Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 26)
இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்
”ஸ ஏஷ தேச: கால:” என்கையாலே இதுக்கு தேசகால நியமமில்லை.
ப்ரபக்திக்கிவையொன்றுமில்லை என்று கீழ்ப்பண்ணின ப்ரதிஜ்ஞையை உபபாதிக்கையிலே ப்ரவ்ருத்தராய், ப்ரதமம் தேசகால நியம ராஹித்யத்தை யுபபாதிக்கிறார் ஸ ஏஷ: என்று தொடங்கி.
ப்ரபத்திக்கு இவை ஏதும் இல்லை என்று மேலே அருளிச்செய்தார். அதனை மேலும் விளக்க எண்ணியவராக முதலில் தேசம், காலம் போன்ற விதிமுறைகள் இல்லை என்பதை அருளிச்செய்கிறார்.
பத்த வைராச்ச பாபாச்ச ராக்ஷஸேந்த்ராத் விபீஷண:, அதேசகாலே ஸம்ப்ராப்தஸ் ஸர்வதா சங்க்யதா மயம் என்று முன்பு ஸ்ரீஜாம்பவான் மஹாராஜர் பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்த பக்ஷத்தை தூஷிக்கிற திருவடி, அதேச காலே ஸம்ப்ராப்த இத்யயம் ஸவிபீஷண:, விவக்ஷாசாத்ர மேஸ்தீயம் தாந்நிபோத யதாமதி; ஸ ஏஷ கால தேச: காலச்ச பவதீஹ யதா ததா, புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி; தெளராத்ம்யம் ராவணே த்ருஷ்ட்வா விக்ரமஞ்ச ததா த்வயி யுக்தமாகமநம் தஸ்ய ஸத்ருசம் தஸ்ய புத்தித: என்று ராவணனாலே அவமாநிதனாய் ஸ்வநிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் என்று வந்த ஸ்ரீவிபீஷணாழ்வான், அதேசத்திலே அகாலத்திலே வந்தானென்று தேவரீருடைய மந்த்ரிகளாலே யாதொன்று சொல்லப்பட்டது. இந்த பக்ஷத்தில் விசேஷித்து எனக்கிந்த விவக்ஷையுண்டாகா நின்றது. அவன் வருகிறவளவில் யாதொரு தேசத்திலே யாதொரு காலத்திலே வந்தான், அவன் வரவுக்கு அந்த இதுவே தேசமும் அந்த இதுவே காலமுமாம் யாதொருபடி, அப்படிப்பட்ட விவக்ஷையை நானறிந்தவளவு விண்ணப்பஞ் செய்யக் கேட்டருள வேணும். எங்ஙனே யென்னில், தம: ப்ரக்ருதியாகையாலே பரஹிம்ஸையே யாத்ரையான ராவணனிற் காட்டில் ஸத்வோத்தரராகையாலே பரரக்ஷணம் யாத்ரையாயிருக்கிற தேவரீரை ப்ராப்யராக புத்திப் பண்ணி, அப்படியேயவனை விட்டுப் போராதொழிந்தால் அவனுடைய அக்ருத்யத்துக்கு ஸஹகாரியாய் அந்த ப்ராதிகூல்யத்தோடே முடிந்து போகையாகிற தோஷத்தையும், தார்மிகரான தேவரீருடனே கூடப்பெற்றால் தத் பலமாக தேவரீர் திருவடிகளில் கைங்கர்யத்தை லபித்து வாழுகையாகிற நன்மையையும் புத்தி பண்ணி, அப்படியே தேவரீர் திருவுள்ளத்திலே புண்படும்படி குற்றத்தைத் தீரக் கழியச் செய்து நிற்கிற ராவணன் தௌராத்ம்யத்தையும், துராத்மாக்களை அநாயாஸேந அழிக்கவல்ல தேவராண்பிள்ளைத்தனத்தையுங் கண்டால், விசேஷஜ்ஞனானவனுக்கு இவ்வரவு ப்ராப்தம், ந்யாயத்திலே ஸஞ்சரிக்குமவனுடைய புத்திக்குமிது ஸத்ருசம் என்றானிறே. ஆக இப்படி பாவசுத்தியையுடையனான ஸ்ரீவிபீஷணாழ்வான் சரணம் என்று வந்து தேசகாலங்களில் குறைப்பார்க்கக் கடவதல்ல, அவன் வந்துதுவே தேசமும் காலமும் என்று சரணாகதி தர்மஜ்ஞனான திருவடி நிர்ணயிக்கையாலே ப்ரபத்திக்கு தேசகால நியமமில்லையென்கை.
