Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 39)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
பூகதஜலம் போலே அந்தர்யாமித்வம்; ஆவரணஜலம் போலே பரத்வம்; பாற்கடல்போலே வ்யூஹம்; பொருக்காறுபோலே விபவங்கள்; அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்.
பரத்வாதிகளுடைய தௌர்லப்யத்தையும் அர்ச்சாவதார ஸௌலப்யத்தையும் த்ருஷ்டாந்த முகேந தர்சிப்பிக்கிரார் மேல் (பூகதஜலம்) என்று தொடங்கி.
ப்ரத்வம் உள்ளிட்ட நான்கு நிலைகளின் அருமை மற்றும் அர்ச்சாவதாரத்தின் எளிமை ஆகியவற்றைத் தகுந்த உதாரணம் மூலம் இந்தச் சூர்ணையில் விளக்குகிறார்.
த்ருஷ்ணார்த்தனுக்கு தேசாந்தரத்திற் போகவேண்டாதபடி நிற்கிறவிடந் தன்னிலேயுண்டாயிருக்கச்செய்தேயும், கொட்டும் குந்தாலியுங்கொண்டு கல்லினாலல்லது குடிக்கக் கிடையாத பூகதஜலம் போலேயாய்த்து - கண்டு பற்ற வேணுமென்றாசைப்பட்டவனுக்கு ஹ்ருதயத்திலேயிருக்கச்செய்தேயும் கட்கிலீ என்கிறபடியே கண்ணுக்கு விஷயமன்றிக்கே, அஷ்டாங்க யோகரூப யத்நத்தாலே காண வேண்டும்படியான அந்தர்யாமித்வம். அவனுக்கு, அண்டத்துக்குப் புறம்பே பெருகிக் கிடக்கிற ஆவரணஜலம் போலேயாய்த்து இவனுக்கும் அப்பால் முதலாய் நின்ற வளப்பரியவாரமுது என்கிறபடியே லீலாவிபூதிக்கப்பால்பட்டிருக்கிற பரத்வம். அப்படி அதிவிப்ரக்ருஷ்டமன்றியே அண்டாந்தர்ப்பூதமாயிருக்கச்செய்தேயும், அவனுக்கு துஷ்ப்ராபமான பாற்கடல் போலேயாய்த்து இவனுக்கும் பாலாழி நீ கிடக்கும் பண்பை யாங்கேட்டேயும் என்கிறபடியே, கேட்டிருக்குமத்தனையல்லது, சென்று காணவரிதாம்படியிருக்கிற வ்யூஹம். ப்ரத்யாஸந்நமாயும் தாத்காலிகர்க்கு உபஜீவ்யமாய் பாச்சாத்யனானவனுக்கு துர்லபமான பெருக்காறு போலேயாய்த்து மண் மீதுழல்வாய் என்கிறபடியே பூமியிலேயவதரித்து ஸஞ்சரித்தும், தத்காலவர்த்திகளுக்கு ஆச்ரயணீயமாய்ப் பிற்காலத்திலுளனானவிவனுக்குக் கிட்டாதபடியான விபவம். முன்பு சொன்னவை போலன்றிக்கே, அவனுக்கு விடாய் கெடப் பருகலாம்படி பெருக்காற்றிலே தேங்கின மடுக்கள் போலேயாய்த்து இவனுக்கும் தேச கால காரண விப்ரக்ருஷ்டமின்றிக்கே கோயில்களிலும் க்ருஹங்களிலும் என்றுமொக்க எல்லார்க்கும் கண்ணுக்கிலக்காம்படி நிற்கிற பின்னானார் வணங்குஞ் சோதியான அர்ச்சாவதாரம். பௌமதிகேதநேஷ்வபி குடீகுஞ்ஜேஷு என்கிறபடியே – பலவிடங்களிலும் ஸந்நிதி பண்ணி நிற்கும்படியை நினைத்திறே (மடுக்கள் போலே) என்ற பஹுவசநத்தாலேயருளிச் செய்தது. அவதார குணங்களெல்லாம் அர்ச்சா ஸ்தலங்களிலே பரிபூர்ணமாயிருக்கையாலும், அவதார விக்ரஹங்களை அர்ச்சாரூபேண பலவிடங்களிலும் பரிக்ரஹித்துக் கொண்டிருக்கையாலும் (அதிலே தேங்கின மடுக்கள் போலே) என்கிறது.
