Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 22)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
அர்ஜுநனுக்கு தூத்யஸாரத்த்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்தயுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக.
– ஆனால், இப்படி நிரஸநீயனானவனுக்கு இழிதொழில் செய்ததும் பரம ரஹஸ்யத்தையுபதேசித்ததும் என்செய்யவென்னவருளிச்செய்கிறார் (அர்ஜுநனுக்கித் யாதியால்).
ஆனாலும் இவ்விதம் கொல்லத் தகுந்தவனான அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டுதல் முதலான தாழ்வான செயல்கள் செய்தல், மிகவும் உயர்ந்த ரஹஸ்யத்தைக் கீதை மூலமாக அறிவித்தல் போன்றவற்றை ஏன் செய்தான் என்பதற்கான காரணத்தை அருளிச் செய்கிறார்.
– தூதுபோய்த்தது “பொய்ச்சுற்றம் பேசிச்சென்று பேதம் செய்து பூசல் விளைக்கைக்காக”; (ஸாரத்த்யம் பண்ணிற்று) – ஆயுதமெடுக்கவொண்ணா தென்கையாலே ”கொல்லாமாக்கோல் கொலை செய்து பாரதப்போரெல்லாச் சேனையுமிருநிலத்தவிக்கைக்காக”; (ப்ரபத்த்யுபதேசம் பண்ணிற்று) ந யோத்ஸ்யாமி என்றிருந்தவனை கரிஷ்யே வசநம் தவ என்னப்பண்ணி யுத்தே ப்ரவ்ருத்தனாக்குகைக்காக. இவையெல்லாஞ் செய்தது - சரணாகதையானவிவள் ஸங்கல்பத்தின்படியே துர்யோதநாதிகளையழியச் செய்து இவள் குழலை முடிப்பிக்கைக்காகவிறே. ஆக அர்ஜுநன் திறத்தில் செய்த தூத்யாதித்ரயமும் இவளுக்காகச் செய்தானென்கிறது. (பாண்டவர்களையும்) என்று தொடங்கி இவ்வளவும், கீழ்ச்சொன்ன ப்ரதாந தோஷ க்ரௌர்யமுபபாதிதமாய்த்து. ஆகவிப்படி அஸ்தாந ஸ்நேஹாதிகளும் சரணாகதை பரிபவங் கண்டிருந்த மஹாதோஷமுமிவனுக்குண்டாயிருக்க “ஸர்வ குஹ்யதமம் பூய: ச்ருணுமே பரமம் வச:, இஷ்டோஸி மே த்ருட இதி ததோ வஷ்யாமி தே ஹிதம்”, “மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு, மமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே” என்று இவனளவிலுகப்புத்தோற்றவருளிச் செய்கையாலே, இவன் தோஷங்களைப் பச்சையாகக் கொண்டு அங்கீகரித்தமை ப்ரஸித்தமென்று கருத்து. குணஹாநி சொல்லாதொழிந்தது, தோஷம் பச்சையாமிடத்தில் குணஹாநி பச்சையாமென்னுமிடம் கிம்புநர் ந்யாய ஸித்தமாகையாலே. இவன்றனக்கு குணஹாநிகளாவன - தஸ்மாத் யுத்யஸ்வ பாரத என்றருளிச் செய்தபோதே, கரிஷ்யே வசநம் தவ என்றெழுந்திருந்து ஸ்வ க்ருத்யமான யுத்தத்தைப் பண்ணாமையும், க்ருஷ்ணனை சரணம் புகுந்தவளைப் பரிபவிக்கவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தோமே என்னுமநுதாபலேசமும் நெஞ்சிலில்லாமையும் தொடக்கமானவை. தூத்ய ஸாரத்த்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்த்யுபதேசம் பண்ணிற்றுமிவளுக்காகவாகில் இவன் தோஷத்தைப் பச்சையாகக் கொண்டு அங்கீகரித்தானென்னுமது கூடாதீயென்னில், அதுக்குக் குறையில்லை; இவள் கார்யார்த்தமாகவிவனைக் குறித்து இவையெல்லாஞ் செய்கிற