Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 29)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

த்ரௌபதி ஸ்நாதையாயன்றே ப்ரபத்தி பண்ணிற்று; அர்ஜுனன் நீசர் நடுவேயிறே இவ்வர்த்தங்கேட்டது.

– அதெங்கே கண்டதென்ன; பூர்வ ப்ரக்ருத விஷயங்களிலே தர்சிப்பிக்கிறார்.

மேலே உள்ள சூர்ணையில் “காணலாம்” என்பதை மேலும் விவரிக்கும் விதமாக, எங்கு காணலாம் என்பதை முன்னே கூறிய நிகழ்வுகள் மூலம் விளக்குகிறார்.

– ”த்ரௌபதி” இத்யாதி வாக்ய த்வயத்தாலே. “ஸ்நாதையாயன்றே ப்ரபத்தி பண்ணிற்று” என்றது துச்சாஸநாக்ருஷ்டையாய் ஸபையில் வருகிறபோது, ரஜஸ் வலைக வஸ்த்ராஹம் நது மாம் நேது மர்ஹஸி குரூணாஞ்ச புரஸ்ஸ்தாதும் ஸபாயாம் நாஹ முத்ஸஹே என்னும்படி அசுத்தையாயிருக்கிறவள் ஸ்நாநம் பண்ணியன்றே ப்ரபத்தி பண்ணிற்றென்றபடி; இத்தால், ப்ரபத்தி பண்ணுவார் ப்ரயதராய்ப் பண்ண வேணுமென்னும் நியதியில்லாமை காட்டப்பட்டது. “நீசர் நடுவேயிறேயிவ் வர்த்தங் கேட்டது” என்றவிடத்தில், நீசரென்கிறது நெடுந்தகையை நினையாதார் நீசர் என்றாழ்வாரருளிச் செய்த சௌரிநிந்தா விமுகரான ஹேயரை. விஷ்ணு பக்தி விஹிநஸ்து யதிச்ச ச்வபசாதம:, விப்ராத் த்விஷட்குணயுதா தரவிந்தநாப பாதாரவிந்த விமுகாச் ச்வபசம் வரிஷ்டம் என்று பகவத் விமுகரை ச்வபசாதமராகச் சொல்லிற்றிறே; அதுக்கு மேல், சரணாகதையைப் பரிபவித்தும் சரணாகதரான பாண்டவர்கள் திறத்திலே தீங்குகளைச் செய்தும் போருகையாலே, ஸத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் என்கிற கர்மசண்டாளரிறே கை கலந்து நிற்கிறது. ”நீசர்நடுவே” என்கையாலே நீசஸ்ப்ருஷ்டியா லிவனுக்குண்டான அசுத்தியும் நீசஸகாசத்திலே என்னுமிடமும் தோற்றுகிறது. இத்தால் – ப்ரபத்தி ச்ரவணம் பண்ணும்போது நீசமத்யத்திலாகாதென்னும் நியதியில்லாமை காட்டப்பட்டது.

– இந்த இரண்டு வாக்கியங்கள் மூலம் கூறப்பட்டது என்ன? “ஸ்நாதையாயன்றே ப்ரபத்தி பண்ணிற்று” என்பதன் மூலம் எதனை உணர்த்துகிறார்? துச்சாதனனால் இழுத்துக் கொண்டு சபைக்கு வரவழைக்கப்பட்டபோது மஹாபாரதம் – ரஜஸ் வலைக வஸ்த்ராஹம் நது மாம் நேது மர்ஹஸி குரூணாஞ்ச புரஸ்ஸ்தாதும் ஸபாயாம் நாஹ முத்ஸஹே – நான் இப்போது மாதவிலக்கு ஏற்பட்டவளாகவும், ஓர் ஆடையை மட்டுமே உடுத்தியவளாகவும் இருக்கிறேன்; ஆகவே என்னைச் சபைக்கு அழைத்துச் செல்வது சரியல்ல; ஆசார்யர்கள் முன்பாகவும், சபையினர் முன்பாகவும் இந்தச் சூழ்நிலையில் நான் நிற்பதற்கு உடன்படவில்லை - என்றாள். ஆகவே அப்போது அவள் அசுத்தத்துடன் கூடியவளாகவே இருந்தாள். ஆக அவள் க்ருஷ்ணனிடம் ப்ரபத்தியைச் செய்தபோது நீராடிய பின்னர் செய்யவில்லை அல்லவோ? இதன் மூலம் ப்ரபத்தியைக் கைக்கொள்பவர்கள் தூயவர்களாக நின்று செய்யவேண்டும் என்ற நியமம் இல்லை என்பது உணர்த்தப்பட்டது. ”நீசர் நடுவேயிறேயிவ் வர்த்தங் கேட்டது” என்பதன் மூலம் எதனை உணர்த்தினார்? இங்கு நீசர் என்ற பதம் பெரியதிருமொழியில் (11-6-8) – நெடுந்தகையை நினையாதார் நீசர் – என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்தபடி, எம்பெருமானிடம் பக்தி இல்லாத தாழ்ந்தவர்களைக் குறிக்கும். விஷ்ணு பக்தி விஹிநஸ்து யதிச்ச ச்வபசாதம: – விஷ்ணுவிடம் பக்தி இல்லாத ஸந்யாஸி, அவனிடம் பக்தி உள்ள நீசனை விடத் தாழ்ந்தவன் – என்றும், ஸ்ரீமத்பாகவதம் – விப்ராத் த்விஷட்குணயுதா தரவிந்தநாப பாதாரவிந்த விமுகாச் ச்வபசம் வரிஷ்டம் – பன்னிரண்டு குணங்களுடன் கூடியவனும் திருநாபியில் தாமரை மலரை உடையவனும் ஆகிய எம்பெருமானின் திருவடிகளில் பக்தி இல்லாத அந்தணனை விட விஷ்ணுவின் அடியவனாக உள்ள சண்டாளன் உயர்ந்தவன் – என்றும் கூறப்பட்டது காண்க. இதன் மூலம் எம்பெருமானிடம் பக்தி அற்றவர்களைத் தாழ்ந்தவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று கூறியது காண்க. இதற்கு மேலாக சரணாகதி அடைந்தவளான திரௌபதியைத் துடிக்க வைத்தும், பாண்டவர்களுக்குப் பல தீமைகளைச் செய்தும் நின்றதால், ப்ரம்மாண்ட புராணம் – ஸத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் - எனது அடியார்களைத் தூற்றும் அந்தணன் சண்டாளன் ஆவான் – என்றபடி, சண்டாளர்களாக நின்ற கௌரவர்களுடன் சரிசமமாக அல்லவோ அர்ஜுனன் நின்றான்? “நீசர் நடுவே” என்பதன் மூலம் இவர்களுக்கு நடுவில் நின்றதால் இவனுக்கு உண்டான தூய்மை இன்மை என்பது வெளிப்படுகிறது. ஆக இதன் மூலம், ப்ரபத்தியைக் கேட்கும்போது நீசர்கள் நடுவில் நின்றால் ப்ரபத்தி கைகூடாது போன்ற நியமம் இல்லை என்பது உணர்த்தப்பட்டது.