றும், அதுதானுள்ளது அர்ச்சாவதாரத்திலேயென்றும் அத்தைப் பற்ற ஆழ்வார்களெல்லாரும் ப்ரபத்தி பண்ணிற்று இவ்விஷயத்திலேயென்றும், இவ்விஷயத்திலேயெல்லா குணங்களும் புஷ்கலங்களென்றும், விசேஷித்து ப்ரபத்திக்கபேக்ஷித குணங்கள் விசதமாக ப்ரகாசிப்பதிங்கேயென்றும், இதுதான் தன்னுடைய நைரபேக்ஷ்யாதிகளையழிய மாறி தன்னையநாதரிப்பாரையாதரித்துக்கொண்டு நிற்கிற ஸ்தலமென்றும், பரத்வாதிகள் ஓரொரு ப்ரகாரத்திலே துர்லபம், இது ஸர்வப்ரகார ஸுலபமென்றும், இவ்வளவேயன்று, இவ்விஷயம் ருசிஜநகமுமாய் உபாயோபேயமாயிருக்குமென்றும் சொல்லப்பட்டது. – இத்தால், உபாயோபேயங்களிரண்டும் தானேயாய், ஸ்வேதர விஷய விரக்தி பூர்வகமாக ஸ்வவிஷயருசியை ஜநிப்பிக்குமதாய், ஸர்வ ஸுலபமாய், தன் படிகளையழிய மாறிக்கொண்டு தன்னையநாதரிப்பாரை யுமாதரிக்குமதாய், ப்ரபத்த்யபேக்ஷித குணோஜ்ஜ்வலமாய், ஸமஸ்தகுண ஸம்பூர்ணமாய், ப்ரபந்நஜந கூடஸ்த்தர்க்கு உபாயவரண விஷயமாயிருந்துள்ள அர்ச்சாவதாரமே ப்ரபத்திக்கு நியத விஷயமென்றதாய்த்து.
“இதுதான்” என்று கூறுவதன் மூலம் ஸௌலப்யம் உள்ளிட்ட பல திருக்கல்யாண குணங்களுடன் கூடிய அர்ச்சை உணர்த்தப்பட்டது. ”சாஸ்த்ரங்களால் திருத்தவொண்ணாதே” என்பதன் பொருள் – நமக்கு எது நன்மையோ அதனை மட்டுமே உபதேசிக்கும் வேதங்களும் ஸ்ம்ருதிகளும் நமக்கு உபதேசிப்பவை என்ன? இந்த உலக வாழ்வில் உள்ள குற்றங்களை நமக்கு விளக்கி உலக விஷயங்களின் மீது நமக்கு வெறுப்பு உண்டாக்கும்படிச் செய்வதும், ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்களை நமக்கு உபதேசித்து அவன் மீது ஈடுபாடு உண்டாகும்படிச் செய்வதும் ஆகும். இவ்விதம் அவை செய்தாலும், நம்முடைய தீய வாஸனையின் பலன் காரணமாக நாம் இந்த உலக விஷயங்களைக் கைவிட்டு அவனை முழுவதுமாகப் பற்றும்படிச் செய்ய அவற்றால் இயலவில்லை என்னும்படியாக உள்ளது அல்லவோ? ஆக அவை செய்யும் உபதேசங்கள் வீணாகிவிடும் என்றாகிறது. ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு யா புத்திர் பாவிதா நிருணாம், தாமேவ பஜதே ஜந்துருபதேசோ நிரர்த்தக: - அவரவர்களின் பிறவி என்பதன் மூலம் மனிதர்களுக்கு எந்தவிதமான அறிவு தோன்றுகிறதோ அந்த அறிவையே அவர்கள் பெறுகின்றனர்; ஆகவே சாஸ்திரங்களின் உபதேசங்கள் பயனற்றதாகி விடுகிறது - என்றது காண்க. “விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய்ப்போரும்” என்பதன் பொருள்: பெரியதிருமொழி (1-6-2) – சிலம்படி யுருவிற் கருநெடுங்கண்ணார் திறந்தனாயறத்தையே மறந்து புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கி – என்றும், பெரியதிருமொழி (1-6-3) – சுரிகுழல் மடந்தையர் திறத்துக் காதலே மிகுத்துக் கண்டவா திரிந்து – என்றும், திருமாலை (16) - மாதரார் கயற்கணென்னும் வலையுட்பட்டழுந்துவேனை – என்றும் கூறுவது போன்று, மற்ற விஷயங்களில் பற்றுதல் அதிகமாகவே உள்ளது. திருவிருத்தம் (95) – யாதானும் பற்றி நீங்கும் விரதம் – என்பதற்கு ஏற்ப இல்லாமல், எம்பெருமானிடம் விருப்பம் வைக்க எண்ணாமல் இருத்தல் – என்பதாகும். இப்படியாக உள்ள சேதநர்கள் குறித்து ”வைமுக்க்யத்தை மாற்றி ருசியை விளைக்கக் கடவதாய்” என்பதன் பொருள் என்ன? திருமாலை (16) – போதரேயென்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பாலாதரம் பெருகவைத்தவழகன் – என்று கூறுவது போன்று தனது அழகு