Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 21)

முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்

பாண்டவர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்தது த்ரௌபதியுடைய மங்கள ஸூத்ரத்துக்காக.

– இத்தோஷத்தின் கொடுமையையுப்பாதிக்கிறார் மேல் (பாண்டவர்களை யுமென்று தொடங்கி).

– கடந்த சூர்ணையில் அர்ஜுனனின் தோஷத்தைக் கூறுனார். அதன் கொடுமையை இங்கு விளக்குகிறார். (அல்லது மேலே கூறப்பட்ட தோஷம் என்பது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் பொதுவானது அல்லவோ? அப்படி உள்ளபோது அவர்களை அழிக்காமல்விட்டது ஏன் என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்).

அன்றிக்கே, இத்தோஷம் ஐவர்க்குமொவ்வாதோ, ஆனபின்பு இத்தலை யையும் நிரஸித்துப் பொகடாமல் வைத்ததென்னென்கிற சங்கையிலேயருளிச் செய்கிறா ராகவுமாம். முற்பட்ட ஸங்கதிக்கு அர்ஜுநனையென்னாதே (பாண்டவர்களையும்) என்றது – இத்தோஷம் ஐவர்க்குமொக்குமென்று தோற்றுகைக்காகவென்று யோஜிக்கக்கடவது; அநந்தர ஸங்கதிக்குத் தானே தன்னைடையே சேருமிறே. பரிபவித்த துர்யோதநாதி களோபாதி பரிபவங்கண்டிருந்தவிவர்களும் நிரஸநீயரென்கிறது – சசப்தத்தாலே. (நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க வைத்தது) என்றது - இவர்கள் செய்த கொடுமைக்குத் தலையையறுத்துப் பொகட வேண்டியிருக்க ப்ராணனோடேயிருக்கும்படி வைத்ததென்றபடி. (த்ரௌபதியுடைய மங்களஸூத்ரத்துக்காக) என்றது - அவளுக்கபிமதமான மங்களஸூத்ரம் போகாமைக்காகவென்றபடி. விரித்ததலை காணமாட்டாதவன் வெறுங்கழுத்துக் காணமாட்டானிறே. இத்தால் – ஆச்ரிதரைப் பரிபவித்தாரோபாதி அது கண்டிருந்தாரும் நிரஸநீயராவரென்னுமிடமும், அவர்கள் தாங்களே ஆச்ரிதர்க்கு விடவொண்ணாததோரு பந்தமுடையராகில் அவர்களுக்காக அவனாலே ரக்ஷிக்கப்படுவரென்னுமிடமும் ப்ரகடிதமாய்த்து.

– ”பாண்டவர்களையும்” என்று கூறியதன் மூலமாக இந்தத் தோஷம் ஐந்து பேருக்கும் உள்ளது என்பதை உணர்த்துகிறார். அவர்களை ஏன் அழிக்கவில்லை என்ற கேள்விக்கு விடை சூர்ணையின் மூலம் தானாகவே புலப்படுகிறது. “பாண்டவர்களையும்” என்பதில் காணப்படும் “யும்” என்பது துரியோதன் உள்ளிட்டவர்கள் போன்று, திரௌபதி துடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே என்பதை உணர்த்துகிறது. “நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க வைத்தது” என்பதன் பொருள் என்னவென்றால், இவர்கள் இழைத்த கொடுமைக்கு இவர்களின் தலைகளை அறுத்திருக்க வேண்டும், ஆனால் உயிருடன் இருக்கும்படி விட்டுவைத்தது – என்பதாகும். ஏன் விட்டு வைத்தான் என்பதற்கு விடை அருளிச்செய்கிறார். ”த்ரௌபதியுடைய மங்களஸூத்ரத்துக்காக” என்பதன் பொருள், அவளுக்கு விருப்பமாக உள்ள அவளுடைய தாலி பறி போகாமல் இருப்பதற்காக – என்பதாகும். அவள் தனது கூந்தலை விரித்து விட்டபடி நிற்பதையே காணச் சகிக்காத க்ருஷ்ணன், அவள் தாலி இன்றி வெறுங்கழுத்துடன் நிற்பதைக் காண முயல்வானோ? இதன் மூலம் உணர்த்தப்படுவது என்னவென்றால் : • தன்னைச் சரணம் புகுந்தவர்களைத் துன்புறுத்தி அவர்கள் தவிக்கும்படிச் செய்பவர்கள் போன்றே, அவர்கள் துடிப்பதை வேடிக்கை பார்த்து நிற்பவர்களும் கொல்லத் தகுந்தவர்கள். • ஆனால் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்தபடி நிற்பவர்கள், துடிப்பவர்களான தன்னைச் சேர்ந்தவர்களின் உறவினர்களாக இருந்தால் தன்னைப் பற்றியவர்களின் பொருட்டு அவர்களும் காப்பாற்றப்படுவார்கள்.