விடத்தில் இவன் தோஷங்களைப் பார்த்து முகம் சுளியாமல் உகப்போடே செய்கையாலே, அர்ஜுநனைக் குறித்து ஆசார்யக்ருத்யாதிகளையேறிட்டுக் கொள்ளுகிறவளவில் அவன் தோஷத்தைப் பச்சையாகக் கொண்டும் ஸாரதியாப் புரையறக் கலந்து நின்றும் செய்கை முதலானவையுண்டாகையால். (அறியாதவர்த்தங்களை) இத்யாதியாலே – ஆச்ரயண சௌகர்யாபாதகங்களான வாத்ஸல்யாதி குணங்கள் ஸுசிதம். இங்கே, (தூத்ய ஸாரத்த்யங்கள் பண்ணிற்றும்) என்கிறவித்தாலே - அஸ்மாத் வேத்த பராந் வேத்த வேத்தார்த்தம் வேத்த பாஷிதும் யத் யதஸ்மத்திதம் க்ருஷ்ண தத்தத் வாச்யஸ் ஸுயோதந: என்கிறபடியே – கார்யாகார் யஜ்ஞனான தான் போனாலல்லது கார்யஸித்தியுண்டகாதென்று இத்தலையை ரக்ஷிக்கைக்காகத் தான் தூது போனமையும், ஆயுதமெடுக்கவொண்னாதென்கையாலே ஸாரத்தயத்திலே ப்ரவ்ருத்தனாய்க் கொண்டு தேர்க்காலாலே ப்ரதிபக்ஷத்தையழியச் செய்தமையும் தோற்றுகையாலே ஆச்ரித கார்யாபாதகங்களான ஜ்ஞாநசக்த்யாதிகள் ஸூசிதம். இன்னமும் (ப்ரபத்த்யுபதேசம் பண்ணிற்றும்) என்கையாலும் - சரம ச்லோகத்தில் மாம், அஹம் என்கிற பதங்களால் சொல்லப்படுகிற உபயவித குணமும் ஸூசிதமிறே. ஆகையால், புருஷகார வைபவஞ் சொல்லுகிறவிடத்திலே ஸ்ரீமத் பதார்த்தம் ப்ரகடிதமானவோபாதி, உபாய வைபவஞ் சொல்லுகிறவிடத்திலே நாராயண பதார்த்தம் ப்ரகடிதம். உபாயத்வம் சொல்லுகையாலே “சரணௌ சரணம்” என்றதுவும் ஸூசிதம். ஆக ”இதிஹாஸச்ரேஷ்டம்” என்று தொடங்கி இவ்வளவும் ஸ்ரீராமாயண மஹாபாரதோக்தங்களான புருஷகாரோபாய வைபவங்கள் தத்தத் ஸ்வரூபங்களோடே விசதமாக ப்ரதிபாதிக்கப்பட்டது
– அர்ஜுனனுக்குத் தூது போனது ஏன் என்றால், திருவாய்மொழி - பொய்ச்சுற்றம் பேசிச்சென்று பேதம் செய்து பூசல் விளைக்கை - என்று கூறுவது போன்று துர்யோதனனின் இருப்பிடத்தில் சூழ்ச்சியாகப் பேசி, யுத்தத்தை உண்டாக்கவே ஆகும். (ஸாரத்த்யம் பண்ணிற்று) - ஆயுதம் எடுக்கக்கூடாது என்ற வேண்டுகோள் காரணமாகத் திருவாய்மொழி (3-2-3) – கொல்லாமாக்கோல் கொலை செய்து பாரதப்போரெல்லாச் சேனையுமிருநிலத்தவிக்கை - என்று கூறுவதற்கு ஏற்ப ஆகும். (ப்ரபத்தயுபதேசம் பண்ணிற்று) – கீதை (2-9) - ந யோத்ஸ்யாமி – நான் யுத்தம் செய்யமாட்டேன் – என்று அமர்ந்த அர்ஜுனனை, (18-73) – கரிஷ்யே வசநம் தவ – உன் சொற்படியே நான் நடந்து கொள்வேன் – என்று கூறும்படியாக மாற்றுதல், அவனை யுத்தத்தில் ஈடுபட வைத்தல் என்பதற்காகவே ஆகும். இவை அனைத்தையும் இவன் செய்தது ஏன் என்றால், தன்னைச் சரணம் புகுந்த திரௌபதியின் சபதத்திற்கு ஏற்ப துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்களை அழித்து, அவள் தனது கூந்தலை மீண்டும் முடிந்து கொள்வதற்காகவே ஆகும். எனவே அர்ஜுனனுக்குச் செய்த தூது போன செயல் முதலான மூன்றையும் (தூது சென்றான், தேர் ஓட்டினான், கீதை உபதேசித்தான்) திரௌபதிக்காகவே செய்தான் என்றாகிறது. – “பாண்டவர்களையும்” என்று