Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 20)

முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்

த்ரௌபதீ பரிபவங் கண்டிருந்தது க்ருஷ்ணாபிப்ராயத்தாலே ப்ராதாந தோஷம்.

இவையெல்லாம் அப்ரதாநம், இன்னமும் ப்ரதான தோஷம் வேறே யென்கிறார் (த்ரௌபதீயென்று தொடங்கி).

மேலே கூறப்பட்ட பலவிதமான தோஷங்கள் அர்ஜுனனுக்கு முக்கியமானவை அல்ல; அவன் செய்த முதன்மையான குற்றத்தை இங்கு கூறுகிறார்.

முன்பு த்ரௌபதியை துர்யோதநாதிகள் பரிபவிக்கிறபடியைக் கண்டிருக்கச் செய்தே, சூதிலே தோற்றமையை நினைத்து தர்மபீதியாலே பொறுத்திருந்தாலும், கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதாம் என்று க்ருஷ்ணனை சரணம் புகுந்த பின்பு பரிபவிக்கிறவளவில், பகவதாச்ரிதரைப் பிறர் பரிபவிக்கக் கண்டால் சக்தனாகில் விலக்கவேண்டும், அசக்தனாகில் இழவோடே அவ்வருகே போகவேணும் என்னும் விசேஷ சாஸ்த்ர மர்யாதையைப் பார்த்தாதல், தன்னளவில் க்ருஷ்ணனுக்குண்டான ஸ்நேஹ பக்ஷபாதங்களை நினைத்து அவனை சரணம் புகுந்தவள் பரிபவப்படப் பார்த்திருந்தால் அவன் முகத்திலே நாளை விழிக்கும்படி என்! என்றாதல், சரக்கெனவெழுந்திருந்து விலக்கவிறேயடுப்பது; அத்தைச் செய்யாதே முன்புத்தையிற் காட்டில் ஒரு விசேஷமறவிருந்தானிறே. இதுவேயாய்த்து இவன் தோஷங்களெல்லாவற்றிலும் ப்ரதாநமாக க்ருஷ்ணன் திருவுள்ளத்திலே பட்டுக்கிடப்பது. அத்தைப் பற்ற (க்ருஷ்ணாபிப்ராயத்தாலே ப்ரதாநதோஷம்) என்கிறது. தோஷத்துக்கு ப்ராதாந்யம் க்ரௌர்யத்தாலேயிறே, அல்லாதவை போலன்றிக்கே நக்ஷமாமி என்னும்படியான தோஷமிறேயிது.

துரியோதனன் உள்ளிட்ட பலரும் திரௌபதியை சபையில் துடிக்க வைத்த போதிலும், தான் சூதில் தோற்ற காரணத்தினால் தர்மம் கருதி, தர்மத்திற்கு அச்சம் கொண்டவனாகப் பேசாமல் நின்றான். ஆனால் திரௌபதி - கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதாம் - கோவிந்தனே! தாமரை போன்ற கண்கள் கொண்டவனே! உன்னைச் சரணம் புகுந்தேன் – என்று க்ருஷ்ணனிடம் சரணம் புகுந்தாள். இவ்விதம் எம்பெருமானிடம் சரணம் புகுந்த ஓர் உயிர், மற்றவர்களால் துன்புறுத்தப்படும்போது ஆற்றல் உள்ள ஒருவன் அவர்களை விலக்கவேண்டும்; ஆற்றல் இல்லாதவனாக இருந்தால் கனத்த மனத்துடன் அங்கிருந்து விலகிச் சென்றுவிடவேண்டும் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இந்த சாஸ்த்ரங்களுக்காக அல்லாவிட்டாலும், தன் மீது க்ருஷ்ணனுக்கு உள்ள தோழமை மற்றும் பக்ஷபாதம் ஆகியவற்றையாவது அர்ஜுனன் அப்போது உணர்ந்து கொண்டு, “எனது க்ருஷ்ணனைச் சரணம் புகுந்தவள் இவ்விதம் துயரம் கொள்ளும்போது நான் ஏதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்தால், நாளை க்ருஷ்ணனின் முகத்தில் எப்படி விழிப்பது”, என்று எண்ணி இருக்கவேண்டும். இதனால் சட்டென்று எழுந்து அவர்களை விலக்கி இருக்கவேண்டும். ஆனால் அதனைச் செய்யாமல், முன்பு இருந்ததைக் காட்டிலும் மெத்தனமாக எந்தவிதமான வேறுபாடும் இன்றி அமர்ந்திருந்தான். இதுவே க்ருஷ்ணனின் திருவுள்ளத்தில் இவன் செய்த பல குற்றங்களில் முதன்மையான குற்றமாகத் தைத்தது. இதனை உணர்த்தவே ”க்ருஷ்ணாபிப்ராயத்தாலே ப்ரதாநதோஷம்” என்று அருளிச்செய்தார். ஒரு குற்றத்திற்கு முக்கியமான ஒன்று அந்தக் குற்றம் மூலம் உண்டாகும் கொடுமையே ஆகும். அர்ஜுனன் செய்த இந்தக் குற்றம் மற்றவை போல் அல்லாமல் – ந க்ஷமாமி – பொறுக்கமாட்டேன் – என்று சீறும் அளவிற்கு அல்லவோ?