Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 14)

முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்

அறியாதவர்த்தங்களையடையவறிவித்து ஆசார்யக்ருத்யத்தையும் புருஷகார க்ருத்யத்தையும் உபாய க்ருத்யத்தையும் தானேயேறிட்டுக் கொள்ளுகையாலே மஹாபாரதத்திலுபாய வைபவமும் சொல்லிற்றாய்த்து.

க்ருபாதிகளை வெளியிட்டமை சொன்னபோதே ஸ்ரீராமாயணத்தில் புருஷகார வைபவம் முக்தமானபடியையுபபாதித்தாராய், மஹாபாரதத்தில் உபாய வைபவ முக்தமானமையையுபபாதிக்கிறார் மேல் (அறியாத என்று தொடங்கி).

கருணை முதலான திருக்கல்யாண குணங்களை வெளியிட்டது பற்றிக் கூறும்போது ஸ்ரீஇராமாயணத்தில் புருஷகார வைபவம் எவ்விதம் உணர்த்தப்பட்டது என்பதை அருளிச்செய்தார். இனி மஹாபாரதத்தில் உபாயவைபவம் கூறப்பட்டதை இங்கு அருளிச்செய்கிறார்.

அஜ்ஞாத ஜ்ஞாபனம் ஆசார்ய க்ருத்யமிறே, சரண்ய க்ருத்யமன்றே, ஆகையிறே என்னைப் பெற்றவத் தாயாய்த் தந்தையாய் என்று ப்ரியகரத்வ ஹிதகரத்வங்களாகிற மாதா பித்ரு க்ருத்யங்களை ஸ்வயமேவ தமக்குச் செய்த உபகாரத்தையருளிச் செய்தவநந்தரம் ஆசார்யன் செய்யும் விசேஷோபகாரத்தையும் தானே தமக்குச் செய்தமையையருளிச் செய்கிறவாழ்வார் அறியாதனவறிவித்த என்றருளிச் செய்தது. இவ்விடத்தில் இவரருளிச்செய்கிற வாக்யந்தான் அந்த திவ்ய ஸூக்திக்கு ஸூசகமாயிறேயிருக்கிறது. – (அறியாதவர்த்தங்களையடைய அறிவிக்கையாவது) - தத்வ விவேகந் தொடங்கி ப்ரபத்திபர்யந்தமாக அர்ஜுநனுக்கு முன்பு அஜ்ஞாதமாயிருந்த வர்த்தங்களை யெல்லா மறிவிக்கை; தேஹாத்மாபிமாநியாய் தேஹாநுபந்திகளான பந்துக்கள் பக்கலிலே அஸ்தாநே ஸ்நேஹத்தைப் பண்ணி நிற்கிறவிவனை ப்ரக்ருத்யாத்ம விவேகாதிகளாலே தெளிவிக்க வேண்டுகையாலே, நத்வே வாஹம் ஜாது நாஸம் நத்வம் நேமே ஜநாதிபா: நசைவ நபவிஷ்யாமஸ் ஸர்வே வயமத: பரம்; தேஹிநோஸ்மிந் யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி இத்யாதிகளாலே ப்ரக்ருத்யாத்மவிவேகம், ஆத்மபரமாத்மவிவேகமாகிற தத்த்வ விவேகத்தையும், அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா ச்சரீரிண: அநாசிநோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத; ந ஜாயதே ம்ரியதேவா கதாசிந் நாயம் பூத்வா பவிதாவா நபூய:, அஜோ நித்யச் சாச்வதோயம் புராணோ நஹந்யதே ஹந்யமாநே சரீரே, வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோபராணி, ததா சரீராணி விஹாய ஜீர்ணாந் யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ இத்யாதிகளாலே ஆத்ம நித்யத்வ தேஹாத்ய நித்யங்களையும் ப்ரதமமுபதேசித்து, இவனுடைய ஸ்வாதந்த்ர்ய ப்ரமத்தைத் தவிர்க்கைக்காக பூமிராபோ நலோ வாயு: கம் மநோ புத்திரேவச அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா; அபரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம், ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் என்கிறபடியே சேதநாசேதந சரீரியாய் ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநஞ்ச என்றும், ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் ஹ்ருத் தேசேர்ஜுந திஷ்டதி ப்ராமயந் ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா என்றும் சொல்லுகிறபடியே ஸர்வஜந ஹ்ருதயஸ்தனாய் நின்று, ஸகல ப்ரவிருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கையாகிற தன்னுடைய நியந்த்ருத்வத்தையும்; அப்படி ஸர்வ நியந்தாவாய்க் கொண்டு ஸர்வஸ்மாத் பரனாயிருக்குமளவன்றிக்கே பரித்ராணாய ஸாதுநாம் விநாசாயச துஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே