Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 15)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
புருஷகாரத்துக்குமுபாயத்துக்கும் வைபவமாவது தோஷத்தையும் குணாஹாநியையும் பார்த்து உபேக்ஷியாதவளவன்றிக்கே அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சையா க்குகை.
– ஆக, புருஷகாரோபாயங்களிரண்டுக்கும் அஸாதாரண வைபவத்தை யருளிச் செய்தார் கீழ், உபய ஸாதாரண வைபவத்தையருளிச் செய்கிறார் மேல் (புருஷகாரத்துக்குமென் று தொடங்கி).
இதுவரையில் புருஷகாரம் மற்றும் உபாயம் ஆகிய இரண்டிற்கும் உள்ள மேன்மைகளை தனித்தனியே அருளிச்செய்தார். இனி இவை இரண்டிற்கும் பொதுவாக உள்ள மேன்மைகளை அருளிச் செய்கிறார்.
தத்ததஸாதாரண வைபவஞ் சொல்லுகையாலே புருஷகாரத்தையுமுபாயத் தையும் தனித்தனியே உபாதாநம் பண்ணியருளிச் செய்தார் கீழ், இது உபயத்துக்கும் ஸாதாரண வைபவகதனமாகையாலே (புருஷகாரத்துக்குமுபாயத்துக்கும்) என்று தந்த்ரே ணோபாதாநம் பண்ணியருளிச் செய்கிறார்; உபயத்துக்கும் அஸாதாரண வைபவம் சொல்லுகிறவிடங்களில் (இருவரையுந் திருத்துவது) இத்யாதியாலே சாப்தமாக புருஷகார ஸ்வரூபமும், (உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக்கொள்ளுகையாலே) என்கையாலே ஆர்த்தமாக உபாய ஸ்வரூபமுஞ் சொல்லப்பட்டது. இங்கு உபய ஸ்வரூப கதநபூர்வகமாக வைபவத்தையருளிச் செய்கிறார். (தோஷத்தையும் குணஹாநியையும் பார்த்து உபேக்ஷியாதவள வன்றிக்கே, அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சையாக்குகை) என்று. தோஷமாவது - அக்ருத்யகரணாதி நிஷித்தாநுஷ்டாநம்; குணஹாநியாவது - விஹிதாகரணம்; இவை இரண்டையும், மநோவாக்காயை: இத்யாதி சூர்ணையாலே எம்பெருமானார் அருளிச் செய்தாரிறே. இதம் குரு, இதம் மாகார்ஷீ: என்று விதி நிஷேதாத்மகமான சாஸ்த்ரந்தான் பகவதாஜ்ஞா ரூபமாயிறேயிருப்பது. ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா என்று தானே யருளிச் செய்தானிறே. ஏவம்பூத சாஸ்த்ரத்தில் நிஷித்தத்தைச் செய்கையும், விஹிதத்தைச் செய்யாமையுமிறே அநாதிகாலம் க்ஷிபாமி, நக்ஷமாமி என்னும் பகவந் நிக்ரஹத்துக் கிலக்காய்ப் போருகைக்குக் காரணம். (இவை இரண்டையும் பார்த்து உபேக்ஷியாத வளவன்றிக்கே) என்றது - ஆச்ரயணோந்முக சேதநகதங்களான இவற்றை தர்சித்து இவனை வேண்டோமென்று கைவிடாதே அங்கீகரிக்கும் மாத்ரமன்றிக்கே என்றபடி. (அங்கீகாரத்துக்கவை தன்னையே பச்சையாக்குகை) யாவது அப்படிப்பட்ட தோஷகுணஹாநிகள் தன்னையே முகமலர்ந்து அங்கீகரிக்கைக்குறுப்பான உபஹாரமாகக் கொள்ளுகை. உபேக்ஷியாமைக்கு ஹேது - தயா க்ஷாந்திகள், பச்சை யாகக் கொள்ளுகைக்கு ஹேது - வாத்ஸல்யம். சுவடுபட்ட தரையில் புற்கவ்வாத பசு தன் கடையில் நின்றும் விழுந்த கன்றினுடம்பில் வழும்பை போக்யமாக விரும்புமாப்போலே யிருப்பதொன்றிறேயிது. இக்குணத்துக்கொப்பதொரு குணமில்லையிறே. ஆகையா லேயிறே நிகரில் புகழாய் என்று ஆழ்வாரருளிச்செய்தது; உடையவரும் அபார காருண்ய ஸௌசீல்ய வாத்ஸல்ய என்று குணாந்தரங்களோடொக்கவருளிச்செய்தே, இதன் வ்யாவ்ருத்தி தோற்ற மீளவும் ஆச்ரித வாத்ஸல்யைக ஜலதே என்றாரிறே. இவ்வாத்ஸல்யந்தான் மாத்ருத்வ ஸம்பந்தத்தாலே, ஈச்வரனிலும் பிராட்டிக்கு அதிசயித்திறேயிருப்பது. ஆகையாலே இருவரும் தாந்தாமங்கீகரிக்கும் தசையில், இச்சேதனனுடைய தோஷகுணஹாநிகளைப் பச்சையாகக் கொண்டு அங்கீகரிப்பர்க ளென்கை.