தொடங்கிய சூர்ணை முதலாக இதுவரை கூறப்பட்ட அனைத்தும் மேலே கூறப்பட்ட முதன்மையான குற்றத்தினை விளக்கியது. இப்படியாக அர்ஜுனனிடம் - தகாதவர்களிடம் தகாத இடத்தில் இரக்கம் கொள்ளுதல் என்பதும், க்ருஷ்ணனைச் சரணம் புகுந்தவளான திரௌபதி துடிப்பதை ஏதும் செய்யாமல் இரக்கம் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருத்தல் என்னும் இரண்டு பெரிய தோஷங்கள் இருந்தன. இப்படிப்பட்ட தோஷங்களுடன் கூடியவனாக அர்ஜுனன் உள்ளபோதிலும் கீழே உள்ளது போன்று அவனுக்கு உபதேசித்து, அவனுக்கு நம்பிக்கை மற்றும் உகப்பை க்ருஷ்ணன் ஊட்டினான்: • கீதை (16-64) - ஸர்வ குஹ்யதமம் பூய: ச்ருணுமே பரமம் வச: இஷ்டோஸி மே த்ருட இதி ததோ வஷ்யாமி தே ஹிதம் - இப்படியாக இரகசியங்கள் அனைத்திலும் மிகவும் இரகசியமாக உள்ள பக்தியோகம் பற்றிய எனது உயர்ந்த சொற்களை நீ மீண்டும் கேட்பாயாக. எனக்கு நீ மிகவும் இனிமையான நண்பனாக உள்ளதால் உனக்கு எது நன்மை அளிக்குமோ அதனைக் கூறுகிறேன். • கீதை (9-34) - மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே - என்னிடம் உனது மனதை முழுவதுமாகத் திருப்புவாயாக. எனது பக்தனாக என்னிடம் அன்புடன் இருப்பாயாக. என்னிடம் உன்னை அர்ப்பணிப்பாயாக. என்னையே வணங்குவாயாக. என்னையே முழுவதுமாகச் சார்ந்து நின்று, என்னிடம் உனது ஆத்மாவை இணைத்து, என்னையே அடைவாயாக. மேலே உள்ளபடிக் கூறுவதன் மூலம் அர்ஜுனனின் குற்றங்களை உபகாரமாகக் கொண்டு அவனை ஏற்றுக் கொண்டான் என்பது தெளிவாகிறது. இங்கு அர்ஜுனனுடைய குணக்கேட்டினைக் கூறாமல் விட்டது ஏன் என்றால், தோஷங்களே உபகாரமாகக் கொள்ளப்படும்போது குணக்கேடுகள் உபகாரமாக இருக்கும் என்பது நேரடியாகவே விளங்கும். அர்ஜுனனின் குணக்கேடுகள் எவை? • கீதை – தஸ்மாத் யுயுத்யஸ்வ பாரத – ஆகவே பரதகுலத்தில் பிறந்தவனே! உடனே எழுந்து யுத்தம் செய்வாயாக - என்று க்ருஷ்ணன் கூறியவுடனேயே அர்ஜுனன் கீதை (18-73) - கரிஷ்யே வசநம் தவ - உனது சொற்களின்படியே நடக்கிறேன் - என்று எழுந்து நின்று யுத்தம் செய்வதை விடுத்து செய்யாமால் நின்றான். • க்ருஷ்ணனைச் சரணம் என்று புகுந்து திரௌபதியைத் துடிக்க விட்டு ஏதும் செய்யாமல் பார்த்துக் கொண்டு நின்றான். அத்துடன், “இப்படி நான் ஏதும் செய்யவில்லையே” என்று அனுதாபத் துயரமும், நெஞ்சில் இரக்கமும் கொள்ளவில்லை மேலே உள்ளது தொடக்கமாக அர்ஜுனனுக்குக் குணக்கேடுகள் கூறப்பட்டன. தூது செல்வது, தேர் ஓட்டுவது, கீதை உபதேசித்தது போன்ற அனைத்தும் திரௌபதிக்காக என்று மேலும் கூறப்பட்டது. அப்படி உள்ளபோது அர்ஜுனனின் தோஷங்களை உபகாரமாகக் கொண்டு, அவனை ஏற்று இவற்றைச் செய்தருளினான் என்று எவ்விதம் கூற இயலும்? இவ்விதம் கூறுவது பொருத்தமே ஆகும். எப்படி? திரௌபதியின் பொருட்டே அர்ஜுனனுக்கு இந்தச் செயல்களைச் செய்த