என்று அவதார ப்ரயுக்தமான தன்னுடைய ஸௌலப்யத்தையும்; ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய: என்று தன்னுடைய ஆச்ரயணீயத்வே ஸாம்யத்தையும்; ப்ரக்ருதே: க்ரியமாணாதி குணை: கர்மாணி ஸர்வச:, அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமிதீ மந்யதே என்றஹங்கார தோஷத்தையும்; யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித: இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந: என்றிந்த்ரிய ப்ராபல்யத்தையும் அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹஞ் சலம் என்று அந்த ப்ராபல்யத்தில் மற்றை இந்த்ரியங்களைப் பற்றவும் மநஸ்ஸினுடைய ப்ராதாந்யத்தையும் தர்சிப்பிக்கையாலே ஆச்ரயண விரோதிகளையும், தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத் மத்பர:, வசேஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா என்றும், யதோயதோ நிச்சலதி மநச்சஞ்சலமஸ்திரம் ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வசம் நயேத் என்று ஆச்ரயணோ பகரணங்களான பாஹ்யாப்யந்தர கரணங்களை ஸ்வாதீநமாக நியமிக்கும் ப்ரகாரத்தையும், சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸுக்ருதிநோர்ஜுந ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப என்று ஆச்ரயிக்குமதிகாரிகளுடை சாதுர்வித்யத்தையும்; த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவச, தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா என்று தன்னுடைய ஆஜ்ஞாநுவர்த்தந பரரானவர்கள் தேவர்கள், தததிவர்த்தநபரரானவர்கள் அஸுரர்கள் என்று தேவாஸுர விபாகத்தையும்; ஹந்த தே கதயிஷ்யாமி விபூதிராத்மநச் சுபா: ப்ராதாந்யத: குருச்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே என்று தொடங்கி இவ்விபூதியில் ஸமஸ்த பதார்த்தங்களுக்கும் வாசகமான சப்தங்கள் தன்னளவிலே பர்யவஸிக்கும்படி இவற்றையடைய ஸ்வப்ரகாரமாகக் கொண்டு வ்யாபித்து நிற்கும்படியையும் திவ்யம் ததாமி தே சக்ஷு பச்ய மே யோகமைச்வரம் என்று திவ்ய சக்ஷுஸ்ஸைக் கொடுத்து, பச்யாமி தேவாந் தவ தேவ தேஹே ஸர்வாந் ததா பூதவிசேஷ ஸங்காத், ப்ரஹ்மாண மீசம் கமலாஸநஸ்த்தம் ருஷீம்ச்ச ஸர்வாந் உரகாம்ச்ச தீப்தாந் இத்யாதியாலே தன்னுடைய விச்வரூபத்தைக் கண்டு பேசும்படி பண்ணுகையாலே, தானுகந்தார்க்கு திவ்ய ஜ்ஞாநத்தைக் கொடுத்து தன்படிகளை தர்சிப்பிக்குமென்னு மத்தையும், மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு, மாமேவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மாநம் மத்பராயண: என்று இப்படியிருந்துள்ள பரத்வ ஸௌலப்ய யுக்தனான தன் திருவடிகளை ப்ராபிக்கையாகிற பரமபுருஷார்த்தத்துக்கு உபாயமா யிருந்துள்ள கர்ம ஜ்ஞாந ரூபாங்க ஸஹிதையான பக்தியையும்; மாமேவ யே ப்ரத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே, தமேவசாத்யம் புருஷம் ப்ரபத்யேத், தமேவ சரணங் கச்ச ஸர்வபாவேந பாரத என்று அந்த பக்த்யங்கமான ப்ரபத்தியையும்; சரம ச்லோகத்தாலே அந்த பக்த்யுபாயத்தின் துஷ்கரத்வாதிகளையுணர்ந்து சோகிப்பார்க்கு ஸுகரமுமாய் ஸ்வரூபாநுரூபமுமான உபாயம் ப்ரபத்தியென்னுமத்தையும் தானே அறிவித்தருளி னானிறே. ஆக இப்படி அறியாதவர்த்தங்களையெல்லாமறிவிக்கையாலே ஆசார்ய க்ருத்யத்தைத் தான் ஏறிட்டுக் கொண்டானென்கிறது. இனி புருஷகார க்ருத்யமும் சரண்யனான தன்னதன்றே, பிராட்டிக்ருத்ய மிறே, மத்ப்ராப்திம் ப்ரதி ஜந்தூநாம் ஸம்ஸாரே பததாமத: லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி: மமாபி ச மதம் ஹ்யேதத் நாந்யதா லக்ஷணம் பவேத் இத்யாதிகளாலே பகவத் சாஸ்த்ரத்திலே தானேயருளிச் செய்தானிறே. இவனுக்கு தத்வஜ்ஞாநாதிகளையுண்டாக்கிக் கொள்ள வேண்டுகையாலே ஆசார்ய க்ருத்யத்தை யேறிட்டுக் கொண்டானாகிறான். புருஷகார க்ருத்யமேறிட்டுக் கொள்ள வேண்டுவானென்? அங்கீகரித்துவிடவமையாதோவென்னில், அங்கீகாரத்துக்கு இதுவும் அவச்யாபேக்ஷிதமாகையாலே; எங்ஙனேயென்னில், இவ்வுபாயத்துக்கு புருஷ ஸாபேக்ஷதையோபாதி புருஷகார ஸாபேக்ஷதையுமுண்டிறே, இவ்வுபய ஸாபேக்ஷதையும் உபாயவரண ரூபமான பூர்வவாக்யத்தில் ப்ரதமசரம் பதங்களிலே காணலாம்; ஸ்ரீ சப்தத்தாலே புருஷகாரத்தையும் உத்தமனாலே அதிகாரியையுமிறே சொல்லுகிறது; ஆகையாலே சேதநர் தன்னை உபாயமாகப் பற்றுமிடத்தில் ஸ்வாபராத பயத்தாலே பிராட்டியைப் புருஷகாரமாக முன்னிட, அவள் இவனபராத நிபந்தநமான தன் திருவுள்ளத்தில் சீற்றத்தையாற்றிச் சேரவிட, கைக்கொள்ளுகை முறையாயிருக்க, அங்ஙனன்றிக்கே இவன் அபராத நிபந்தநமான தன் திருவுள்ளத்தின் கலக்கத்தையும் தானே தணித்துக்கொண்டு இவனைச் சேர்த்துக் கொள்ளுகையாலும், அதுதான் செய்கிறவளவில் அர்த்தித்வ நிரபேக்ஷமாகச் செய்கையாலும் புருஷகார க்ருத்யத்தையும் தானேயேறிட்டுக் கொண்டானென்கிறது. இனி உபாய க்ருத்யம் தன்னதாயிருக்க அத்தையும் தானேயறிட்டுக் கொண்டானென்கிறது, த்வமேவோபாய பூதா மே பவ என்றிவனர்த்தித்தால் கார்யஞ் செய்ய அமைந்திருக்க, நாமே இவனுக்கு உபாயமாய் அநிஷ்டநிவ்ருத்த்யாதிகளைப் பண்ணக்கடவோமென்று தானேயென்று கொண்டு மாமேகம் சரணம் வ்ரஜ, ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கையாலே; அல்லது உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணௌ என்கிற வஸ்துவுக்கு உபாயக்ருத்யம் வந்தேறியன்றிறே; உபயலிங்க விசிஷ்டத்வத்தாலே உபாயோபேயத்வங்களிரண்டும் ஸ்வதஸ் ஸித்தமாயிறே யிருப்பது. அன்றிக்கே உபேயமான தன்னை உபாயமாக்குகையாலே உபாய க்ருத்யதையேறிட்டுக் கொண்டானென்கிறதென்பாருமுண்டு; அது பால் மருந்தாமாப் போலே இவனுபாயமாமிடமெங்குமுள்ளதொன்றாகையாலே, அர்ஜுனனுக்கிப்போது அஸாதாரணமாகச்செய்ததொன்றல்லாமையாலும், “உபாயம்” என்றே வஸ்துவை நிர்தேசித்து தத்வைபவஞ் சொல்லுகிற ப்ரகரணமாகையாலும் இவ்விடத்துக்கு உசிதமன்று; ஆன பின்பு கீழ்ச்சொன்னபடியே பொருளாக வேணும். – ஆசார்யக்ருத்யமேறிட்டுக் கொள்ளுகிறவளவில் கார்ப்பண்ய தோஷோபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வா தர்ம ஸம்மூடசேதா: யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம் என்று இவனர்த்தித்தவமுண்டாகையாலே அந்யக்ருத்யத்தைத் தான் ஏறிட்டுக் கொண்ட மாத்ரமே விவக்ஷிதமாகையாலும், புருஷகார க்ருத்யமேறிட்டுக் கொள்ளுகிறவளவில் அந்ய க்ருத்யத்தையேறிட்டுக் கொண்டமையும், அது தன்னை அர்த்தித்வ நிரபேக்ஷமாக ஏறிட்டுக் கொண்டமையும் விலக்ஷிதமாகையாலும், ஸ்வ க்ருத்யமேறிட்டுக் கொள்ளுகிறவளவில் அர்த்தித்வ நிரபேக்ஷமாகச் செய்தவளவே விவக்ஷிதமாகையாலும், (தானேயேறிட்டுக் கொள்ளுகையாலே) என்கிறவிது க்ருத்யத்ரயத்திலும் யதாயோகம் அந்வயிக்கக் கடவது; ஆசார்ய அஜ்ஞாதஜ்ஞாபநம் பண்ண, பிராட்டி புருஷீகரிக்க, வந்த தன்னை உபாயமாகப் பற்றினவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்யாதிகளைப் பண்ணிக் கொடுக்க வமைந்திருக்க, இவையெல்லாவற்றையும் தானேயேறிட்டுக் கொண்டது வைபவமிறே (ஏறிட்டுக் கொள்ளுகையாலே மஹாபாரதத்திலுபாய வைபவஞ் சொல்லிற்றாய்த்து) என்றது, ஏறிட்டுக் கொண்டமையை ப்ரதிபாதிக்கையாலே சொல்லிற்றாய்த்தென்றபடி.

