Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 38)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
பூர்த்தியையும் ஸ்வாதந்த்ர்யத்தையும் குலைத்துக் கொண்டு தன்னை அநாதரிக்கிறவர்களைத் தான் ஆதரித்து நிற்கிறவிடம்
“இக்குணங்கள் ப்ரகாசிப்பதிங்கே” என்றத்தை யுபபாதிக்கிறார் (பூர்த்தியையும்) என்று தொடங்கி.
– “இக்குணங்கள் ப்ரகாசிப்பது இங்கே” என்று கடந்த சூர்ணையில் அருளிச்செய்ததை மேலும் விளக்குகிறார்.
(பூர்த்தியாவது) - அவாப்த ஸமஸ்த காமத்வம்; அத்தைக் குலைத்துக் கொள்ளுகையாவது இவனிட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டும்படி ஸாபேக்ஷனாயிருக்கை. (ஸ்வாதந்த்ர்யமாவது) ஸ்வாதீந ஸ்வரூபாதிமத்த்வம்; அத்தைக் குலைத்துக் கொள்ளுகையாவது - ஆச்ரிதாதீந ஸ்வரூப ஸ்தித்யாதிகளையுடையனாகை. ததிச்சயா மஹாதேஜா புங்க்தேவை பக்தவத்ஸல: ஸ்நாநம் பாநம் ததா யாத்ராம் குருதேவை ஜகத்பதி: ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோப்யஸ்வதந்த்ரோ யதாததா ஸர்வசக்திர் ஜகத்தாதாப்யசக்த இவ சேஷ்டதே என்னக்கடவதிறே. அர்ச்சக பராதீநாகிலாத்ம ஸ்திதி: என்றருளிச் செய்தாரிறே பட்டர். தன்னிச்சையொழிய இவற்றைக் குலைக்கைக்கு ஹேதுவில்லாமையாலே (குலைத்துக்கொண்டு) என்கிறார். (தன்னையநாதரிக் கிறவர்களைத் தானாதரித்து நிற்கிறவிடம்) என்றது - தானிப்படி ஸுலபனாய் வந்து நின்றால் அரியவனெளியவனாய் நிற்கப் பெற்றோமே! என்று விரும்பி மேல் விழுகை யன்றிக்கே, அவ்வெளிமை தானே ஹேதுவாக உபக்ஷிக்கிற ஸம்ஸாரிகளைத் தான் விட மாட்டாதவளவன்றிக்கே அவர்களையொழியச் செல்லாமை தோற்றும்படி நிற்கிற ஸ்தலம் அர்ச்சாவதாரமென்கை. பூர்த்தியையும் ஸ்வாதந்த்ர்யத்தையும் குலைத்துக்கொண்டு நிற்கையாலே – ஸௌலப்ய ஸௌசீல்யங்களும் தன்னையநாதரிக்கிறவர்களைத் தானாதரித்து நிற்கையாலே - ஸ்வாமித்வ வாத்ஸல்யங்களுமிங்கே தோற்ற நின்றதிறே. அன்றிக்கே, (பூர்த்தியையும்) என்று தொடங்கி இவ்வாக்யமெல்லாவற்றாலும் குணசதுஷ்டயத்திலும் ப்ரதாநமான ஸௌலப்யத்தையே யோட வைத்தாராகவுமாம்; அப்போது, இவ்விஷயத்தினுடைய ஸௌலப்யாதிசயத்தை தர்சிப்பிக்கிறாரென்று வாக்ய ஸங்கதியாக்கடவது. கண்ணுக்கு விஷயமாம்படி நித்ய ஸந்நிதி பண்ணுகிறவளவன்றிக்கே, ஸர்வப்ரகார பரிபூர்ணனாய் நிரங்குச ஸ்வதந்த்ரனாயிருக்கிற தன்னை ஸாபேக்ஷனும் பரதந்தரனுமாக்கிக் கொண்டு, தன்னை யநாதரிக்கிற ஸம்ஸாரிகளைத் தானாதரித்து நிற்கைக்கு மேற்பட்ட ஸௌலப்யமில் லையிறே; ஏவம் பஞ்சப்ரகாரோஹ மாத்மநாம் பததாமத: பூர்வஸ்மாதபி பூர்வஸ்மாஜ் ஜ்யாயாம்ச்சைவோத்தரோத்தர:; ஸௌலப்யதோ ஜகத்ஸ்வாமீ ஸுலபோஹ்யுத்தரோதர: என்று பரத்வாதிகளைந்திலும் ஸௌலப்யமுண்டாயிருக்கச்செய்தே, பூர்வபூர்வத்திற் காட்டிலுத்தரோத்தரத்துக்கு ஸௌலப்யமதிசயித்திருக்குமென்று தானேயருளிச் செய்கையாலே, ஸௌலப்யத்துக்கெல்லை நிலம் அர்ச்சாவதாரமிறே.
