Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 34)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

விஷயநியமமாவது குணபூர்த்தியுள்ளவிடமே விஷயமாகை; பூர்த்தியுள்ளதும் அர்ச்சாவதாரத்திலே.

ஆக ப்ரபத்திக்கு தேசகாலாதி நியமாபேக்ஷையில்லையென்ற ப்ரதிஜ்ஞையை யுபபாதித்தார் கீழ்; (விஷயநியமமேயுள்ளது) என்ற ப்ரதிஜ்ஞையை உபபாதிக்கிறார் மேல் (விஷய நியமமாவது) என்று தொடங்கி.

– இதுவரை ப்ரபத்திக்கு தேசம், காலம் போன்ற நியமங்கள் இல்லை என்று தான் எடுத்த விஷயத்தை உறுதிபட விளக்கினார். இனி “விஷய நியமம் மட்டுமே உள்ளது” என்பதை அருளிச்செய்கிறார்.

(குணபூர்த்தியுள்ளவிடமே விஷயமாகை) என்றது - பரத்வாதிக ளைந்திலும் வைத்துக்கொண்டு ஸௌலப்யாதி குணபூர்த்தியுள்ளவிடமே விஷயமாகை யென்றபடி. அந்த குணபூர்த்திதானுள்ளதெங்கேயென்ன. (பூர்த்தியுள்ளதுமர்ச்சாவ தாரத்திலே) என்கிறார். அர்ச்சாவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் ததா உக்தா குணா நசக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி என்று ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனானதானே சொல்லப் புக்காலும் சொல்லித் தலைக்கட்ட வரிதாம்படியிறே அர்ச்சாவதார குணபூர்த்தியிருப்பது.

– ”குணபூர்த்தியுள்ளவிடமே விஷயமாகை” என்றால் பரத்வம் உள்ளிட்ட ஐந்து நிலைகளிலும் (பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை) ஸௌலப்யம் முதலான குணங்கள் பூர்ணமாக உள்ளது என்று பொருள். இப்படிப்பட்ட குணங்கள் பூர்ணமாக உள்ளது அர்ச்சாவதாரத்தில் என்கிறார். பாத்மஸம்ஹிதை – அர்ச்சாவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் ததா உக்தா குணா நசக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி – இப்படியாக அர்ச்சாவதாரத்தின் குணங்கள் என்னால் சுருக்கமாகக் கூறப்பட்டன; நூறு ஆண்டுகள் இவ்விதம் அர்ச்சையின் குணங்களை உரைத்தாலும் என்னால் கூறி முடிக்க இயலாது – என்று ஸர்வேச்வரனே கூறியது காண்க. ஆகவே அனைத்தும் அறிந்த எம்பெருமான் முயற்சித்தாலும் அவனால் கூட அர்ச்சையின் குணங்களை முமுமையாக உரைக்க இயலாது.