Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 36)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

“பூர்ணம்” என்கையாலே யெல்லா குணங்களும் புஷ்கலங்கள்.

இப்படியிவ்வாழ்வார்கள் ப்ரபத்தி பண்ணுமிடங்களில் பரத்வாதிகளெல்லாமிருக்க அர்ச்சாவதாரத்திலே பண்ணுகைக்கடி – இதின் குணபூர்த்தியிறே; அந்த குணபூர்த்தி தன்னை ஸப்ரமாணமாக வருளிச் செய்கிறார் மேல் (பூர்ணம்) என்று தொடங்கி.

பல நிலைகளிலும் எம்பெருமான் உள்ளபோது ஆழ்வார்கள் ஏன் அர்ச்சை நிலையில் மட்டுமே ப்ரபத்தி செய்தனர் என்ற கேள்வி எழலாம். இதன் காரணம் அர்ச்சையில் குணங்கள் பூர்ணமாக உள்ளதால் ஆகும். இப்படியாக அர்ச்சையில் குணங்கள் பூர்ணமாக உள்ளதைத் தகுந்த ப்ரமாணங்கள் மூலம் அருளிச்செய்கிறார்.

(பூர்ணமென்கையாலே) என்றது பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் என்று ச்ருதி சொல்லுகையாலேயென்றபடி. (எல்லா குணங்களும் புஷ்கலங்கள்) என்றது ஆச்ரயண ஸௌகர்யாபாதகங்களான குணங்களோடு கார்யாபாதகங்களான குணங்களோடு வாசியற ஸகல கல்யாண குணங்களுமிவ் விஷயத்திலே ஸம்பூர்ணமென்றபடி.

– “பூர்ணம் என்கையாலே” என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது என்ன? கட உபநிஷத் – பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் - காப்பதை இயல்பாக உடையதும், அடையத்தக்கதாக உள்ளதும் ஆகிய அர்ச்சாவதாரத்தில் அனைத்தும் பூர்ணமாக உள்ளன – என்று ச்ருதி உணர்த்துவதை இவரும் அருளிச்செய்கிறார். “எல்லா குணங்களும் புஷ்கலங்கள்” என்பதன் மூலம் உபாயமாகப் பற்றும்போது எளிமையை உணர்த்தவல்ல குணங்களுடன் (வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம், ஸௌலப்யம்), அடியார்களின் செயல்களை நிறைவேற்றத்தக்க குணங்களும் (ஞானம், சக்தி, பூர்த்தி) வேற்றுமை இன்றி அனைத்து திருக்கல்யாண குணங்களாக இந்த அர்ச்சையில் கலந்து, குறைவற்று உள்ளது - என்பதை உணர்த்தினார்.