Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 16)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
இரண்டுமிடண்டுங் குலையவேணுமென்றிருக்கில் இரண்டுக்கு மிரண்டும் உண்டாயிற்றதாம்.
– இப்படி புருஷகாரமும் உபாயமும் தோஷ குணஹாநிகள் குலைவதற்கு முன்னேயங்கீகரிக்கிறதென்? அவைகுலைந்தேயங்கீகரிக்கக் கடவோமென்றிருந்தால் வருவதென்னென்னவருளிச் செய்கிறார் (இரண்டுமென்று தொடங்கி).
தோஷங்கள் மற்றும் தாழ்ந்த குணங்கள் ஆகியவை அனைத்தும் நீங்குவதற்கு முன்னரே புருஷகாரம் மற்றும் உபாயம் ஆகியவை கிட்டும்படி ஏன் செய்ய வேண்டும்? இவை தீர்ந்த பின்னர் அங்கீகரிப்போம் என்று எம்பெருமானும் பிராட்டியும் இருந்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– இரண்டுமென்கிறது புருஷகாரோபாயங்களை (இரண்டுங் குலைய வேணுமென்றிருக்கையாவது) - இவனையங்கீகரிக்கும் போதைக்கு, இவனுடைய தோஷ குணஹாநிகளிரண்டும் போய்க் கொள்ளவேணுமென்று நினைத்து, ஆச்ரயணோந் முகனாக இவனையங்கீகரியாதிருக்கை. இப்படியிருக்கில் (இரண்டுக்கு மிரண்டு முன்டாகையாவது புருஷகாரத்துக்குமுபாயத்துக்கும் தோஷ குணஹாநிகளிரண்டும் வருகை; எங்ஙனேயென்னில்; தோஷம் வருகையாவது த்வம்மாதா ஸர்வலோகாநாம் தேவதேவோ ஹரி: பிதா, அகிலஜகந் மாதரம், பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய என்கிறபடியே ஸகல சேதநர்க்கும் நிரூபாதிகமான தாயுந் தமப்பனுமாகையாலே இச்சேதநனுடைய நன்மை தீமைகளிரண்டும் தங்கள் தாம்படியான உறவுண்டாயிருக்க, இச்சேதநனுடைய தோஷாதிகளைப் பார்த்து அங்கீகரியாமையாலே, தாத்ருச ஸம்பந்தத்துக்குக் கொத்தை விளைகை. குணஹாநி வருகையாவது – இவனுடைய துக்கங் கண்டிரங்காமையாலும், இவனுடைய தோஷத்தை போக்யமாக்க் கொள்ளாமையாலும் க்ருபா வாத்ஸல்யங்ளுக்கு ஹாநி வருகை. அதவா (இரண்டுமுண்டாய்த்ததாம்) என்கிற விடத்திலும், தோஷ குணஹாநிகளாவன – அக்ருத்யகரண க்ருத்யாகரணங்களாகவுமாம்; புருஷகாரத்துக்கு அக்ருத்யகரணமாவது - ஈச்வரனையுமுட்பட தோஷங்காணவொட்டாத தான், தோஷாதிகள் குலைந்தன்றியங்கீகரியேன் என்றிருக்கை; க்ருத்யாகரணமாவது - இவனுடைய தோஷாதிகள் பாராதே கைக்கொண்டு ஈச்வரனோடே சேர்ப்பிக்கையாகிற ஸ்வக்ருத்யத்தைச் செய்யாமை. ஈச்வரனுக்கு அக்ருத்ய கரணமாவது - ஸம்ஸாரி சேதனநருடைய தண்மையைப் பார்த்துக் கைவிடாதே, ஸ்வாபாவிக ஸம்பந்தமே ஹேதுவாக அத்தோஷமே தொடங்கியுண்டாக்குகைக்கு எதிர்சூழல் புக்குத் திரிகிற ஸர்வபூத ஸுஹ்ருத்தான தான், இச்சேதநனை யங்கீகரிக்குமளவில் இவன் தோஷாதிகள் குலைந்தாலொழிய அங்கீகரியேன் என்றிருக்கை; க்ருத்யாகரணமாவது - இவனுடைய தோஷாதிகளைப் பாராதே கைக்கொண்டு ஸ்வக்ருத்யமான அநிஷ்ட நிவ்ருத்த்யாதி களைப் பண்ணாமை இதுதான் சேதநனுக்குச் சொன்ன அக்ருத்யகரணாதிகளைப் போலே சாஸ்த்ரத்தைப்பற்றச் சொல்லுகிறதன்றே! இவர்கள் ஸ்வபாவத்தைப் பற்றிச் சொல்லுகிறவையித்தனையிறே விமுகரையுமுட்பட தோஷ குணஹாநிகள் பச்சையாக மேல் விழுந்தங்கீகரிக்கும் ஸ்வபாவரான இவர்களுக்கு அபிமுக சேதநர்களை யங்கீகரிக்குமளவில் தோஷாதிகள் குலையவேணுமென்றிருக்கைதான் முதலிலே கூடாமையாலே இவர்களுக்கிவை வருகைக்கு அவகாசமில்லையிறே! ஆயிருக்கச்செய்தே இப்படியருளிச்செய்தது - இவ்வர்த்த தத்வமறியாதவர்களுக்கு ஆச்ரயணோந்முக சேதநகதங்களான தோஷகுணஹாநிகள் குலையவேணுமென்றிராமல் அவற்றுடனே யங்கீகரிக்கை இவர்களுக்கு அவச்யகரணீயமென்று அறிவிக்கைக்காக.