போதிலும், அர்ஜுனனின் குற்றங்களைக் கண்டு சற்றும் திருமுகம் கோணாமல், மிகுந்த மகிழ்வுடனே செய்கிறான் (ஆகவே மேலே கேட்கப்பட்ட கேள்வி அவசியம் அற்றது என்கிறார்). அர்ஜுனனுக்கு ஓர் ஆசார்யனின் செயலைத் தான் கைக்கொள்ளுகிறபோது, அவனது தோஷங்களையே உபகாரமாகக் கொண்டும், அவனுடைய தேர்ப்பாகனாக நின்றும் செய்யக்கூடிய செயல்கள் உண்டு. “அறியாத அர்த்தங்களை” என்று தொடங்கும் 14-வது சூர்ணை மூலம் ஓர் ஆசார்யன் தன்னை அடைந்தவர்களின் செயல்களை முடிப்பது போன்றவற்றுக்கு அடிப்படையான வாத்ஸல்யம் போன்றவை கூறப்பட்டது. இங்கு தூது செல்லுதல், தேர் ஓட்டுதல் போன்றவை மூலம் மஹாபாரதம் உத்யோகபர்வம் (71-92) – அஸ்மாத் வேத்த பராந் வேத்த வேத்தார்த்தம் வேத்த பாஷிதும் யத் யதஸ்மத்திதம் க்ருஷ்ண தத்தத் வாச்யஸ் ஸுயோதந: - க்ருஷ்ணா! எங்களை நீ நன்கு அறிவாய், எங்கள் விரோதிகளையும் அறிவாய், நீ அவர்கள் இருப்பிடம் சென்றால் என்ன செய்யவேண்டும் என்பதையும் அறிவாய், அவர்களிடம் என்ன கூறவேண்டும் என்பதையும் அறிவாய், ஆகவே எந்தெந்த சொற்கள் எங்களுக்கு நன்மையை உண்டாக்குமோ அவற்றைத் துரியோதனனிடம் கூறவேண்டும் - என்று கூறுவதற்கு ஏற்ப எதனைச் செய்யவேண்டும், எதனைச் செய்யக்கூடாது என்று நன்கு அறிந்தவனான தான் (க்ருஷ்ணன்) தூதாகச் செல்லாமல் பாண்டவர்களுக்கான செயலும், தனது பூமிபாரம் குறைப்பதான செயலும் நடைபெறாது என்பதையே உணர்த்தினான். மேலும் இவர்களைக் காப்பாற்றுவது என்பதற்காகவே தூது சென்றான்; ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற சபதம் செய்ததால் தேரை ஓட்டும் செயலில் நின்றான், அதன் மூலமே விரோதிகளை அழித்தான். இந்த அனைத்தும் இவன் தூது சென்றது, தேர் ஓட்டியது என்பவற்றில் வெளிப்பட்ட காரணத்தினால், தன்னை அடைந்தவர்களின் செயல்களை முடிக்கின்ற ஞானம், சக்தி போன்றவை வெளிப்படையானது. அடுத்து “ப்ரபத்தி” என்பதன் மூலம் சரமச்லோகத்தில் கூறப்பட்ட பதங்களான மாம் (வாத்ஸல்யம், சௌசீல்யம், எளிமை, எஜமானத்தன்மை ஆகியவற்றை இந்தப் பதம் உணர்த்துகிறது) மற்றும் அஹம் (ஞானம், சக்தி ஆகியவற்றை இந்தப் பதம் உணர்த்துகிறது) ஆகியவற்றில் இரண்டுவிதமான குணங்கள் கூறப்பட்டதை உணர்த்துகிறான். எனவே புருஷகார வைபவம் பற்றி மேலே கூறப்பட்ட பகுதியில் “ஸ்ரீமத்” என்ற பதம் எவ்விதம் விளக்கப்பட்டதோ அது போன்று உபாயவைபவம் பற்றிக் கூறப்பட்ட இந்தப் பகுதியில் “நாராயண” என்ற பதம் விளக்கப்பட்டது. இங்கு உபாயமாக உள்ள தன்மையும் கூறப்பட்டதால் த்வயத்தின் – சரணௌ சரணம் – என்பதன் விளக்கமும் கூறப்பட்டதாகக் கொள்ளலாம். ஆக ”இதிஹாஸச்ரேஷ்டம்” என்னும் 5-வது சூர்ணை தொடக்கமாக இந்தச் சூர்ணை முடிய இராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் கூறப்பட்ட புருஷகார வைபவம் மற்றும் உபாய வைபவம் ஆகியவை அவற்றின் தன்மைகளுடன் விவரிக்கப்பட்டன.