Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 18)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
ராக்ஷஸிகள் தோஷம் ப்ரஸித்தம்.
இப்படி புருஷகாரமுமுபாயமும் தோஷாதிகள் பச்சையாக அங்கீகரித்த விடமுண்டோவென்னுமபேக்ஷையிலே, தத்ததங்கீகாரம் பெற்ற ராக்ஷஸிகளுடையவும் அர்ஜுனனுடையவும் தோஷங்களை தர்சிப்பிக்கவே அது ஸித்திக்குமென்று நினைத்து, ப்ரதமம் ராக்ஷஸிகள் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் (ராக்ஷஸிகள்) என்று தொடங்கி.
– இப்படியாகத் தோஷங்கள் மற்றும் குணக்கேடுகள் ஆகியவற்றை உபகாரமாகக் கொண்டு எம்பெருமானோ அல்லது பிராட்டியோ அங்கீகரித்த நிகழ்ச்சி ஏதும் உண்டா என்ற கேள்வி எழலாம். புருஷகாரத்தின் ஏற்பு என்பது அரக்கிகளுக்கும், உபாயத்தின் ஏற்பு என்பது அர்ஜுனனுக்கும் பொருந்தும். இவை அவர்களுடைய தோஷங்களை உணர்த்துகின்றதால், அவையே இக்கேள்விக்கு விடையளிக்கும் என்று முடிவு செய்தார். முதலில் அரக்கியர்களின் தோஷங்களைக் கூறுகிறார்.
ஏகாக்ஷீ ஏககர்ணீ முதலான எழுநூறு ராக்ஷஸிகளும் பரஹிம்ஸை பண்ணப் பெறில் உண்ணாதே தடிக்கும்படி ப்ரக்ருத்யா பாபசீலைகளாய், பத்துமாஸமொருபடிப்பட தர்ஜநபர்த்ஸநம் பண்ணி நலிந்து போந்தவர்களிறே; (இவர்கள் தோஷம் ப்ரஸித்தம்) என்றது - ஸ்ரீராமாயணம் நடையாடும் தேசத்திலறியாதாரில்லை யென்றபடி ஏவம்பூதைகளானவர்களைக் குறித்து, ராஜ ஸம்ச்ரய வச்யாநாம், பாபாநாம் வா சுபாநாம்வா என்று குற்றத்தைக் குணமாக உபபாதித்து, திருவடியோடே மன்றாடி ரக்ஷிக்கையாலே, தோஷமே பச்சையாகவங்கீகரித்தன்மை ப்ரஸித்தமென்று கருத்து. குணஹாநி சொல்லாதொழிந்தது, தோஷம் பச்சையாமிடத்தில் குணஹாநி பச்சையாமென்னுமிடம் சொல்லவேண்டாவிறே என்று. இவர்கள் தங்களுக்கு குண ஹாநியாவது - இடைவிடாமல் நலிந்து போருகிறவிடத்தில் இவளும் நம்மோபாதியொரு பெண்பிறந்தவளன்றே என்றாகிலும் மறந்தும் அல்பம் நெஞ்சிரக்கமுண்டாதல்; பவேயம் சரணம் ஹி வ: என்றதற்குப் பின்பு நலிகிறவிடத்தில், ஐயோ! இப்படி சொன்னவளன்றோ! என்று சற்றும் நெஞ்சுளுக்குதல் செய்யாமை முதலானவை.
ஒரு கண் உடையவள், ஒரு காது உடையவள் என்று எழுநூறு விதமான அரக்கிகள் அசோக வனத்தில் இருந்தனர். இவர்கள், மற்ற உயிர்களை வதை செய்யவில்லை என்றால் உண்ணமாட்டோம் என்ற சபதம் பூண்ட நிலையில் உள்ளவர்கள் ஆவர். இப்படியாக மிகப் பெரும் பாவங்கள் செய்வதையே இவர்கள் இயல்பாகக் கொண்டவர்கள் ஆவர். மேலும், பத்து மாதங்கள் சீதையைத் தங்கள் கையாலும், வாயாலும் பயமுறுத்தியபடி இருந்தவர்கள் ஆவர். இராமாயணம் சுற்றி வரும் பூமியான இங்கு, இவர்களது தோஷம் மிகவும் பிரபலம் ஆகும். ஆக இதனை அறியாதவர்கள் இங்கு இல்லை. இவர்களின் தோஷங்கள் குறித்து சீதை அனுமனிடம் பின்வருமாறு கூறுகிறாள்: • இராமாயணம் ஸுந்தரகாண்டம் – ராஜ ஸம்ச்ரய வச்யாநாம் - அரச ஆணையால் செயல் புரிபவர்களும், அப்படிச் செய்யாமல் இருத்தால் அவனால் தண்டிக்கப்படுபவர்களும் ஆகிய இப்பணிப்பெண்கள் மீது யார் கோபம் கொள்வர்? • இராமாயணம் ஸுந்தரகாண்டம் - பாபாநாம் வா சுபாநாம்வா - உனது எண்ணப்படி இவர்கள் தீ வினை செய்தவர்கள், என் எண்ணப்படி இவர்கள் நல்லதே செய்பவர்கள். இப்படியாக இந்த அரக்கிகளுக்காகச் சீதை அனுமனிடம் மன்றாடி நின்று, அவர்களைக் காத்தல் என்ற செயலானது, அரக்கியர்களின் தோஷங்களைப் பிராட்டி எப்படி உபகாரமாகக் கொண்டாள் என்பதை உணர்த்துகின்றது. இங்கு அரக்கியர்களின் குணக்கேடு பற்றிக் கூறாமல் தோஷங்கள் மட்டும் கூறப்பட்டது ஏன்? தோஷங்கள் என்பது மட்டுமே உபகாரமாக ஆகும்போது, குணக்கேடுகளும் உபகாரம் ஆகும் என்பது சொல்லாமலேயே விளங்கும் என்று கருத்து. அரக்கியர்களின் குணக்கேடு என்பது என்ன? இடைவிடாமல் சீதையைத் துன்புறுத்தும் போது, ”இவளும் நம் போன்று ஒரு பெண் அல்லவோ?”, என்ற எண்ணம் சற்றே உண்டானாலும், அவர்கள் மனதில் அவள் மீது இரக்கம் என்பது மறந்தும் உண்டாகவில்லை. சீதை அவர்களிடம் - பவேயம் சரணம் ஹி வ: – நான் உங்களைப் பாதுகாப்பவள் – என்று கூறினாள். இதற்குப் பின்னரும் அவளைத் துன்புறுத்தும்போது மனதில், “ஐயோ! இப்படி நமக்கும் கூறியவள் அல்லவோ?”, என்று சற்று கூட நெஞ்சத்தில் எண்ணாமல் இருந்தல்.