போன்ற பலவற்றையும் காண்பித்து, இவர்கள் மனத்தினைத் தன்பால் கவர்கிறான். பின்னர் அவர்களிடம் உள்ள “தன்னைக் காணவேண்டாம்” என்று சிந்தனையை மாற்றுகிறான். அத்துடன் நில்லாமல் தன்னைக் கண்ட கண்கள் தன்னை விட்டு அகலாமல் செய்துவிடுகிறான். “ருசிபிறந்தாலுபாயமாய்” என்பதன் பொருள்: இப்படியாகத் தன்னைக் கண்டதால், தனது அழகு காரணமாகத் தன்னையே எப்போதும் அனுபவித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்ற ருசியை ஏற்படுத்துகிறான். அதன் பின்னர் திருவாய்மொழி (5-7-10) – ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் – என்பதற்கு ஏற்ப இந்த உலக வாழ்வைக் கைவிடுவது தொடக்கமாகத் தன்னை அடைவதற்குத் தானே சாதனமாக உள்ள நிலையை உணர்த்துகிறான். “உபாய பரிக்ரஹம் பண்ணினால் போக்யமுமாயிருக்கையாவது” என்பதன் பொருள்: தன்னையே உபாயமாகப் பற்றிக் கொண்டால் போதுமானது, மோக்ஷம் என்ற பலன் கிட்ட வேறு எந்த இடத்திற்கும் செல்லவேண்டாம் என்பதை உணர்த்துகிறான். அமலனாதிப்பிரான் (10) – அணியரங்கனென்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே – என்றும், திருவாய்மொழி (10-7-2) - எனக்குத் தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே – என்றும் கூறுவது போன்று எல்லையற்ற இனிமையான பொருளாகத் தான் உள்ளதால், தானே அடைய வேண்டிய பொருளாகவும் உள்ளதை உணர்த்துகிறான். – ஆகவே இங்கு உணர்த்தப்படுவது என்னவென்றால் ப்ரபத்திக்குச் சிறந்த திருக்கல்யாண குணங்கள் நிறைந்த ஒரு பொருளே இலக்காக இருத்தல் வேண்டும் இப்படிப்பட்ட குணங்கள் உள்ள இடம் அர்ச்சாவதாரம் இதன் காரணமாகவே ஆழ்வார்கள் அனைவரும் அர்ச்சாவதாரத்திலேயே ப்ரபத்தி செய்தனர் எம்பெருமானின் அனைத்து குணங்களும் பரிபூர்ணமாக உள்ளது இத்தகைய அர்ச்சாவதாரத்தில் மட்டுமே ஆகும் ப்ரபத்திக்கு இன்றியமையாத குணங்கள் அனைத்தும் விசேஷமாகவும் தெளிவாகவும் வெளிப்படுவது இத்தகைய அர்ச்சாவதாரத்தில் மட்டுமே ஆகும் இத்தகைய அர்ச்சாவதாரம் என்பது எம்பெருமானின் குணத்தையே மாற்றுவதாக உள்ளது. எப்படி? “தான் எந்த ஒரு பொருளையும் விரும்பாதவன்” என்றபடி உள்ள எம்பெருமானின் நிலையை அழித்து, தன்னை விரும்பாதவர்களையும் தான் விரும்பி நிற்கும் விதமாக அர்ச்சாவதாரம் உள்ளது பரத்வம் போன்ற மற்ற நான்கு நிலைகளும் ஒவ்வொரு முறையால் பற்றுவதற்கு மிகவும் கடிமையானவை ஆகும். ஆனால், அனைத்து விதங்களிலும் பற்றுவதற்கு அர்ச்சையே எளிதாக உள்ளது. இது மட்டுமே அல்ல. எம்பெருமான் மீது ருசியை உண்டாக்கவல்லதாகவும், உபாயம் மற்றும் உபேயமாக உள்ளதாகவும் அர்ச்சை இருக்கிறது. – ஆகவே அர்ச்சாவதாரம் என்பதே ப்ரபத்திக்கு ஏற்ற விஷயமாக உள்ளது என்பதைப் பின்வரும் காரணங்களால் அறியலாம் உபாய உபேயங்களாக அர்ச்சையே உள்ளது மற்ற விஷயங்களில் வெறுப்பு தோன்றும்படியும், தன் விஷயத்தில் ருசி உண்டாகும் படியும் செய்கிறது. அனைத்து விதங்களிலும் பற்றுவதற்குச் சுலபமாக உள்ளது தனது விருப்புவெறுப்புகளை மாற்றி அமைத்துக் கொண்டு, தன்னை விரும்பாதவர்களையும் தான் விரும்பியபடி உள்ளது ப்ரபத்திக்கு ஏற்ற குணங்கள் அனைத்தும் ஒன்றாக வெளிப்படும்படியாக உள்ளது அனைத்து குணங்களையும் பரிபூர்ணமாகக் கொண்டது ப்ரபந்நஜந கூடஸ்த்தர்கள் எனப்படும் ப்ரபத்தியில் ருசியுள்ளவர்கள், உபாயமாகப் பற்றுவதற்கு ஏற்றதாக உள்ளது.