Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 25)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

கர்மத்துக்கு புண்யக்ஷேத்ரம் வஸந்தாதிகாலம் சாஸ்த்ரோக்தங்களான தத்தத் ப்ரகாரங்கள் த்ரைவர்ணிகர் என்றிவையெல்லாம் வ்யவஸ்திதங்களாயிருக்கும்.

இதுக்கிவையொன்றுமில்லையாகில் பின்னையெதுக்குத்தான் இவையெல்லாமுள்ளதென்ன, அருளிச்செய்கிறார் (கர்மத்துக்கென்று தொடங்கி).

– இவை எதுவும் ப்ரபத்திக்கு இல்லை என்றால், வேறு எதற்குத்தான் இவை உண்டு என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

கர்மமாவது ஜ்யோதிஷ்டோமாதிகள். புண்ய க்ஷேத்ரங்களாவன சாஸ்த்ரங்களில் பாவநதயா அபிஹிதங்களான தேசங்கள். ”வஸந்தாதி” என்கிறவிடத்தில் ஆதிசப்தத்தாலே க்ரீஷ்ம சரச்சுக்ல க்ருஷ்ணபக்ஷ பூர்வாஹ்நாபராஹ்நாதி காலங்களைச் சொல்லுகிறது; வஸந்தே வஸந்தே ஜ்யோதிஷா யஜேத இத்யாதிகளாலே கால நியமம் சொல்லப்படா நின்றதிறே. சாஸ்த்ரோத்தங்களான தத்வத் ப்ரகாரங்களாவன சௌசாமசமந ஸ்நாந வ்ரத ஜபாதிரூபேண அவ்வவ கர்மங்களுக்கு அநுகுணமாக சாஸ்த்ர விஹிதங்களான அவ்வவ ப்ரகாரங்கள். (த்ரைவர்ணிகர்) என்றது உபநயந ஸம்ஸ்கார பூர்வகமாக வேதாதிகாரிகளானவர்களுக்கே வைதிக கர்மாதிகரமுள்ளதாகையாலே; இதுதான் க்ருஹமேதித்வ க்ருஷ்ண கேசித்வ வேத வேதாங்கயுக்த த்வாதிகளுக்கு முபலக்ஷணம். (வ்யவஸ்திதங்களாயிருக்கும்) என்றது நியதங்களாயிருக் கும்மென்றபடி.

கர்மம் என்பது ஜ்யோதிஷ்டோமம் போன்றவை ஆகும். புண்ய க்ஷேத்ரங்கள் எனறால் சாஸ்த்ரங்களில் தூய்மையான இடங்கள் என்று கூறப்பட்ட க்ஷேத்ரங்கள் ஆகும். சூர்ணையில் உள்ள “வஸந்தாதி” என்பதில் காணப்படும் “ஆதி” என்னும் பதமானது முதுவேனிற்காலம், கார்காலம், க்ருஷ்ணபக்ஷம், சுக்லபக்ஷம், காலை நேரம், மாலை நேரம் என்பதான காலங்களைக் கூறுகிறது. வஸந்தே வஸந்தே ஜ்யோதிஷா யஜேத – ஒவ்வொரு வஸந்த காலத்திலும் ஜ்யோதிஷ்டோமம் செய்யவேண்டும் - என்பதன் மூலம் காலத்திற்கான விதிமுறை கூறப்பட்டதைக் காண்க. “சாஸ்த்ரோத்தங்களான தத்வத் ப்ரகாரங்கள்” என்பதன் மூலம் ஆசமனம் போன்றவற்றைச் செய்தல், நீராடுதல், விரதம் மேற்கொள்ளுதல், ஜபம் இயற்றுதல் உள்ளிட்ட பலவற்றுடன் கூடியதான அந்தந்த கர்மங்களுக்குத் தேவையான அநுஷ்டானங்கள் என்று சாஸ்த்ரங்களில் கூறப்பட்டவை உணர்த்தப்பட்டது. “த்ரைவர்ணிகர்” என்பதன் மூலம் உபநயனம் முதலானவை உடைய வேத அதிகாரிகளுக்கு மட்டுமே வைதிக கர்மங்கள் இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது என உணர்த்தப்பட்டது. இந்த அதிகாரியின் லக்ஷணங்கள் எவை என்றால் இல்லறத்தில் உள்ளவர்களாக இருத்தல், கருமையான முடியுடன் கூடியவர்களாக இருத்தல், வேத வேதாந்தங்கள் அறிந்தவர்களாக இருத்தல் போன்ற பலவாகும். “வ்யவஸ்தி” என்பதன் மூலம் நியதங்களாக இருக்கும் என்பது கூறப்பட்டது.