Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 31)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

இவ்விடத்திலே வேல்வெட்டிப்பிள்ளைக்குப் பிள்ளை அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.

இவ்வர்த்த விஷயமாக ஆப்தவசநத்தை ஸ்மரிப்பிக்கிறார் மேல் ”இவ்விடத்திலே” என்று தொடங்கி.

– இங்கு உரைக்கப்பட்ட விஷயத்தினை நன்மையை விரும்பும் நம் முன்னோர்கள் கூறியதன் மூலமாக மேலும் விளக்குகிறார்.

– அதாவது, வேல்வெட்டிப்பிள்ளை, ”பெருமாள் கடலை சரணம் புகுகிறவிடத்தில் ப்ராங்முகத்வாதி நியமோபேதராய் சரணம் புகுருகையாலே, இதரோ பாயங்களோபாதி ப்ரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டியிருக்கிறதோ?” என்று நம்பிள்ளையைக் கேட்க; “பெருமாள் பக்கல் கண்ட நியமம் இவ்வுபாயத்துக்குடன் வந்தியா யிருப்பதொன்றன்று, பெருமாள் தமக்கு ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி என்றுபதேசித்தான் ஸ்ரீவிபீஷணாழ்வானிறே, அவன்றான் பெருமாளை சரணம் புகுகிறவிடத்தில் கடலிலேயொரு முழுக்கிட்டு வந்தானென்றில்லையே; இத்தால் சொல்லிற்றாய்த்து - பெருமாள் இக்ஷ்வாகு வம்ச்யராய் ஆசார ப்ரதாநராயிருக்கையாலே தம்முடைய நியமங்களோடே சரணம் புக்கார், இவன் ராக்ஷஸஜாதீயனாகையாலே நின்ற நிலையிலே சரணம் புக்கான், ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை ஸம்பாதிக்க வேண்டா, அயோக்யனுக்கு யோக்யதை ஸம்பாதிக்க வேண்டா, நின்ற நின்ற நிலைகளிலே யதிகாரிகளா மித்தனை யென்னுமது” என்றருளிச் செய்த வார்த்தை.

நம்பிள்ளையின் சீடரான வேல்வேட்டிப்பிள்ளை நம்பிள்ளையிடம், ”இராமன் ஸமுத்திர அரசனைச் சரணம் புகுந்தபோது கிழக்கு நோக்கி அமர்தல் உள்ளிட்ட முறைகளுடன் சரணம் புகுந்தார். ஆகவே பக்தி போன்ற உபாயங்களுக்கு உள்ளதைப் போன்று ப்ரபத்திக்கும் சில விதிமுறைகள் உள்ளனவோ?”, என்று கேட்டார். இதற்கு நம்பிள்ளை பின்வருமாறு பதில் உரைத்தார். இராமனிடம் கண்ட இந்தச் செயலானது இந்த உபாயத்திற்கு அங்கமாக உள்ளதால் அல்ல , ப்ரபத்தியைச் செய்தவரின் இயல்பால் ஆகும். இராமாயணத்தில் (யுத்தகாண்டம்: 19-31) – ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி – அரசனாகிய இராகவன் கடலைச் சரணம் அடைய ஏற்றவரே – என்று விபீஷணன் உபதேசித்தான் அல்லவோ? ஆனால் அவன் இராமனைச் சரணம் அடைந்தபோது அந்தக் கடலில் ஒரு முழுக்கு போட்டு நீராடி வந்தான் என்று கூறப்படவில்லை அல்லவோ? இராமன் இக்ஷ்வாகு வம்சம் என்பதால், தனது குல மரபுகளின்படி அவற்றை முக்கியமாகக் கொள்பவர் என்பதால், தன்னுடைய முறைகளுக்கு ஏற்பச் சரணம் அடைந்தார். ஆனால் விபீஷணன் அரக்க வழியில் வந்தவன் என்பதால், தான் உள்ள நிலையில் அப்படியே சரணம் அடைந்தான். ஆகவே தகுதி உள்ளவனுக்குத் தகுதி இன்மையைத் தேடுதலும், தகுதி இல்லாதவனுக்குத் தகுதியைத் தேடுதலும் அவசியம் இல்லை. அவரவர்கள் உள்ள நிலையிலேயே ப்ரபத்திக்குத் தகுதியானவர்கள் ஆவர்.