அறியாதவைகளை அறிய வைத்தல் என்பது ஆசார்யனின் செயல் அல்லாமல் ஸர்வேச்வரனின் செயல் அல்ல. இதனைக் கருத்தில் கொண்டு அல்லவோ நம்மாழ்வார் திருவாய்மொழியில் (2-3-2) - என்னைப் பெற்றவத் தாயாய்த் தந்தையாய் - என்று அருளிச்செய்தார்? அதாவது விரும்பிய செயலைச் செய்தல் தாயின் செயல், நன்மைகளைச் செய்தல் தந்தையின் செயல் என்பது நீதியாகும். இப்படிப்பட்ட செயல்களை ஸர்வேஸ்வரன் தானாகவே முன்வந்து ஆழ்வாருக்குச் செய்தான் என்று அவன் செய்த உபகாரத்தினை அருளிச்செய்தார். இதன் பின்னர் ஆசார்யன் செய்யவேண்டிய விசேஷமான உபகாரத்தையும் ஸர்வேச்வரன் தானாகவே செய்தருளினான் என்பதை திருவாய்மொழி (2-3-2) - அறியாதனவறிவித்த – என்று அருளிச்செய்தார். இங்கு ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த இந்தச் சூர்ணை, அந்தத் திருவாய்மொழியை உணர்த்துவதாகவே உள்ளது. அறியாத அர்த்தங்களை முழுமையாக அறிவித்தல் என்றால் தத்வவிவேகம் தொடக்கமாக ப்ரபத்தி முடிய அர்ஜுனன் இதுவரை அறியாமல் இருந்த அர்த்தங்கள் அனைத்தையும் அறியும்படிச் செய்தல் ஆகும். உடலே ஆத்மா என்று எண்ணியவனாக, உடல் தொடர்பு காரணமாக உறவினர்கள் மீது தகாத இடத்தில் அன்பு பூண்டவனாக அர்ஜுனன் நின்றான். அவனை, “ஆத்மா வேறு உடல் வேறு”, என்பது உள்ளிட்ட பல உபதேசங்கள் மூலம் தெளிவாக்கவேண்டும் என்று ஸர்வேச்வரனாகிய க்ருஷ்ணன் முடிவு செய்தான். ஆகையால் கீழே உள்ள பல வரிகள் மூலம், “சரீரம் வேறு ஆத்மா வேறு” என்பது பற்றியும், ஆத்மா மற்றும் பரமாத்மா என்பதற்கு இடையில் உள்ள வேறுபாடு பற்றியும் உள்ள தத்துவ விவேகத்தை உணர்த்தினான்: • கீதை (2-12) - நத்வே வாஹம் ஜாது நாஸம் நத்வம் நேமே ஜநாதிபா: நசைவ நபவிஷ்யாமஸ் ஸர்வே வயமத: பரம் – ஒரு காலத்தில் நான் இல்லை என்பது இல்லை, நீ இல்லை என்பது இல்லை, இந்த அரசர்கள் இல்லை என்பது இல்லை; நான், நீ, இவர்கள் எதிர்காலத்தில் இல்லாமல் இருப்போம் என்பதும் இல்லை. • கீதை (2-13) - தேஹிநோஸ்மிந் யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி - சரீரத்தில் உள்ள ஆத்மாவிற்கு எவ்விதம் சரீரத்தில் ஏற்படும் இளமை, வாலிபம், வயோதிகம் பற்றி வருத்தம் இல்லையோ அது போன்று வேறு சரீரம் அடைவது பற்றியும் ஆத்மாவிற்கு வருத்தம் இல்லை; இதில் உறுதியாக உள்ள ஒருவன் வருந்தமாட்டான். அடுத்து கீழே உள்ள வரிகள் மூலம் ஆத்மா எப்போதும் உள்ளது என்பதையும், சரீரம் போன்றவை அழிந்துவிடும் என்பதையும் முதலில் உபதேசித்தான்: • கீதை(2-18) - அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா ச்சரீரிண: அநாசிநோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத – பரத குலத்தில் உயர்ந்தவனே! நாம் காணும் இந்த சரீரம் அனைத்தும் நம்மால் காண இயலாததும், அழிவில்லாததும், அறிய இயலாததும் ஆகிய ஆத்மாவிற்கு உரியது ஆகும். இவை கர்மபலன் கழிந்தவுடன் அழிந்துவிடும். இவற்றைப் பற்றிக் கவலை கொள்ளாமல் யுத்தம் செய்வாயாக. • கீதை (2-20) - ந ஜாயதே ம்ரியதேவா கதாசிந் நாயம் பூத்வா பவிதாவா நபூய:, அஜோ நித்யச் சாச்வதோயம் புராணோ நஹந்யதே ஹந்யமாநே சரீரே – ஆத்மா என்றும் தோன்றுவதும் இல்லை, அழிவதும் இல்லை. ஸ்ருஷ்டிகாலத்தில் தோன்றுவதும் இல்லை, ப்ரளய காலத்தில் அழிவதும் இல்லை; இவன் பிறப்பற்றவன், அழிவற்றவன், மாற்றம் அடையாதவன், பழமையானவன் ஆவான். ஆகவே இந்த சரீரம் அழிந்தாலும் இதற்குள் இருக்கும் ஆத்மா அழிவதில்லை. • கீதை (2-22) - வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோபராணி, ததா சரீராணி விஹாய ஜீர்ணாந் யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ - தனது உடை கிழிந்துவிட்டால் நாம் வேறு உடை உடுத்துவது போன்று ஆத்மாவானது ஓர் உடலைக் கைவிட்டு மற்றொன்றை எடுத்துக்கொள்கிறது. மேலும் அர்ஜுனன் தானே அனைத்தையும் செய்வதாக எண்ணியுள்ள ஸ்வதந்த்ர மயக்கத்தை நீக்குவதற்காகக் கீழே உள்ளபடி உபதேசிக்கிறான். இவை மூலம் அறிவுள்ள