– ”பூகதஜலம் போலே அந்தர்யாமித்வம்” – மிகுந்த தண்ணீர் தாகம் கொண்ட ஒருவனுக்குப் பருகுவதற்கான நீர் என்பது வேறு எங்கும் அலைய வேண்டியது இல்லாதபடி, அவன் உள்ள இடத்திலேயே இருக்கக்கூடும். ஆயினும் அந்த நீரானது தகுந்த ஆயுதங்கள் இன்றி எடுக்க இயலாதபடி, பூமிக்குள் மிகவும் ஆழத்தில் உள்ளதாக இருப்பது போன்று அந்தர்யாமி நிலையின் எளிமை உள்ளது. ”எம்பெருமானைக் கண்டு அவனைப் பற்றிக் கொள்ளவேண்டும்”, என்ற ஆசையுடன் கூடிய ஒருவனுக்கு, திருவாய்மொழி (7-2-3) – கட்கிலீ - என்று கூறுவது போன்று கண்களால் காண இயலாமல், அஷ்டாங்கயோகம் மூலம் மட்டுமே காணலாம்படியாக அந்தர்யாமி நிலை உள்ளது. ”ஆவரணஜலம் போலே பரத்வம்” – எம்பெருமானைக் கண்டு அவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்ட ஒருவனுக்குத் திருநெடுந்தாண்டகம் (14) - அப்பால் முதலாய் நின்ற வளப்பரியவாரமுது – என்று கூறுவதற்கு ஏற்ப லீலாவிபூதிக்கு அப்பால் பரத்தவம் உள்ளது. ஆக தாகம் கொண்ட ஒருவனுக்கு இந்த அண்டத்தின் வெளியில் பரவி உள்ள ஆவரண நீர் போன்று பரத்த்வ நிலை உள்ளது. ”பாற்கடல் போலே வ்யூஹம்” – ஆவரண நீர் போன்று மிகவும் தூரத்தில் இல்லாமல் இந்த உலகில் உள்ளதாக இருந்தபோதிலும், தண்ணீர்த்தாகம் எடுத்தவன் சென்று பருக இயலாததாக உள்ள திருப்பாற்கடல் போன்று வ்யூஹம் உள்ளது. அவனைக் கண்களால் கண்டு பற்றவேண்டும் என்ற ஆசை கொண்ட ஒருவனுக்குப் பெரியதிருவந்தாதி (34) - பாலாழி நீ கிடக்கும் பண்பை யாங்கேட்டேயும் – என்று கூறுவது போன்று, கேட்டு ரசிக்கும்படி மட்டுமே வ்யூஹம் இருக்குமே அன்றிக் காண இயலாது. ”பெருக்காறு போலே விபவம்” – காணலாம்படி உள்ளபோதிலும், அந்தந்த காலங்களில் உள்ளவர்கள் மட்டுமே காணலாம்படியும் பருகலாம்படியும், மற்ற காலங்களில் உள்ளவர்களால் காண இயலாதபடியும், வெள்ளத்துடன் கூடிய ஆறு போன்று விபவம் உள்ளது. திருநெருந்தாண்டகம் (19) - மண் மீது உழல்வாய் - என்று கூறியபடி இந்தப் பூமியில் அவன் அவதரித்து, எங்கும் ஸஞ்சாரம் செய்தபோதிலும், அந்தக் காலத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே அண்டத்தக்கதாக, மற்ற காலங்களில் உள்ளவர்களால் காண இயலாததாக விபவம் உள்ளது. ”தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்” - மேலே கூறியதைப் போன்று அல்லாமல், தாகம் தீரப் பருகவல்லபடி, பெரும்வெள்ளத்தில் இருந்து உண்டான சிறிய நீர் நிலைகள் போன்று அர்ச்சை உள்ளது. எம்பெருமானைக் கண்டு அவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் கூடியவனுக்கு இடம், காலம், காரணம் ஆகிய மூன்றாலும் மிகவும் எளிமையாகக் காட்சி கொடுத்து, கோவில்களில் மட்டும் அல்லாமல் வீடுகளிலும் அனைவரின் கண்களில் புலம்படும்படியாக இந்த நிலை உள்ளது. திருவாய்மொழி (6-9-5) – பின்னானார் வணங்கும் சோதி - என்றபடி உள்ளது அர்ச்சை ஆகும். ஸ்ரீரங்கராஜஸ்தவம் (74) – பௌமதிகேதநேஷ்வபி குடீகுஞ்ஜேஷு - இந்த உலகில் உள்ள கோயில்கள், அடியார்களின் வீடுகள் – என்பது போன்று, பல இடங்களிலும் இவன் அர்ச்சையில் எழுந்தருளியுள்ள நிலையை ஆராய்ந்தே இங்கு “மடுக்கள்” என்று பன்மையில் அருளிச்செய்தார். இவனது மற்ற அவதாரங்களின் திருக்கல்யாண குணங்கள் அனைத்தும் அர்ச்சையில் பரிபூர்ணமாக நிறைந்துள்ளது. மேலும் அவதாரங்களில் தான் எடுத்த திவ்யமான உருவங்களைப் பல இடங்களிலும் காண்பித்தபடி உள்ளான். எனவே இங்கு “அதிலே தேங்கின மடுக்கள் போலே” என்று அருளிச்செய்தார்.