பூர்த்தி என்றால் தான் விரும்பியது அனைத்தும் அடைந்தவனாக இருப்பதாகும் (அவாப்த ஸமஸ்த காமத்வம்). அந்தத் தன்மையை விடுதல் என்பது, தனது அடியார் ஒருவன் தனக்குச் சிறிய ஒன்றை அளித்தாலும் அதனைக் கொண்டு, தான் மனம் நிறைய வேண்டும் என்று விரும்புதல் ஆகும். ஸ்வாதந்த்ர்யம் என்றால் ஸ்வரூபம் போன்ற பலவற்றையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பது ஆகும். அந்தத் தன்மையைப் போக்கிக் கொள்ளுதல் என்பது - தனது அடியார்களுக்கு ஏற்றபடி தனது ஸ்வரூபம், இருப்பு ஆகியவற்றை மாற்றிக் கொள்ளுவது ஆகும். விஷ்வக்சேந ஸம்ஹிதை – ததிச்சயா மஹாதேஜா புங்க்தேவை பக்தவத்ஸல: ஸ்நாநம் பாநம் ததா யாத்ராம் குருதேவை ஜகத்பதி: ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோப்யஸ்வதந்த்ரோ யதாததா ஸர்வசக்திர் ஜகத்தாதாப்யசக்த இவ சேஷ்டதே - அடியார்களின் தோஷங்களைப் பாராமல் உள்ளவனாக, மிகுந்த மேன்மை கொண்டவனாக உள்ள ஸர்வேச்வரன், தன்னை அண்டியவர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி நீராடுவது, நீர்பருகுவது, யாத்திரை செல்வது போன்ற பலவற்றையும் செய்கிறான்; ஜகந்நாதனான அவன் அடியார்களின் முன்பாக ஸ்வதந்த்ரனாக உள்ளபோதிலும், ஸ்வதந்த்ரம் அற்றவன் போன்றே உள்ளான்; அனைத்து வல்லமை படைத்தவனாக உள்ளபோதிலும், சற்றும் திறன் அற்றவன் போன்று அடியார்கள் முன்பு லீலைகள் செய்கிறான் - என்றது காண்க. ஸ்வாமி பராசரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் (74) – அர்ச்சக பராதீநாகிலாத்ம ஸ்திதி: – அர்ச்சகர் எவ்விதமாக அலங்கரிக்கிறாரோ அதனை ஏற்று உள்ளான் - என்றார். இது போன்று தனது உயர்ந்த தன்மைகளைத் தாழ்த்திக் கொள்ளுதல் என்பதற்கு அவனுடைய விருப்பம் இல்லாமல், வேறு எந்தக் காரணத்தினாலும் அல்ல என்பதை உணர்த்தவே “குலைத்துக்கொண்டு” என்றார். ” தன்னையநாதரிக்கிறவர்களைத் தானாதரித்து நிற்கிறவிடம்” என்பதன் பொருள் – இவ்விதம் எளிமையால் வந்து நிற்பது, ”காண்பதற்கும் அடைவதற்கும் மிகவும் அரியவனாக உள்ள ஸர்வேச்வரன் இத்தனை சுலபமாக இங்கு வந்து நிற்கும்படியான பேறு பெற்றோமே” என்று இவனது அடியார்கள் ஓடிவந்து அணைப்பதற்காக மட்டுமே அல்ல; இந்த எளிமை காரணமாக இவன் தன்னை அண்டாத மனிதர்களையும் விடுவதில்லை; அத்துடன் அல்லாமல் தனது அழகில் மயக்கி தன்னை விரும்பாத