Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 30)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
ஆகையால் சுத்தயசுத்திகளிரண்டும் தேடவேண்டா; இருந்தபடியே அதிகாரியா மித்தனை.
இத்தால் பலித்ததைச் சொல்லா நின்று கொண்டு இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் ”ஆகையால்” என்று தொடங்கி.
மேலே கூறப்பட்டவற்றால் வெளிப்படும் பொருளை உணர்த்தும்படியாக இங்கு முடிக்கிறார்.
– ”ஆகையால்” என்றது, அநுஷ்டாந தசையிலும் ச்ரவண தசையிலும் இவர் களிருவருமிப்படி செய்கையாலென்றபடி. ”சுத்த்யசுத்திகளிரண்டுந் தேடவேண்டா” வென்றது - ப்ரபத்தியிலந்வயிக்குமளவில் அசுத்தனாயிருக்குமவனுக்கு சுத்தி ஸம்பாதிக்க வேண்டா, சுத்தனாயிருக்கு மவனுக்கு அசுத்தி ஸம்பாதிக்க வேண்டாவென்றபடி. அசுத்தி தேட வேண்டாவென்றது – கீழ்ச்சொன்னவர்களிருவரும் அசுத்தரான தசையில் ப்ரபத்தியிலந்வயித்தமை சொல்லுகையாலே அசுத்திதானிதுக்கு வேணுமோவென்று சங்கியாமைக்காக. ”இருந்தபடியே யதிகாரி யாமித்தனை” என்றது, ப்ரபதந காலத்தில் அசுத்தனாயாதல் சுத்தனாயாதல் யாதொருபடியிருந்தான், இருந்ததொரு ப்ரகாரத்திலே யிதுக்கதிகாரி யாமித்தனை யென்றபடி. த்ரௌபதியும் அர்ஜுநனும் ப்ரபத்த்யநுஷ்ட்டாந தச்ச்ரவண தசைகளில் ததங்கமாக சுத்தி ஸம்பாதியாதவோபாதி அசுத்தியும் ஸம்பாதித்துக் கொண்டமையில்லையிறே, இருந்தபடியே யதிகாரிகளான வித்தனையிறே.
“ஆகையால்” என்பதன் மூலம் சரணாகதியைக் கைக்கொள்ளும் நிலை (திரௌபதி), சரணாகதியைக் கேட்டும் நிலை (அர்ஜுனன்) ஆகிய இரண்டிலும் இவர்கள் இவ்விதம் இருந்த நிலை என்பதை உணர்த்துகிறார். “சுத்த்யசுத்திகளிரண்டுந் தேடவேண்டா” என்பதன் மூலம் ப்ரபத்தியைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பாக ஒருவன் தூய்மையுடன் இல்லை என்றாலும், அந்தத் தூய்மையை அவன் தேட முயற்சிக்க அவசியம் இல்லை என்பதும், தூய்மையாக உள்ள ஒருவன் தூய்மையற்ற நிலையைத் தேடுதல் கூடாது என்பதும் உணர்த்தப்பட்டது. “அசுத்தி தேட வேண்டா” என்பதன் முலம் உணர்த்தப்படுவது என்னவென்றால் – மேலே கூறப்பட்ட இருவரும் ப்ரபத்தியைக் கைக்கொண்டபோது தூய்மை இல்லாதவர்களாகவே இருந்த நிலை கூறப்பட்டது. ஆக ப்ரபத்தியைக் கைக்கொள்பவர்கள் இவர்கள் போன்று தூய்மையற்ற நிலையில்தான் இருத்தல் வேண்டுமோ என்ற சந்தேகம் ஏற்ப்படலாம். இந்தச் சந்தேகம், இதன் மூலம் விலக்கப்படுகிறது. ”இருந்தபடியே யதிகாரி யாமித்தனை” என்பதன் மூலம் – ப்ரபத்தி செய்யும்போது தூய்மையின்றி இருத்தல், தூய்மையுடன் இருத்தல் என்பதன் ஏதேனும் ஒரு நிலையில் ஒருவன் இருக்கக்கூடும்; அந்த நிலையில் அவன் ப்ரபத்திக்குத் தகுதியானவனே என்பதை உணர்த்துகிறார். திரௌபதியுடன் அர்ஜுனனும் ப்ரபத்தியைச் செய்தபோதும், கேட்டபோதும் அந்த ப்ரபத்திக்கு அங்கமாக தூய்மையைத் தேடவில்லை. ஆயினும் அந்த நேரத்தில் அவர்கள் அசுத்தத்தையும் தேடவில்லை அல்லவோ? ஆக உள்ளது உள்ளபடியே இருந்த நிலையில் அவர்கள் தகுதி படைத்தவர்கள் ஆயினர்.