Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 27)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

இவ்வர்த்தம் மந்த்ரரத்நத்தில் ப்ரதமபதத்திலே ஸுஸ்பஷ்டம்.

இதுதான் ப்ரபத்த்யநுஷ்டாந ரூபமான த்வயத்தில் ப்ரதமபதத்திலே காணலாமென்கிறார் (இவ்வர்த்தமென்று தொடங்கி).

மேலே கூறியதன் பொருளை ப்ரபத்தியின் அனுஷ்டானமாக உள்ள த்வய மந்த்ரத்தின் முதல் பதத்தில் காணமுடியும் என்று அருளிச்செய்கிறார்.

ஸகலோபநிஷத்ஸாரமாய் ஸர்வாதிகாரமாய் அவிளம்ப்ய பலப்ரதமாய் ஸர்வேச்வரனுக்கு அத்யந்தாபிமதமாயிருக்கையாலே ஸர்வமந்த்ராந்தர உத்க்ருஷ்ட தயா த்வயேந மந்த்ர ரத்நேந என்கிறபடியே, மந்த்ர ரத்நாக்க்யமாயிறே த்வயமிருப்பது; அந்த வைபவந் தோற்றுகைக்காக, த்வயமென்னாதே மந்த்ரரத்நம் என்கிறார்; அதில் ப்ரதம பதத்தில் மதுபர்த்தமான புருஷகாரோபாய நித்யயோகத்துக்கு ப்ரயோஜநம் –ஏதேனுமொரு தேசத்திலே ஏதேனுமொரு காலத்திலேயொரு ஸம்ஸாரி சேதநனுக்கு பகவத் ஸமாச்ரயண ருசி விளைந்தால், சஞ்சலம் ஹி மந:, நின்றவா நில்லா நெஞ்சு என்கிறபடியே சூறாவளிக் காற்றுப்போலே சுழன்று வருகிற நெஞ்சு தளமாக அங்குரித்து க்ஷணபங்குரையான ருசி தீருவதுக்கு முன்னே, ததுத்பத்திக்ஷணத்திலே யாச்ரயிக்கலா யிருக்கையிறே; ஆகையாலே ப்ரபத்தியினுடைய தேசகால நியமராஹித்யம் அந்த பதத்திலே நன்றாகத் தோற்றுமென்கிறார்.

– த்வயம் என்பது, அனைத்து உபநிஷத்துக்களின் சாரமாக உள்ளது, அனைவருக்கும் ஏற்கலாம்படி உள்ளது, மிகவும் விரைவாய் பலன் அளிக்கவல்லது, ஸர்வேச்வரனுக்கு மகிழ்ச்சி அளிக்கவல்லதாக உள்ளதால் அனைத்து மந்த்ரங்களிலும் மிகவும் உயர்ந்தது, த்வயேந மந்த்ர ரத்தேந – மந்த்ர ரத்னம் த்வயமே – என்று கூறுவதற்கு ஏற்ப இரத்தினம் போன்றது ஆகும். இத்தகைய சிறப்புகள் வெளிப்படும்படியாகவே இந்தச் சூர்ணையில் த்வயம் என்று கூறாமல் ”மந்த்ரரத்னம்” என்றார். இந்த மந்த்ரத்தின் முதல் பதமாக உள்ள ஸ்ரீமந் என்பதில் காணப்படும் “மதுப்” என்பதன் பொருள் என்னவென்றால், புருஷகாரமாக உள்ள பிராட்டியும் உபாயமாக உள்ள ஸர்வேச்வரனும் எப்போதும் நித்யயோகம் என்னும்படி என்றும் சேர்ந்து இருத்தல் என்பதாகும். இவ்விதம் உள்ளதன் பயன் என்ன? ஏதேனும் ஓர் இடத்தில், ஏதேனும் ஒரு காலத்தில், ஏதேனும் ஒரு ஸம்ஸாரிக்கு எம்பெருமானை அடையவேண்டும் என்ற ருசி ஏற்படலாம். கீதை - சஞ்சலம் ஹி மந: - மனம் சலனம் நிறைந்தது, பெரியதிருமொழி (1-1-4) – நின்றவா நில்லா நெஞ்சு – என்று கூறுவதற்கு ஏற்ப, நெஞ்சத்தில் தோன்றியவுடன் அழிவதாக அந்த ருசி உள்ளது. இந்த ருசியானது உடனேயே மறைவதற்கு முன்பாக, அந்த ருசி தோன்றியவுடனேயே எம்பெருமானைப் பற்றுவதற்கு, இந்த நித்யயோகச்சேர்த்தி பயன்படுவதாக உள்ளது. ஆகவே ப்ரபத்திக்கு இடம், காலம் போன்ற வரையறை இல்லை என்பதை த்வயத்தில் உள்ள அந்தப் பதம் உணர்த்துகிறது என்கிறார்.