Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 37)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ப்ரபத்திக்கபேக்ஷிதங்களான ஸௌலப்யாதிகள் இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாசிப்பதிங்கே.

ஆனால், “வாஸுதேவோஸி பூர்ண:” என்கிற பரத்வத்திற் காட்டில் இங்குத்தைக் கேற்ற மென்னென்ன வருளிச்செய்கிறார் (ப்ரபத்திக்கு) என்று தொடங்கி.

வாஸுதேவோஸி பூர்ண: - வாசுதேவனான நீ எங்கும் வ்யாபித்துள்ளாய் - என்று கூறும் பரத்வத்தைக் காட்டிலும் இங்கு உணர்த்தப்பட்ட மேன்மை என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– (ப்ரபத்திக் கபேக்ஷிதங்களான) என்றது - உபாயமாகப் பற்றுமிடத்தில் வேண்டுமவையான வென்றபடி. (ஸௌலப்யாதிகளாவன) – கண்டு பற்றுகைக்குறுப்பான ஸௌலப்யமும், மேன்மை கண்டகலாமைக் குறுப்பான ஸௌசீல்யமும், கார்யஞ் செய்யுமென்று விச்வஸிக்கைக்குறுப்பான ஸ்வாமித்வமும், குற்றங்கண்டு வெருவாமைக் குறுப்பான வாத்ஸல்யமும். ”நிகரில் புகழாய்” இத்யாதியாலே இந்நாலு குணத்தையுமிறே ஆழ்வாரருளிச்செய்தது. (இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாசிப்பதிங்கே) என்றது - பரத்வத்தில் இக்குணங்களெல்லாமுண்டாயிருக்கச்செய்தே, பரமஸாம்யாபந்நர்க்கு முகங் கொடுத்திருக்கிற விடமாகையாலே பகல்விளக்குப்போல் ப்ரகாசமற்றிருக்கும்; அர்ச்சாவ தாரமான விடத்தில் தண்மைக் கெல்லைநிலமான ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கையாலே, அந்தகாரத்தில் தீபம்போலே அத்யுஜ்வலமாய்த் தோற்றுமென்றபடி. விஷயமுள்ள விடத்தேயிறே குணங்கள் ப்ரகாசிப்பது; அங்குள்ளாரும் சீலாதி குணாநுபவம் பண்ணுகைக்கு வருவதிங்கேயிறே. ஸௌலப்யம் முன்னாக வருளிச்செய்தது - கண்டுபற்றுகைக்குறுப்பான ஸௌலப்யமே பரபத்திக்கு ப்ரதாநா பேக்ஷிதமென்று தோற்றுகைக்காக.

– ”ப்ரபத்திக் கபேக்ஷிதங்களான” என்பதன் மூலம் – உபாயமாகப் பற்றும் ஒரு விஷயத்தில் இன்றியமையாமல் இருக்க வேண்டியவை – என்பதைக் கூறினார். “ஸௌலப்யாதிகளாவன” என்பதன் மூலம் – கண்ணால் கண்டும் மற்ற உறுப்புக்களால் உணர்ந்தும் பற்றுவதற்குச் சான்றாக உள்ள ஸௌலப்யம், அவனது மேன்மையைக் கண்டு நாம் விலகிச் செல்வதைக் தடுக்கவல்ல சௌசீல்யம், நமது செயல்களை இவன் பார்த்துக் கொள்வான் என்று நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தவல்ல ஸ்வாமித்வம், நமது குற்றங்களைக் கண்டு இவன் நன்மை வெறுக்காமல் இருப்பதற்கு அவனிடம் உள்ள வாத்ஸல்யம் – ஆகிய பலவும் உணர்த்தப்பட்டது. இந்த நான்கையும் நம்மாழ்வார் திருவாய்மொழியில் (6-10-10) – நிகரில் புகழாய் – என்று அருளிச்செய்தார். “இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாசிப்பதிங்கே” என்பதன் மூலம் – பரத்வத்தில் இந்த அனைத்து குணங்களும் இருக்கவே செய்கிறது. ஆயினும் அனைத்து விதங்களிலும் தன்னைப் போன்றே உள்ள நித்யசூரிகளால் மட்டுமே காண்பதற்கு ஏற்றபடி உள்ள பரவாஸுதேவ நிலை என்பது, பகலில் ஏற்றப்பட்ட விளக்கு போன்று ப்ரகாசம் இல்லாமலேயே இருக்கும். ஆனால் அர்ச்சாவதாரத்தில், தாழ்வுக்கு இடமாக உள்ள ஸம்ஸாரத்தில் இருக்கின்ற மனிதர்களுக்குத் தன்னை காண்பித்தபடி உள்ளதால், ஆழ்ந்த இருளில் ஏற்றப்பட்ட விளக்கு போன்று, மிகுந்த ஒளியாக அர்ச்சை ப்ரகாசிக்கிறது – என்று உணர்த்தினார். பரம்பதத்தில் உள்ளவர்கள் கூட இவனது சீலம் முதலான குணங்களை அனுபவிப்பதற்காக இங்கு இவன் அர்ச்சையாக உள்ள இடம் தேடி வருவதாக அல்லவோ அர்ச்சையின் தன்மை உள்ளது? ஸௌலப்யம் என்பதை ஏன் முதலில் அருளிச்செய்தார்? இவனை நன்கு உணர்ந்து, பற்றிக் கொள்வதற்கு ஏற்றபடி உள்ள ஸௌலப்யம் என்பதே ப்ரபத்திக்கு முதலில் தேவையானது என்பதை உணர்த்தவே ஆகும்.