மனிதர்கள் தன்னை விட்டு அகலாமல் செய்து, அவர்களைத் தோற்கடிப்பது இந்த அர்ச்சாவதாரத்தில் என்று உணர்த்தவே ஆகும். ஆக இவன் தனது பூர்த்தி மற்றும் ஸ்வாதந்த்ர்யம் ஆகிய இரண்டையும் தள்ளி வைத்து நிற்கிறான். மேலும் தனது ஸௌலப்யம் மற்றும் ஸௌசீல்யம் ஆகியவை மூலமாகத் தன்னை அண்டாதவர்களையும் தான் அணைத்துக் கொண்டு நிற்கிறான். இதனால் இங்கு இவனது ஸ்வாமித்வமும் வாத்ஸல்யமும் தோன்றா நின்றன. இதற்கு வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். இந்தச் சூர்ணை மூலம் நான்கு குணங்களுக்குள் முதன்மையான ஸௌலப்யத்தையே உரைக்கிறார் எனக் கூறலாம். இவ்விதம் பொருள் கொள்ளும்போது, இவனது ஸௌலப்யமானது அர்ச்சையில் அதிகமாக உள்ளதை உணர்த்துகிறார் என்றாகிறது. எப்போதும் நமது கண்களுக்கு புலப்படும்படியாக நிற்கிறான்; அனைத்து விதங்களிலும் அனைத்தும் பெற்றுள்ளவனும், எந்த ஒன்றாலும் தடை ஏற்படாத சுதந்திரம் உள்ளவனும் ஆகிய இவன் ஏதோ ஒரு பொருளை விரும்பி நிற்பவன் போன்றும், சுதந்திரம் இல்லாதவன் போன்றும், அடியார்கள் இழுத்த இழுப்புக்கு வருபவன் போன்றும் தன்னை மாற்றிக் கொண்டு அர்ச்சையாக நிற்கிறான்; தன்னை விரும்பாத மனிதர்களையும் தான் விரும்பியவனாக நிற்கிறான். இதனைக் காட்டிலும் உயர்ந்த ஸௌலப்யம் வேறு என்ன உள்ளது? விஷ்வக்ஸேந ஸம்ஹிதை – ஏவம் பஞ்சப்ரகாரோஹ மாத்மநாம் பததாமத: பூர்வஸ்மாதபி பூர்வஸ்மாஜ் ஜ்யாயாம்ச்சைவோத்தரோத்தர:; ஸௌலப்யதோ ஜகத்ஸ்வாமீ ஸுலபோஹ்யுத்தரோதர: – அந்தர்யாமி போன்ற ஐந்து நிலைகளுடன் உள்ள நான் ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ள ஜீவாத்மாக்களைக் குறித்து முன்பு இருந்ததைவிட இன்னமும் எளிமை, அதனைவிட எளிமை என்று உள்ளேன். இந்த உலகின் ஸ்வாமியான நான் எனது ஸௌலப்யம் காரணமாக மிகவும் சுலபன் அல்லவா - என்றது காண்க. ஆக பரவாஸுதேவன் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் ஸௌலப்யம் என்பது இருக்கவே செய்கிறது. ஆயினும் முந்தைய நிலையைக் காட்டிலும் பிந்தைய நிலைக்கு மேலும் எளிமை (பர நிலையை விட வ்யூஹ நிலைக்கு எளிமை அதிகம், வ்யூஹம் என்பதில் உள்ள எளிமையை விட விபவ நிலையில் எளிமை அதிகம் என்றபடி) அதிகம் என்று தானே அருளிச்செய்தார். இதனால் இறுதியாக உள்ள அர்ச்சை என்பதே ஸௌலப்யம் மிகவும் அதிகமாக வெளிப்படும் நிலை என்பதாகிறது.