Sri Vachana Bhushanam - இரண்டாம் ப்ரகரணம் – உபாயம் (சூர்ணை 23)

இரண்டாம் ப்ரகரணம் – உபாயம்

ப்ரபத்திக்கு தேசநியமமும் காலநியமமும் ப்ரகாரநியமும் அதிகாரிநியமமும் பலநியமமுமில்லை.

– கீழுக்தமான உபாயத்தினுடைய ஸ்வீகாரரூபையாய் (ப்ரபத்த்யுபதேசம் பண்ணிற்றும்) என்று ப்ராஸங்கிகமாக ப்ரஸ்துதையான ப்ரபத்தியினுடையபடியை விஸ்தரேணவருளிச்செய்கிறது மேல். அதில் ப்ரதமத்தில், அர்ஜுநனுக்கு ப்ரபத்த்யுபதேசம் பண்ணுகிறவளவில் யுத்தபூமியிலே ஒருகால் விசேஷம் பாராமல் ஸ்நாநாதிகளுமின்றிக்கே யிருக்க உபதேசிப்பானென்? இதுக்கு தேசாதி நியமங்களில்லையோ என்கிற சங்கையிலேயருளிச் செய்கிறார் (ப்ரபத்திக்கென்று தொடங்கி).

உபாயமாக உள்ள ஸர்வேச்வரனை உபாயமாகப் பற்றிக் கொள்ளுதல் என்னும் பொருளை உணர்த்தும்விதமாக “ப்ரபத்தி உபதேசம்“ என்று சுருக்கமாக அருளிச் செய்தார். இனி ப்ரபத்தியைப் பற்றியும், அதன் நிலைகள் பற்றியும் விரிவாக அருளிச் செய்கிறார். முதலில் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது, அந்தப் போர்க்களத்தில் நேரம் காலம் பார்க்கவிலை, நீராடுதல் முதலான செயல்களைப் பார்க்கவில்லை, ஆயினும் உபதேசம் செய்தது ஏன்? அப்படியெனில், இந்த ப்ரபத்தி என்பதற்கு இன்ன தேசம், இன்ன காலம் போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லையா என்ற சந்தேகம் எழலாம். இதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

– ப்ரபத்தியாவது பகவச்சரண வரணம். தேசநியமமாவது புண்ய தேசங்களிலே செய்யவேணும், அந்யதேசங்களிலாகாதென்னுமது. காலநியமமாவது வஸந்தாதி காலங்களிலே செய்யவேணும், அந்யகாலங்களிலாகாதென்னுமது. ப்ரகாரநியமமாவது ஸ்நாந பாதப்ரக்ஷாளநாதி பூர்வகமாகச் செய்யவேணும், ப்ரகாராந்தரத்தாலே செய்யவொண்ணாதென்னுமது. அதிகாரி நியமமாவது த்ரை வர்ணிகராக வேணும், அத்ரைவர்ணிகராக வொண்ணாதென்னுமது. பலநியமமாவது த்ருஷ்டாத்ருஷ்ட பலங்களிலின்ன பலத்துக்கிது ஸாதநம், அந்யபலத்துக்கு ஸாதநமன் றென்னுமது. தேசகால ஸாத்குண்ய வைகுண்யங்களடியாக வரும் அதிசயாநதிசயங்களை யுடைத்தாவ தொன்றல்லாமையாலும், தீர்த்தத்திலே யவகா ஹிக்குமளவில் சுத்தாசுத்த விபாகமற அவகாஹிக்கலா யிருக்குமாப்போலே ஸ்வயமேவ பவித்ரமாய சுத்தா சுத்த விபாகமற தன்னோடந்வயிக்கலாம்படி யிருக்கையாலும் வர்ணாத்யநுரூபமாயிருப்ப தொன்றன்றிக்கே ஸ்வரூபாநுரூபமாயிருப்பதொன்றா கையாலும், சேதநருடைய ருச்யநு குணமான பல விசேஷங்களுக்கு ஸாதநமாவதொன்றாலும், இந்நியமங்களொன்று மிதுக்கில்லையென்கிறது. ந ஜாதி பேதம் நகுலம் நலிங்கம் நகுணக்ரியா:, ந தேச காலௌ நாவஸ்தாம் யோகோ ஹ்யயமபேக்ஷதே; ப்ரஹ்ம க்ஷத்ர விசச் சூத்ரா: ஸ்த்ரியச்சாந்தர ஜாதய: ஸர்வ ஏவ ப்ரபத்யேரந் ஸர்வ தாதாரமச்யுதம் என்று ப்ராபத்திக்கு தேசகால ப்ரகாராதிகாரி நியமாபாவம் பாரத்வாஜ ஸம்ஹிதையிலும் ப்ரபத்தே: க்வசிதப்யேவம் பராபேஷா ந வித்யதே, ஸாஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாம பலப்ரதா என்று பல நியமாபாவம் ஸநத்குமார ஸம்ஹிதையிலும் சொல்லப்பட்டதிறே.

