Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 17)

முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்

இரண்டுங் குலைந்ததென்றிருக்கில் இத்தலைக்கிரண்டும் உண்டாயிற்றதாம்.

– இப்படி தோஷாதிகள் குலைந்தாலொழிய அங்கீகரியோமென்றிருக்கில் அத்தலைக்கு அவையிரண்டும் வருமென்னுமிடம் சொல்லி, தோஷாதிகள் குலையப்பட்டன்றோ நம்மை அங்கீகரித்ததென்றிருக்கில் இத்தலைக்கவையிரண்டும் வருமென்கிறார் மேல் (இரண்டுங் குலைந்ததென்று தொடங்கி).

– இப்படியாக நமது தோஷங்கள் மற்றும் குணங்கள் ஆகிய இரண்டும் கழிந்தால் மட்டுமே நம்மை ஏற்பது என்று எம்பெருமானும் பிராட்டியும் இருந்தார்கள் என்றால், அதனால் அவர்களுக்குச் செய்யத்தகாதவற்றைச் செய்தல் மற்றும் செய்யத்தக்கதைச் செய்யாமை என்ற இரண்டு குற்றங்களும் உண்டாகும் என்றார். இனி நமது மனதில், ”நமது தோஷம் மற்றும் குணக்கேடுகள் ஆகிய இரண்டும் கழிந்துவிட்டன, அதனால் அல்லவோ நம்மை இவர்கள் ஏற்றார்கள்”, என்று எண்ணினோம் என்றால், அந்தக் குற்றங்களும் தோஷங்களும் நம்மிடம் வந்து விடும் என்கிறார்.

(இரண்டுங் குலைந்ததென்றிருக்கையாவது) - இத்தனை நாளும் நம்மை யங்கீகரியாதிருந்தவர்கள் இன்றங்கீகரித்தது நம் தோஷாதிகள் குலையப்பட்டன்றோ! ஆகையால் நமக்கவை குலைந்ததென்றநுஸந்தித்திருக்கை. இப்படியிருக்கில் (இத்தலைக்கு இரண்டுமுண்டாகையாவது) - அக்ருத்யகரணமும் க்ருத்யாகரணமும் வருகை. எங்ஙனேயென்னில்: இவ்வதிகாரிக்கு, அநாதிகாலமங்கீகரியாதவர்கள் இன்று நம்மையங்கீகரித்தது நம்முடைய தோஷகுணஹாநிகளிரண்டுங்குலைந்தவாறேயன்றோ! என்றநுஸந்திக்கை அக்ருத்யமாயிருக்க அத்தைச் செய்கையாலும்; நீசனேன் நிறைவொன்றுமிலேன், அமர்யாத:, புத்தவாச நோச, அதிக்ராமந்நாஜ்ஞாம் இத்யாதிப்படியே – நம்முடைய தோஷ குணஹாநிகளிப்போதளவாகவொன்றுங் குலைந்ததில்லையென்றும், இப்படியிருக்கச்செய்தே தோஷாதிகளே பச்சையாக நம்மை யவனங்கீகரித்தருளுவதே! என்றுமநுஸந்திக்கை க்ருத்யமாயிருக்க அத்தைச் செய்யாமையாலும் இரண்டும் வருமிறே.

– (இரண்டுங் குலைந்ததென்றிருக்கையாவது) என்பதன் பொருள் - இத்தனை காலம் நம்மை ஏற்காமல் இருந்த எம்பெருமானும் பிராட்டியும் இப்போது நம்மை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் நமது தோஷங்கள் கழிந்து விட்டதால் அல்லவோ? எனவே நம்மிடம் இருந்து அந்தத் தோஷங்கள் விலகிவிட்டன என்று எண்ணியபடி இருந்தல் – ஆகும். இவ்விதம் எண்ணினால் (இத்தலைக்கு இரண்டுமுண்டாகையாவது) – செய்யத்தகாதவற்றைச் செய்தல், செய்யத்தக்கதைச் செய்யாமை ஆகிய இரண்டு குற்றங்களும் நமக்கு உண்டாகிவிடும். எப்படி? “எல்லையற்ற காலமாக நம்மை ஏற்காமல் இருந்தவர்கள் இன்று நம்மை ஏற்றுக்கொண்டது ஏனென்றால் நமது தோஷங்கள் மற்றும் குணக்கேடுகள் கழிந்ததால் ஆகும்”, என்று எண்ணுவது செய்யத்தகாத செயலாகும். இதனைச் செய்தல் மூலம் ”செய்யத்தகாதவற்றைச் செய்தல்” என்ற குற்றம் ஏற்படும். அடுத்து கீழே உள்ள வரிகள் காண்க: • திருவாய்மொழி (3-3-4) - நீசனேன் நிறைவொன்றுமிலேன். • ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் (62) – அமர்யாத: - (பலவிதமான குற்றங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி) - நான் எவ்விதம் கரை ஏறி உனது திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்யப்போறேன். • ஸ்ரீவரதராஜஸ்தவம் (70) - புத்தவாச நோச - வரதா! பலவிதமான பாவங்களில் வசப்பட்டவனாக நான் உள்ளேன். • ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-91) - அதிக்ராமந்நாஜ்ஞாம் – ஸ்ரீரங்கராஜனே! உன்னுடைய பொறுமை என்னும் குணம் காரணமாக, எல்லையற்ற குற்றங்கள் செய்த நான், உனக்கு வேண்டாதவனாக ஆக மாட்டேன். மேலே உள்ள பல வரிகளின்படி நமது குற்றங்கள் இன்றுவரை குறையவில்லை என்றும்; இப்படியாக நாம் உள்ளபோதிலும் நமது தோஷங்கள் மற்றும் குணக்கேடுகளையே உபகாரமாகக் கொண்டு நம்மை எம்பெருமானும் பிராட்டியும் ஏற்கிறார்கள் என்றும் நினைக்கவேண்டும். இந்த எண்ணம் இல்லாத காரணத்தால் செய்யத்தக்கதைச் செய்யாமை என்ற குற்றம் உண்டாகும்.