புருஷகாரம் மற்றும் உபாயம் ஆகிய இரண்டிற்கும் அவற்றுக்கு உள்ள மேன்மைகளைக் கூற எண்ணி, புருஷகாரம் மற்றும் உபாயங்களைத் தனித்தனியே இதுவரை அருளிச்செய்தார். அடுத்து இரண்டையும் சேர்த்துக் கூறும் பகுதியாக உள்ளதால், இரண்டிற்கும் பொதுவாக உள்ள மேன்மைகளை விளக்குகிறார். புருஷகாரம் மற்றும் உபாயம் ஆகிய இரண்டையும் தனித்தனியே கூறிய பகுதிகளில், “இருவரையும் திருத்துவது” போன்ற சூர்ணைகள் மூலம் சொற்களின் வலிமை கொண்டு புருஷகாரத்தின் தன்மை வெளிப்பட்டதை உணர்த்தினார்; “உபாய க்ருத்யத்தையும் தானே ஏற்பட்டுக் கொள்ளுகையாலே” முதலிய சூர்ணைகள் மூலமாக அர்த்தங்களின் வலிமையால் உபாயத்தின் மேன்மை வெளிப்பட்டதை உணர்த்தினார். இங்கு அவற்றின் தன்மைகளை உணர்த்துவதற்கு முன்பாக அவற்றின் மேன்மைகளை வெளிப்படுத்துகிறார். – தோஷம் என்றால் செய்யக்கூடாததைச் செய்தல் போன்றவை ஆகும். குண ஹாநி என்றால் செய்யவேண்டும் என்பதைக் செய்யாமல் விடுதல் ஆகும். இவை இரண்டையும் எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் – மநோவாக்காயை: - என்று அருளிச் செய்தார் (இதன் விரிவை அடியேனின் கத்யத்ரய நூலில் காண்க). இதம் குரு - இதனைச் செய்வாயாக, இதம் மாகார்ஷீ: - இதனைச் செய்தல் கூடாது - என்று விதிப்பதும், நீக்குவதும் என உள்ள சாஸ்த்ரங்கள் எம்பெருமானின் கட்டளைகளாகவே அல்லவோ உள்ளன? பாஞ்சராத்ரத்தில் - ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா – வேதங்கள் மற்றும் ஸ்ம்ருதிகள் எனது கட்டளைகள் – என்று எம்பெருமான் தானே அருளிச்செய்தான் அல்லவோ? இப்படிப்பட்ட சாஸ்த்ரங்களில் விலக்கப்பட்டதை செய்வது, அவற்றில் விதிக்கப்பட்டதைச் செய்யாமல் விடுவது போன்றவற்றை நாம் எல்லையற்ற காலங்களாகச் செய்தபடி உள்ளோம். இப்படியாக உள்ள நமது நிலையே எம்பெருமான் – க்ஷிபாமி, நக்ஷமாமி – என்று நம்மைத் தனது தண்டனைகளுக்கு இலக்காக வைப்பதன் காரணமாக உள்ளது (க்ஷிபாமி, நக்ஷமாமி போன்றவற்றைச் சூர்ணை 7-ல் காண்க). (இவை இரண்டையும்) - தன்னைப் பற்றுவதில் சிலருக்கு எல்லையற்ற ஆசை இருக்கும். அவர்களிடம் உள்ள இது போன்ற தோஷங்களையும், தாழ்வையும் அவன் எண்ணாமல், “இவனை நாம் வேண்டாம் என்று தள்ளக்கூடாது” என்று ஏற்றுக்கொள்கிறான். அத்துடன் மட்டும் எம்பெருமான் நிற்பதில்லை. (அங்கீகாரத்துக்கவை தன்னையே பச்சையாக்குகை) - அவர்களது அந்தத் தோஷங்களை அவன் மிகவும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு, தான் அவர்களை ஏற்றுக் கொள்வதற்கான உபகாரமாக அவற்றைக் கொள்கிறான். அவர்களைத் தள்ளாமல் ஏற்றுக் கொள்வதற்குக் காரணம் அவனுடைய தயை குணமும், பொறுமையும் ஆகும். அவர்களது தோஷங்களையும் ஏற்பது என்பது வாத்ஸல்யம் காரணமாக ஆகும். இதற்குப் பசுவை உதாரணம் காட்டுகிறார் - மனிதனின் கால் தடம் பதிந்த இடத்தில் உள்ள புல்லைப் பசு தின்னாது; ஆனால் தான் ஈன்ற கன்றானது தரையில் விழுந்தவுடன், அதன் மீது உள்ள அழுக்கைத் தனது நாக்கால் துடைத்து விடுகிறது. இது போன்று எம்பெருமான் குணம் உள்ளது. இத்தகைய குணத்துக்கு ஒப்பான குணம் வேறு ஏதும் இல்லை. இதானால் அல்லவோ நம்மாழ்வார் திருவாய்மொழியில் (6-10-10) - நிகரில் புகழாய் - என்றார்? உடையவர் சரணாகதி கத்யத்தில் – அபார காருண்ய சௌசீல்ய வாத்ஸல்ய - என்று மற்ற குணங்களுடன் சேர்த்து வாத்ஸல்யத்தையும் அருளிய போதிலும், இந்த வாத்ஸல்யத்தின் மேன்மையை வெளிப்படுத்த எண்ணியவராக – ஆச்ரித வாத்ஸல்யைக ஜலதே - என்று தனியாக அருளிச்செய்தார். இத்தகைய வாத்ஸல்யம் என்பது ஈச்வரனிடம் உள்ளதைக் காட்டிலும் தாயாக உள்ளதால் பிராட்டியிடம் அதிகமாகவே காணப்படும். ஆகவேதான் இவர்கள் இருவரும் சேதனர்களை ஏற்றுக் கொள்ளும்போது, சேதனர்களின் தோஷங்களை உபகாரமாகக் கொள்வார்கள் என்று கருத்து (உபகாரம் என்றால் உதவுதல்; நம்மிடம் உள்ள தோஷங்கள், அவர்கள் இருவரும் நமக்கு உதவ உபகாரமாக உள்ளன என்று கருத்து).