Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 35)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ஆழ்வார்கள் பலவிடங்களிலும் ப்ரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே.

இக்குண பூர்த்தியுள்ள அர்ச்சாவதாரமே ப்ரபத்திக்கடைத்த விஷய மென்னுமத்தை, ப்ரபந்நஜந கூடஸ்தருடைய அநுஷ்டாநத்தாலும் ப்ரகாசிப்பிக்கிறார் மேல் (ஆழ்வார்கள்) என்று தொடங்கி.

– இப்படியாகக் குணங்கள் பூர்ணமாக நிறைந்துள்ள அர்ச்சை என்பதே ப்ரபத்திக்கு ஏற்ற விஷயம் என்பதை ஸ்வாமி நம்மாழ்வாரின் அநுஷ்டானம் மூலம் அருளிச்செய்கிறார்.

மயர்வறமதிநலமருளிப் பெறுகையாலே பரத்வாதிகளையெல்லாம் கரதலாமலகமாகக் கண்டிருக்கிறவர்களிறே ஆழ்வார்கள். இப்படியிருக்கிறவர்கள் ப்ராப்யத்வராதிசயத்தாலே பலகாலும் ப்ரபத்தி பண்ணுகிறவளவில் பலவிடங்களிலும் அர்ச்சாவதாரத்திலேயிறே ப்ரபத்தி பண்ணிற்று. ஸ்தலாந்தரத்தில் க்வாசித் கமித்தனையிறே. எங்ஙனேயென்னில்? ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவரான நம்மாழ்வார் “ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”, “கழல்களவையே சரணாகக் கொண்ட”, “நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்”, ”உன்னடிக் கீழமர்ந்து புகுந்தேன்” என்று இப்படி பலவிடங்களிலும் ப்ரபத்தி பண்ணிற்று அர்ச்சாவதாரத்திலேயிறே; பிறந்தவாறு ஒன்றிலுமிறே அவதாரத்திலே சரணம்புக்கது. திருமங்கையாழ்வாரும், “வந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்”, ”விரையார் திருவேங்கடவா நாயேன் வந்தடைந்தேன்”, ”காவளம்பாடி மேய கண்ணனே களைகணீயே”, “ஆழிவண்ண! நின்னடியிணையடைந்தேனணி பொழில் திருவரங்கத் தம்மானே” என்று இப்படி அர்ச்சாவதாரத்திலேயிறே பலவிடங்களிலும் ப்ரபத்தி பண்ணிற்று. மற்றையாழ்வார்களுக்குமிப்படி தத்தத் ப்ரபந்தங்களிலே கண்டு கொள்வது (ப்ரபத்தி பண்ணிற்றும்) என்கிற விந்த ச சப்தத்தாலே (பூர்த்தியுள்ளதும்) என்று கீழ்ச் சொன்னத்தை ஸமுச்சயிக்கிறது.

– மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் என்பதால் ஆழ்வார்கள் அர்ச்சை உள்ளிட்ட ஐந்து நிலைகள் பற்றிய அனைத்தையும் பூர்ணமாக உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறிந்தவர்கள் ஆவர். இப்படியாக உள்ள ஆழ்வார்கள் தங்களின் பாசுரங்கள் மூலம் பல இடங்களிலும் ப்ரபத்தி குறித்து முழங்குகின்றபோது, பல இடங்களிலும் அர்ச்சையிடமே ப்ரபத்தி செய்தனர். அர்ச்சை நீங்கலாக உள்ள மற்ற நான்கு நிலைகளிலும் ப்ரபத்தி செய்தது ஒரு சில இடங்களில் மட்டுமே ஆகும். எப்படி இதனைக் கூற முடிந்தது? ஆழ்வார்களின் தலைவராக உள்ள ஸ்வாமி நம்மாழ்வார் கீழே உள்ள பல பாசுரங்கள் மூலம் அர்ச்சையைச் சரணம் அடைந்தார்: திருவாய்மொழி (5-7-10) – ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் திருவாய்மொழி (5-8-11) – கழல்களவையே சரணாகக் கொண்ட திருவாய்மொழி (5-9-11) – நம்பெருமானடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் திருவாய்மொழி (6-10-10) – உன்னடிக் கீழமர்ந்து புகுந்தேன் ஆயினும் திருவாய்மொழி (5-10-1) - பிறந்தவாறும் – என்ற ஒரு பாசுரம் மூலம் மட்டுமே அர்ச்சை அல்லாத நிலையில் சரணம் புகுந்தார். இது போன்று திருமங்கையாழ்வாரும் கீழே உள்ள பல இடங்களில் அர்ச்சையைச் சரணம் புகுகிறார்: பெரிய திருமொழி (1-6-4) – வந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய் பெரிய திருமொழி (1-9-1)- விரையார் திருவேங்கடவா நாயேன் வந்தடைந்தேன் பெரிய திருமொழி (4-6-1) - காவளம்பாடி மேய கண்ணனே களைகணீயே பெரிய திருமொழி (5-8-1) - ஆழிவண்ண! நின்னடியிணையடைந்தேனணி பொழில் திருவரங்கத்தம்மானே இது போன்று மற்ற ஆழ்வார்கள் ப்ரபத்தி செய்ததை அவரவர்களின் ப்ரபந்தத்தில் காணலாம். “ப்ரபத்தி பண்ணிற்றும்” என்பதன் முடிவில் உள்ள உம்மைத் தொகை, மேலே கூறப்பட்ட “பூர்த்தி உள்ளதும்” என்பதுடன் இணைகிறது.