பொருள்கள், அறிவில்லாப் பொருள்கள் ஆகிய அனைத்திற்கும் தானே ஆத்மாவாக உள்ளதைக் உணர்த்துகிறான்: • கீதை (7-4) – பூமிராபோ நலோ வாயு: கம் மநோ புத்திரேவச அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா - பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய அனைத்தும் எனது சரீரமாக உள்ளன. • கீதை (7-5) - அபரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம், ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் – கடந்த ச்லோகத்தில் கூறப்பட்ட ப்ரக்ருதி என்பது தாழ்வானது. இதனைக் காட்டிலும் உயர்ந்த எனது ப்ரக்ருதியை நீ அறிந்து கொள்வாயாக. தொடர்ந்து அனைத்து உயிர்களின் இதயங்களில் நின்று செயல்களைச் செய்தல், செயல்களைச் செய்யாமல் இருத்தல் போன்றவற்றை நியமிக்கின்ற தனது தன்மையைக் கீழே உள்ள வரிகளில் கூறுகிறான்: • கீதை (15-15) – ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநஞ்ச - அனைத்து உயிர்களின் இதயத்தில் நான் உள்ளேன். அவைகளுக்கு உண்டாகும் நினைவு, ஞானம் மற்றும் மறதி ஆகியவை என்னால் உண்டாகின்றன. • கீதை (18-61) - ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் ஹ்ருத் தேசேர்ஜுந திஷ்டதி ப்ராமயந் ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா - அனைத்து உயிர்களுக்கும் ஸர்வேச்வரனாகிய வாஸுதேவன் அனைத்து உயிர்களின் இதயங்களிலும் உள்ளான். சரீரம் என்ற இயந்திரத்தில் உள்ள உயிர்களை அவற்றின் குணங்களுக்கு ஏற்றபடி அவனே இயக்குகிறான். இப்படியாக அனைத்தையும் தான் நியமிப்பவனாக உள்ள போதிலும், அனைத்துப் பொருள்களுக்கும் பெரியவனாக உள்ளபோதிலும், கீதை (4-8) – பரித்ராணாய ஸாதுநாம் விநாசாயச துஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே – ஸாதுக்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டவும் ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறேன் - என்பதன் மூலம் தனது எளிமையை உணர்த்துகிறான். கீதை (9-29) - ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய: – அனைத்து உயிரினங்களுக்கும் நான் சமமாகவே உள்ளேன், நான் யாரையும் வெறுப்பதும் இல்லை, யாரையும் உயர்ந்தவன் என்று எண்ணி அவனை மட்டுமே ப்ரியத்துடன் காண்பதும் இல்லை - என்பதன் மூலம் தன்னை அடைந்தவர்களுக்கு தான் சமமாக உள்ள தன்மையை உணர்த்துகிறான். கீதை (3-27) - ப்ரக்ருதே: க்ரியமாணாதி குணை: கர்மாணி ஸர்வச:, அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமிதீ மந்யதே – இந்த உலகில் அனைத்து செயல்களும் மூன்று குணங்களால் நடைபெறுகின்றன, இதனை உணராமல் அஹங்காரம் கொண்ட ஒருவன் அனைத்தையும் தானே செய்வதாக எண்ணுகிறான் – என்பதன் மூலம் அஹங்காரத்தால் ஏற்படும் குற்றத்தை உணர்த்துகிறான். கீதை (2-60) – யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித: இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந: - சிறந்த அறிவுள்ளவனாக இருந்தபோதிலும் அவனுடைய புலன்கள் மிகவும் பலம் உள்ளவையாக, அவனது மனதைத் தங்கள் பக்கம் இழுக்கின்றன - என்பதன் மூலம் இந்த்ரியங்களின் வலிமையை உணர்த்துகிறான். கீதை (6-35) - அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹஞ் சலம் – தோள்களில் வலிமை கொண்ட அர்ஜுனா! மனம் என்பது திரிந்து கொண்டே இருக்கும், இதனை அடக்குவது கடினம் என்பதில் சந்தேகம் இல்லை - என்பதன் மூலம் மற்ற இந்த்ரியங்களைக் காட்டிலும் மனமானது வலிமையில் முதலிடம் பெற்றுள்ளது என்பதை உணர்த்தி, இதனால் எம்பெருமானை அடைவதற்குத் தடையாக உள்ளதைக் காட்டினான். ஸர்வேச்வரனான தன்னை வந்தடைவதற்கு உதவுகின்ற உறுப்புக்களான புறக்கரணங்கள் மற்றும் அகக்கரணம் ஆகியவற்றைத் தனக்கு மட்டுமே வசப்படும்படியாக நியமனம் செய்வதைக் கீழே உள்ள வரிகளில் உணர்த்துகிறான்: • கீதை (2-61) - தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத் மத்பர: வசேஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா – அனைத்து இந்த்ரியங்களையும் அவற்றின் உணவாக உள்ள உலக விஷயங்களில் இருந்து விலக்கிக் கொண்டு இருப்பானாக. இப்படி உள்ள ஒருவனுக்கு மனம் உட்பட்ட அனைத்து இந்த்ரியங்களும் கட்டுப்பாட்டில் உள்ளதால் அறிவும் ஸ்திரமாக உள்ளது. • கீதை (6-26) - யதோயதோ நிச்சலதி மநச்சஞ்சலமஸ்திரம் ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வசம் நயேத் - யோகி ஒருவன் என்ன செய்யவேண்டும் என்றால், நிலையாக இல்லாமல் உள்ளதையும், அலைமோதுவதையும் இயல்பாக உடைய மனதை ஆத்மாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். இப்படிப்பட்ட மனதைத் திடீரென திசை திருப்பும் காரணங்களில் இருந்து விலக்கி விட வேண்டும். அடுத்து தன்னை வந்தடைகின்ற நான்குவிதமான மனிதர்கள் பற்றி கீதை (7-16) – சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸுக்ருதிநோர்ஜுந ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப - அர்ஜுனா! புண்ணியம் நிறைந்தவர்கள் நான்கு பிரிவினர் ஆவர். அவர்கள் என்னைச் சரணம் புகுந்து உபாஸிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் – துயரத்தில் உள்ளவர்கள், ஞானம் பெற விரும்புகிறவர்கள், செல்வம் பெற விரும்புவர்கள், என்னைப் பற்றிய ஞானம் உள்ளவர்கள் ஆவர் - என்று உரைத்தான். தனது ஆணைகளைப் பின்பற்றி நடப்பவர்கள் தேவர்கள் என்றும், ஆணைகளை மதிக்காமல் உள்ளவர்கள் அசுரர்கள் என்றும், இப்படியாத் தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய பிரிவினர் பற்றிக் கீழே உள்ளபடி உரைத்தான்: • கீதை (16-6) - த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவச - இந்த உலகில் உள்ள படைப்புகள் அனைத்தும் தேவர்களுக்கு உரிய தன்மை, அசுரர்களுக்கு உரிய தன்மை என்று இரண்டு பிரிவுகள் கொண்டதாக இருக்கும். • கீதை (16-5) - தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா – தேவர்களின் தன்மை என்பது ஸம்ஸாரத்தில் இருந்து விடுதலை அளிப்பதாகும், அசுரர்களின் தன்மை என்பது தாழ்வான பந்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும் குறிக்கும் அனைத்துச் சொற்களும் தன்னில் வந்து முடியும்படியாக, அவை அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டுள்ள தன்மையை கீதை (10-19) – ஹந்த தே கதயிஷ்யாமி விபூதிராத்மநச் சுபா: ப்ராதாந்யத: குருச்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே - குருகுலத்தில் உயர்ந்தவனே! எனது ஐச்வர்யம் மற்றும் நன்மைகள் அளிக்கவல்ல விபூதிகள் குறித்து உனக்கு நான் கூறுகிறேன். என்னுடைய இத்தகைய ஐச்வர்யங்களுக்கு எல்லையே இல்லை – என்பதன் மூலம் உணர்த்தினான். அடுத்து கீதை (11-8) - திவ்யம் ததாமி தே சக்ஷு பச்ய மே யோகமைச்வரம் – உனக்குத் தெய்வீகமான கண்களை நான் அளிக்கிறேன், அவற்றைக் கொண்டு எனது கல்யாண குணங்களையும் ஐச்வர்யங்களையும் நீ காண்பாயாக - என்பதன் மூலம் அர்ஜுனனுக்குத் தெய்வீகமான பார்வையை அளித்தான்; விச்வரூபம் எடுத்து நின்ற க்ருஷ்ணனிடம் அர்ஜுனன் கீதை (11-15) - பச்யாமி தேவாந் தவ தேவ தேஹே ஸர்வாந் ததா பூதவிசேஷ ஸங்காத் ப்ரஹ்மாண மீசம் கமலாஸநஸ்த்தம் ருஷீம்ச்ச ஸர்வாந் உரகாம்ச்ச தீப்தாந் - க்ருஷ்ணா! உனது சரீரத்தில் அனைத்து தேவர்களையும் நான் காண்கிறேன். நான்முகன், சிவன் ஆகியோரைக் காண்கிறேன். அனைத்து முனிவர்களையும், ஒளிவீசும் தேவலோகப் பாம்புகளையும் காண்கிறேன் – என்று தனது விச்வரூபத்தைக் கண்டு அர்ஜுனன் பேசும்படிச் செய்தான். ஆக இதன் மூலம் தான் யாரை விரும்புகிறானோ (தன்னை யார் விரும்புகிறானோ) அவர்களுக்குத் தெய்வீகமான ஞானத்தை அளித்து, தனது தன்மைகளை அவர்கள் காணும்படிச் செய்வதை உணர்த்துகிறான். அடுத்து தான் இருக்கின்ற பரத்வத்துடன் தனக்கு உள்ள ஸௌலப்யத்தை கீதை (9-34) – மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மாநம் மத்பராயண: – என்னிடம் உனது மனதைத் திருப்புவாயாக, எனது பக்தனாக அன்புடன் இருப்பாயாக, என்னிடம் உன்னை அர்ப்பணிப்பாயாக, என்னையே வணங்குவாயாக. என்னையே முழுவதுமாகச் சார்ந்து, என்னிடம் உனது ஆத்மாவை இணைத்து, என்னையே அடைவாயாக - என்று உணர்த்தினான். இதன் மூலம் தனது திருவடிகளை அடைதல் என்ற உயர்ந்த பேற்றுக்கு ஏற்ற உபாயமாக உள்ளதும், கர்மம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டையும் அங்கமாகக் கொண்டதும் ஆகிய பக்தியை உணர்த்தினான். இதனைத் தொடர்ந்து கீதை (7-14) - மாமேவ யே ப்ரத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே – எனது இத்தகைய மூன்று குணங்கள் என்ற மயக்கம் என்பதைக் கடக்க மிகவும் அரிது; யார் ஒருவன் என்னிடம் மட்டுமே சரணம் என்று அடைகிறார்களோ அவர்களே இதனைக் கடக்கின்றனர் – என்றும்; கீதை (15-64) - தமேவசாத்யம் புருஷம் ப்ரபத்யேத் – அந்த ஆதிபுருஷனைச் சரணம் அடைவாயாக – என்றும்; கீதை (18-62) - தமேவ சரணங் கச்ச ஸர்வபாவேந பாரத பரம்பொருளான என்னிடம் நீ அனைத்து வகையிலும் சரணம் அடைவாயாக – என்றும் கூறுவதன் மூலம் பக்திக்கு அங்கமாக உள்ள ப்ரபத்தியை உணர்த்தினான். அடுத்து பக்தி உபாயமானது செய்வதற்கு மிகவும் கடினமானது என்பதை உணர்ந்து செய்வதறியாமல் திகைத்து நிற்பவர்களுக்கு - செய்வதற்கு மிகவும் எளியதும், ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்றதும் ஆகிய உபாயம் மற்றும் ப்ரபத்தி என்பதை சரம ச்லோகம் மூலம் தானே வெளியிட்டான். இப்படியாக நாம் அறியாத பல விஷயங்களை இவன் தெரிவிப்பதன் மூலம் ஓர் ஆசார்யனின் செயலைத் தானே மேற்கொண்டான் என்பதை அறியலாம். – இனி புருஷகாரத்தைச் செய்கின்ற செயலானது அனைவருக்கும் புகலிடமாகத் திகழ்கின்ற தன்னுடைய செயல் அல்ல, அது பிராட்டியின் செயல் என்பதை பகவத் சாஸ்த்ரத்தில் – மத்ப்ராப்திம் ப்ரதி ஜந்தூநாம் ஸம்ஸாரே பததாமத: லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி: மமாபி ச மதம் ஹ்யேதத் நாந்யதா லக்ஷணம் பவேத் - இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் என்னை அடைவதற்கான புருஷகாரமாக மஹாலக்ஷ்மியே உள்ளாள் என்று முனிவர்களால் கூறப்பட்டாள்; அவள் இவ்விதம் புருஷகாரமாக உள்ள நிலை என்பது என்னால் ஏற்கப்பட்டதே ஆகும்; இதற்கு அவளைக் காட்டிலும் வேறான ஏதும் இல்லை – என்று உணர்த்தினான். தத்துவ ஞானம் முதலானவற்றை ஏற்படுத்த வேண்டும் என்பதால் ஆசார்யனின் செயலைத் தானே செய்தருளினான் என்பது சரியானதே ஆகும். ஆனால் புருஷகாரம் மூலமாக ஏன் தன்னை வந்தடையும்படிச் செய்யவேண்டும்? தானே நேரடியாக அங்கீகாரம் செய்து ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே என்ற சந்தேகம் எழலாம். அங்கீகாரம் செய்வதற்கு இது அவசியம் என்பதால், இது இன்றி அங்கீகாரம் இல்லை. எப்படி? இந்த உபாயத்திற்கு ப்ரபத்தி செய்கின்ற ஒருவன் வேண்டுவது போன்று, புருஷகாரமும் வேண்டப்படுவது ஆகும். இப்படியாக இந்த இரண்டும் வேண்டப்படுவதை த்வய மந்த்ரத்தில் உள்ள முதல் பதத்திலும் (ஸ்ரீமந்), முதல் வரியின் இறுதியில் உள்ள பதத்திலும் (ப்ரபத்யே) காணலாம். “ஸ்ரீ” என்பதன் மூலம் புருஷகாரத்தையும், ”ப்ரபத்யே” என்பதன் மூலம் அதிகாரியும் அல்லவோ கூறப்பட்டனர்? ஆக சேதனர்கள் ஸர்வேச்வரனை உபாயமாகப் பற்றும்போது, தங்களது குற்றங்களின் காரணமாக அச்சம் கொண்டு, பிராட்டியைப் புருஷகாரமாகக் கொள்கின்றனர். அவள் செய்வது என்னவென்றால், மனிதர்களின் குற்றம் காரணமாக எம்பெருமான் உள்ளத்தில் உள்ள கோபத்தைத் தணித்து, மனிதர்களை அவனிடம் சேர்க்கிறாள். இதுவே எம்பெருமான் சேதனர்களைத் தன்பக்கம் சேர்த்துக் கொள்ளும் முறையாகும். ஆனால் அர்ஜுனன் போன்றோர் விஷயத்தில் எம்பெருமான் செய்வது என்ன? இவனைப் போன்றவர்கள் செய்யும் குற்றங்கள் காரணமாகத் தனது உள்ளத்தில் உண்டாகின்ற கோபத்தைத் தானே தணித்துக் கொள்கிறான்; இவ்விதம் செய்யும்போது