ப்ரபத்தி என்பது எம்பெருமானையே உபாயம் என்று பற்றுதல் ஆகும். தேச நியமம் என்றால் இந்த ப்ரபத்தியைப் புண்ணியதேசங்களில் மட்டுமே செய்யவேண்டும், மற்ற இடங்களில் செய்யக்கூடாது என்பதாகும். காலநியமம் என்றால் இந்த ப்ரபத்தியை வஸந்த காலத்தில் மட்டுமே செய்யவேண்டும், மற்ற காலங்களில் செய்யக்கூடாது என்பதாகும். ப்ரகார நியமம் என்றால் ப்ரபத்தியை நீராடுதல், கால் கழுவுதல் போன்றவற்றைச் செய்த பின்னரே செய்யவேண்டும், அதற்கு முன்பாக செய்தல் கூடாது என்பதாகும். அதிகாரி நியமம் என்றால் முதல் மூன்று வர்ணத்தினராக மட்டுமே இருக்கவேண்டும், மற்ற வர்ணத்தினராக இருத்தல் கூடாது என்பதாகும். பல நியமம் என்றால் இவ்வுலகப் பலன் மற்றும் அவ்வுலகப் பலன்களில், இன்ன பலத்திற்கு இது சாதனமாக உள்ளது, மற்ற தாழ்ந்த பலன்களுக்கு இது சாதனம் அல்ல என்பதாகும். தேசங்களின் உயர்வு மற்றும் தாழ்வுகளின் அடிப்படையிலும், காலம் என்பதன் உயர்வு மற்றும் தாழ்வுகளின் அடிப்படையில் உண்டாகின்ற ஏற்றத்தாழ்வுகள் என்பவை ப்ரபத்திக்கு இல்லாத காரணத்தினால் தேசநியமம் மற்றும் காலநியமம் ஆகிய இரண்டும் ப்ரபத்திக்கு இல்லை. நீரில் நீராடுபவர்கள் தூய்மையானவர்கள், தூய்மை அற்றவர்கள் என்ற வேறுபாடு இன்றி நீராடுவது போன்று, ப்ரபத்தி என்பது இயல்பாகவே தூய்மையானது என்பதால், தூய்மையானவர் மற்றும் தூய்மை அற்றவர் என வேறுபாடு இன்றி அனைவரும் ஏற்கலாம்படியாக உள்ளதால், ப்ரகார நியமமும் ப்ரபத்திக்கு இல்லை. வர்ணம் போன்ற பிரிவுகளுக்கு உட்பட்டு இல்லாத காரணத்தினால், ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்றதாக உள்ளதால், இன்னவர்கள் மட்டுமே ஏற்கலாம் என்ற அதிகாரி நியமம் ப்ரபத்திக்கு இல்லை. இந்தக் கருத்தைக் கீழே உள்ள பரத்வாஜ ஸம்ஹிதையில் காணலாம் - ந ஜாதி பேதம் நகுலம் நலிங்கம் நகுணக்ரியா:, ந தேச காலௌ நாவஸ்தாம் யோகோ ஹ்யயமபேக்ஷதே; ப்ரஹ்ம க்ஷத்ர விசச் சூத்ரா: ஸ்த்ரியச்சாந்தர ஜாதய: ஸர்வ ஏவ ப்ரபத்யேரந் ஸர்வ தாதாரமச்யுதம் – ப்ரபத்தி என்னும் இந்த உபாயம் எப்படிப்பட்டது என்றால் இந்த உபாயம் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற ஜாதி வேறுபாடுகளை ஏற்பதில்லை, குலங்களின் அடிப்படையில் உள்ள வேறுபாடுகளை ஏற்பதில்லை, ஆண் பெண் என்னும் வேறுபாடுகளை ஏற்பதில்லை, குணங்களுக்கு ஏற்ப செயல்படும் வேறுபாடுகளை ஏற்பதில்லை, தேசம் மற்றும் காலம் என்னும் வேறுபாடுகளை ஏற்பதில்லை, வயது போன்ற வேறுபாடுகளை ஏற்பதில்லை, அந்தணர் க்ஷத்ரியர் வைசியர் மற்றும் பெண்கள் போன்ற அனைவருமே அனைத்தையும் படைத்த அச்சுதனை அடைவார்கள் – என்றது. இப்படியாக ப்ரபத்திக்கு தேசம், காலம், முறைகள், அதிகாரி போன்ற எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதை பரத்வாஜ ஸம்ஹிதை உரைத்தது. மேலும் இதற்கு பல நியமம் இல்லை என்பதை ஸநத்குமார ஸம்ஹிதை - ப்ரபத்தே: க்வசிதப்யேவம் பராபேஷா ந வித்யதே, ஸாஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாம பலப்ரதா – கர்மங்கள் போன்றவை மற்றவற்றின் உதவியை நாடுவது போன்ற நிலை ப்ரபத்திக்கு இல்லை; மாறாக அனைவராலும் எங்கும் விரும்பப்பட்ட அனைத்து பலன்களையும் அது அளிக்கும் – என்றது.