– ”இரண்டும்” என்று இங்கு உள்ள பதமானது புருஷகாரம் மற்றும் உபாயம் ஆகும். “இரண்டும் குலைய” – என்பதன் பொருள் என்னவென்றால், ”இவனை ஏற்றுக் கொள்ளும்போது, இவனது தோஷங்கள் மற்றும் தாழ்ந்த குணங்கள் ஆகியவை அழிந்த பின்னரே ஏற்றுக் கொள்ளவேண்டும்”, என்று எண்ணியபடி, தன்னைப் பற்றுவதில் ருசியுள்ள சேதனனை அதுவரையில் ஏற்காமல் இருத்தல் ஆகும். இப்படி எம்பெருமான் இருந்தான் என்றால் இரண்டிற்கும் - புருஷகாரம் மற்றும் உபாயம் ஆகிய இரண்டிற்கும் தோஷம் மற்றும் குணக்கேடு உண்டாகியது - என்று பொருளாகும். எப்படி? தோஷம் உண்டாவது எப்படி என்றால்: ஸ்ரீவிஷ்ணுபுராணம் (7-9) – த்வம்மாதா ஸர்வலோகாநாம் தேவதேவோ ஹரி: பிதா - நீயே அனைத்து உலகிற்கும் தாயாக உள்ளாய், தேவர்களுக்கும் தேவனாக உள்ள ஸ்ரீஹரி தந்தையாக உள்ளான் - என்றும், சரணாகதி கத்யம் – அகிலஜகந் மாதரம் – அனைத்து உலகின் தாயாக – என்றும், சரணாகதி கத்யம் - பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய - நீ சராசரங்களுடன் உள்ள இந்த உலகின் தந்தை – என்றும் கூறியது காண்க. இந்த வரிகளின்படி எம்பெருமானும் பிராட்டியும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தந்தை மற்றும் தாயாக உள்ளனர். இவர்கள் மனிதர்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகிய இரண்டும் தங்களுடையதே என்று கொள்ளும்படியான உறவுமுறையுடன் உள்ளனர். இப்படி உள்ளபோது, மனிதர்களின் குற்றங்களைக் கண்டு அவர்களை ஏற்காமல் விட்டால், அந்த உறவுமுறைக்குத் தோஷம் வந்துவிடும் அல்லவோ? புருஷகாரம் மற்றும் உபாயம் ஆகிய இரண்டிற்கும் குணக்கேடு எப்படி உண்டாகும் என்றால் – மனிதர்களின் தோஷங்களைக் கண்டு இரக்கம் கொள்ளவில்லை என்றாலும், அந்தத் தோஷங்களை இன்பமாக ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும் இவர்களின் க்ருபை மற்றும் வாத்ஸல்யத்திற்குக் கேடு உண்டாகிறது. மேலே உள்ளபடி பொருள் கொள்ளாமல் “இரண்டுமுண்டாய்த்தாம்” என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம். அதாவது புருஷகாரம் மற்றும் உபாயம் ஆகிய இரண்டிற்கும் தோஷம் மற்றும் குணக்கேடு என்பது செய்யக்கூடாததைச் செய்தல் மற்றும் செய்யவேண்டியதைச் செய்யாமை என்று உண்டாகின்றன என்று கொள்ளலாம். இதனை விளக்குவோம். புருஷகாரத்திற்குச் செய்யத்தகாதவற்றைச் செய்தல் என்ற குற்றம் என்னவென்றால் - மக்களின் குற்றங்களுக்கு ஏற்ப அவர்களைத் தண்டிக்கும் இயல்பு கொண்டவனாகவே எம்பெருமான் உள்ளான். இப்படி அவன் நம்மைத் தண்டிக்காதபடி பார்த்துக்கொள்ளும் இயல்பை உடையவளாகப் பிராட்டி உள்ளாள். ஆயினும் பிராட்டி அந்த இயல்பை மாற்றிக் கொண்டு, “இவர்களின் தோஷங்கள் தீர்த்தால் மட்டுமே ஏற்பது”, என்று இருத்தல் தோஷமே