அந்த அடியார்கள் தன்னிடம் எதனையும் வேண்டாதபோதிலும், அவர்களது வேண்டுகோள்களை அவர்கள் எதிர்பாராமலேயே செய்கிறான். இப்படியாகப் புருஷகாரத்தையும் இவர்கள் விஷயத்தில் தானே செய்கிறான் என்று உணரவேண்டும். – அடுத்து உபாயம் என்னும் செயலைச் செய்வது தன்னுடையதாகவே உள்ளபோது, அதனை ஏற்றுக்கொண்டான் என்று மேலும் அழுத்தமாகக் கூறுவது ஏன்? அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை - த்வமேவோபாய பூதா மே பவ - நீயே எனக்கு உபாயமாக வேண்டும் – என்று சேதனன் வேண்டி நின்றால் மட்டுமே எம்பெருமான் உபாயமாகச் செயல் புரிவான் என்ற நெறி உள்ளது. ஆயினும் அர்ஜுனன் போன்றவர்கள் விஷயத்தில் அதனை எதிர்பார்க்காமல், ”நாமே இவனுக்கு உபாயமாக நின்று, இவனுக்கு ஏற்பில்லாதவற்றை விலக்கி, நன்மைகள் அளித்தபடி இருப்போம்”, என்று முடிவு செய்கிறான். இதனைக் கருத்தில் கொண்டு கீதை (18-66) - மாமேகம் சரணம் வ்ரஜ, ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்னையே சரணம் என்று பற்றுவாயாக, அனைத்துப் பாவங்களில் இருந்தும் நான் உன்னை விடுவிப்பேன் – என்றான். கடந்த பத்தியில் கேட்கப்பட்ட கேள்விக்கு வேறுவிதமாகவும் விளக்கம் அளிக்கிறார். ஸ்ரீரங்கராஜஸ்தவம் (2-87) - உபாயோபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணௌ - உபாயம், உபேயம் என உள்ள தன்மை உன்னுடைய ஸ்வரூபம் அன்றி குணங்கள் அல்ல – என்று கூறுவதற்கு ஏற்ப, உபாயமாக உள்ள தன்மை எம்பெருமானின் இயல்பு அன்றி வரவரழைத்துக் கொண்ட தன்மை அல்லவே. தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக இருத்தல், தனக்கும் பிறர்க்கும் அநுகூலமாக இருத்தல் ஆகிய இரண்டும் எப்போதும் பொருந்தியுள்ளதால் உபாயமாக உள்ள தன்மை என்பது இயல்பானது ஆகிறது. அடுத்து ஸ்வாமி ஆய் கூறும் கருத்தான “உபாயமாக உள்ள தானே தன்னை உபாயமாகவும் ஆக்கிக் கொண்டதால், உபாயம் என்பதைத் தானே ஏறிட்டுக்கொண்டான்”, என்பதை விளக்குகிறார். இந்தக் கருத்து இங்கு பொருந்தாது. காரணம் – பால் மருந்தாகப் பயன்படும்; இது போன்று இவன் உபாயமாக அனைவருக்கும் உள்ளான் என்பதால், அர்ஜுனனுக்குச் சிறப்பாகச் செய்தான் என்று கூற இயலாது. ஆகவே மேலே உள்ள பத்திகளில் உள்ளபடியே பொருள் கொள்ளவேண்டும். அடுத்து, சூர்ணையில் உள்ள “தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே” என்பதைக் கீழே உள்ள மூன்று விதங்களுக்கும் கொள்ளவேண்டும். • ஆசார்யனின் செயலை ஏறிட்டுக் கொள்ளுதல் என்பது கீதை (2-7) – கார்ப்பண்ய தோஷோபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வா தர்ம ஸம்மூடசேதா: யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம் - இயல்பான மனநிலை காரணமாக நான் மனவலிமை இழந்து நிற்கிறேன்; எனது தர்மம் எது என்று புரியாமல் நிற்கிறேன்; எனக்கு நன்மை அளிக்கும் செயல் எது என்று உரைப்பாயாக. உன்னையே சரணம் என்று புகுந்த எனக்கு நீ உபதேசிப்பாயாக – என்று அர்ஜுன்ன் வேண்டினான். இதனால் ஆசார்யன் செய்ய வேண்டிய செயலைத் தானே ஏறிட்டுக் கொண்டு செய்தான் என்பது தெளிவு. • புருஷகாரச் செயலை ஏறிட்டுக் கொண்டு செய்தல்: மற்றவர்களின் செயலை (ஆசார்யனின் செயலை) தான் செய்ததையும், இதனை சேதனனின் வேண்டுகோளை எதிர்பாராமலேயே செய்ததையும் வைத்து உறுதியாக்கலா • உபாயமாக உள்ள தனது செயலைத் தானே செய்தல் – சேதனனின் வேண்டுகோளை எதிர்பாராமல் உபாயமாக நின்றான். ஓர் ஆசார்யன் அறியாதவற்றை உபதேசம் செய்யவேண்டும்; பிராட்டி புருஷகாரம் செய்யவேண்டும்; தன்னை உபாயமாகப் பற்றுபவர்கள் விரும்பியதைச் செய்து கொடுக்க வேண்டும் – இவ்விதமாக நெறிகள் உள்ளபோது, இவை அனைத்தையும் தானே செய்து கொடுத்தல் வைபவம் அல்லவோ? “ஏறிட்டுக் கொள்ளுகையாலே மஹாபாரதத்திலுபாய வைபவஞ் சொல்லிற்றாய்த்து” - இவன் இவ்விதம் இச்செயல்களைத் தானாகவே ஏறிட்டுக் கொண்டதைச் சொன்னதால், அவை இங்கு சொல்லப்பட்டது என உணர்த்துகிறார்.