இராமாயணம் யுத்தகாண்டம் (17-57) – பத்த வைராச்ச பாபாச்ச ராக்ஷஸேந்த்ராத் விபீஷண:, அதேசகாலே ஸம்ப்ராப்தஸ் ஸர்வதா சங்க்யதா மயம் – மிகுந்த பாவங்கள் செய்தவனும், நம்மிடம் படைகொண்டவனும் ஆகிய இராவணனிடமிருந்து தகாத இடத்திலும், தகாத நேரத்திலும் விபீஷணன் வந்துள்ளான்; ஆகவே இவன் சந்தேகப்படக் கூடியவனாகவே உள்ளான் – என்று ஜாம்பவானும், சுக்ரீவனும் இராமனிடம் கூறினர். இதனை ஏற்க மறுத்த அனுமன் இராமாயணத்தில் (யுத்தகாண்டம் : 17-46) - அதேச காலே ஸம்ப்ராப்த இத்யயம் ஸவிபீஷண:, விவக்ஷாசாத்ர மேஸ்தீயம் தாந்நிபோத யதாமதி; ஸ ஏஷ கால தேச: காலச்ச பவதீஹ யதா ததா, புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி; தெளராத்ம்யம் ராவணே த்ருஷ்ட்வா விக்ரமஞ்ச ததா த்வயி யுக்தமாகமநம் தஸ்ய ஸத்ருசம் தஸ்ய புத்தித: – இந்த விபீஷணன் தகாத இடத்தில், தகாத காலத்தில் இங்கு வந்துள்ளான் என்பதைக் குறித்து நான் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்; எனது விருப்பத்தை நீ (இராமன்) அறிய வேண்டுகிறேன்; புருஷர்களில் தாழ்ந்தவனாகிய இராவணனைக் காட்டிலும் புருஷர்களில் உயர்ந்தவனாக உள்ள நீயே அடையத்தக்கவன் என்று விபீஷணன் அறிந்தான்; இராவணனிடம் இருந்தால் உண்டாகும் தோஷத்தையும், உன்னிடம் அடைக்கலம் அடைந்தால் ஏற்படும் மேன்மையையும் உணர்ந்தான்; இராவணனிடம் இருந்த தீமைகளையும், உன்னிடம் உள்ள ஆண்மையையும் பார்த்து வந்தான்; ஆகவே அவன் இங்கு வந்தது பொருத்தமானது, அவனுக்கு ஏற்றது - என்று கூறினான். அதாவது இராவணனால் துச்சமாக நடத்தப்பட்டவனாக, தனது தாழ்வு என்பதை முன்னிறுத்தியபடி அடைக்கலம் என்று விபீஷணன் வந்தான். இப்படி வந்தபோது இவன் தகாத இடத்தில், தகாத காலத்தில் வந்தான் என்று உன்னுடைய மந்த்ரிகளால் உரைக்கப்பட்டது. இந்தக் கருத்தில் எனக்கு விசேஷமான கருத்து சொல்வதற்கு விருப்பம் உண்டு. அவன் எந்த இடத்தில் வந்தான்; எந்த நேரத்தில் வந்தான் என்பதைக் குறித்து அவன் வருவதற்கு இதுவே சரியான இடம் என்றும், அவன் வருவதற்கு இதுவே சரியான காலம் என்றும் நான் உணர்ந்ததைக் கூற எனக்கு விருப்பம் உள்ளது (அதாவது விபீஷணன் வந்த இடமும், காலமும் எதுவாக இருந்தாலும் அதுவே சரியான இடமும், காலமும் ஆகும் என்று கருத்து). இதனை நான் அறிந்த அளவிற்குக் கூற, நீ (இராமன்) கேட்கவேண்டும். தமோ குணம் மிகுதியாக உள்ளதால் மற்றவர்களைத் துன்பத்தில் ஆழ்த்துவது என்பதையே தனது செயலாக உடைய இராவணனைக் காட்டிலும், ஸத்வ குணம் மிக்கவனாக நீ உள்ளதால் அனைவரையும் காப்பாற்றும் தன்மை கொண்ட உன்னை அடைவதே தகும் என்று விபீஷணன் உணர்ந்தான். இவ்விதம் செய்யாமல் அவன் இராவணனுடனேயே இருந்திருந்தால், அவனுடைய தீமைகளுக்குத் துணை போனவனாக, உன்னுடன் பகைமையுடன் மடிந்து போகக் கூடியவனாக இருக்கின்ற குற்றம் விபீஷணனுக்கு வந்திருக்கும். இந்தக் குற்றத்தையும், தர்மத்தை மட்டுமே செய்கின்ற உன்னுடன் இருந்தால் அதன் பலனாகிய உனது திருவடிகளின் கீழ் கைங்கர்யம் செய்தல் என்ற நன்மையையும் அவன் ஆராய்ந்தான். மேலும் உன்னுடைய மென்மையான திருவுள்ளத்தைப் புண்படுத்தும்படியாக பெருங்குற்றம் முழுவதுமாகச் செய்தபடி உள்ள இராவணனின் தீமை என்பதையும், தீயோர்களை அழிப்பதில் சற்றும் தயக்கம் காட்டாத உனது ஆண்மைத் தன்மை என்பதையும் நோக்கும்போது விபீஷணன் இங்கு வந்தது சரியானது ஆகும். இத்தகைய செயலானது நியாயத்தின் வழிநிற்பவர்களின் அறிவிற்கும் ஏற்றதாகவே இருக்கும் – இப்படியாகவே அனுமனின் கருத்து உள்ளது. ஆகவே தூய்மையான மனத்துடன் உள்ள விபீஷணன் சரணம் என வந்து நின்ற இடம் மற்றும் காலம் ஆகிய இரண்டிலும் குறை ஏதும் காண்பதற்கு இல்லை. அவன் வந்து சேர்ந்த இடமே சரணாகதிக்குச் சரியான இடம் என்றும், வந்த நேரமே சரியான நேரம் என்றும் சரணாகதியைப் பற்றி நன்கு அறிந்தவனாகிய அனுமன் முடிவு செய்ததால், ப்ரபத்திக்குக் காலம் மற்றும் இடம் என்பது போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என்றாகிறது.