ஆகும். புருஷகாரத்திற்குச் செய்யவேண்டியதைச் செய்யாமை என்ற குற்றம் என்னவென்றால் - மனிதர்களின் குற்றங்களை ஆராயாமல், அவர்களை ஏற்றுக்கொண்டு எம்பெருமானிடம் சேர்க்கின்ற தனது செயலைப் பிராட்டி செய்யாமை ஆகும். எம்பெருமானுக்குச் செய்யத்தகாதவற்றைச் செய்தல் என்ற குற்றம் என்னவென்றால் – மக்களின் தாழ்வைக் கண்டு அவர்களைக் கைவிடாமல், அவர்களுடன் இயல்பாகவே தனக்கு உள்ள உறவுமுறையை எண்ணியபடி இருப்பவன் எம்பெருமான் ஆவான்; அந்த உறவுமுறை காரணமாகவே தன்னிடம் த்வேஷம் பாராட்டினாலும், தங்களது ஸ்வபாவத்திற்கு மாறாகத் திரிந்தாலும் அவர்களுக்கு நன்மையை மட்டுமே எண்ணுகிறான்; ஆயினும் அவன் மக்களை ஏற்றுக் கொள்ளும்போது, “இவர்களின் தோஷங்கள் நீங்கினால் மட்டுமே ஏற்பேன், இல்லையேல் ஏற்கமாட்டேன்”, என்று இருத்தல் என்பது “செய்யத்தகாதவற்றைச் செய்தல்” என்ற தோஷத்தை உண்டாக்கிவிடும். அடுத்து எம்பெருமானுக்குச் செய்யவேண்டியதைச் செய்யாமை என்னும் குற்றம் எப்படி உண்டாகும் என்றால் – மனிதர்களின் தோஷங்களைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஏற்றுக் கொண்டு, தனது செயலான மக்களுக்கு விருப்பமாக இல்லாதவற்றை விலக்குதல் முதலானவற்றைச் செய்யாமல் இருத்தல் ஆகும். ஆனால் இந்த இரண்டு தோஷங்களும் (செய்யத்தகாதவற்றைச் செய்தல், செய்ய வேண்டியதைச் செய்யாமை) மனிதர்களுக்கு எவ்விதம் சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டதைச் செய்யவேண்டும், விலக்கப்பட்டதைத் தவிர்க்கவேண்டும் என்று பணிப்பது போன்று எம்பெருமானுக்கோ பிராட்டிக்கோ அல்ல; இவர்களில் தன்மைகளைக் கருத்தில் கொண்டு கூறப்பட்டதே ஆகும். தங்கள் மீது வெறுப்புடன் உள்ளவர்கள் விஷயத்தில் கூட, அவர்களது தோஷங்கள் மற்றும் குணக்கேட்டினை ஆராயாமல், அவர்களை அங்கீகரிக்கும் தன்மை கொண்டவர்களாகவே இருவரும் உள்ளனர். இப்படித் தங்களிடம் த்வேஷம் பாராட்டுபவர்களிடம் கூட தன்மையுடன் உள்ள இவர்கள், தங்களைப் பற்றுவதில் ருசி உள்ளவர்கள் விஷயத்தில், அவர்களை ஏற்பதற்குத் தோஷம் போன்றவை நீங்கவேண்டும் என்று காத்திருப்பது என்பது ஏற்படாது. ஆகவே இந்தத் தோஷங்கள் இவர்களுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி உள்ளபோதிலும் ஏன் இந்தச் சிந்தனை இவருக்குத் (ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர்) தோன்றியது என்றால்: பிராட்டி மற்றும் எம்பெருமான் ஆகிய இருவரின் உண்மையான தன்மைகளை அறியாதவர்களுக்கு - தங்களை (பிராட்டி, எம்பெருமான்) அண்டுவதில் ருசி உள்ளவர்களின் தோஷங்களும் குணக்கேடுகளும் அழியவேண்டும் என்று இவர்கள் காத்திருப்பதில்லை - என்று உணர்த்துவதற்காகவும், அவற்றுடனேயே ஏற்கின்றனர் என்று உணர்த்துவதற்காகவும் ஆகும்.