Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 13)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
உபதேசத்தாலே மீளாதபோது சேதநனையருளாலே திருத்தும்; ஈச்வரனையழகாலே திருத்தும்.
இவ்வுபதேசத்தால் இவர்கள் மீளாதபோது இவள் செய்வதென்னென்ன வருளிச் செய்கிறார் (உபதேசத்தாலே மீளாதபோது) என்று தொடங்கி.
– இவளுடைய உபதேசம் மூலம் இந்த இருவரும் மாறவில்லை என்றால் இவள் செய்வது என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
சேதநன் மீளாமைக்கடி, அநாதிகாலம் யாதானும் பற்றி நீங்கும் என்கிறபடியே பகவத் விமுகனாய் விஷயாந்தர ப்ரவணனாய்ப் போருகையால் வந்த துர்வாஸநாதிகள்; ஈச்வரன் மீளாமைக்கடி, அபரதாநுகுணமிவனை சிக்ஷிக்க வேணுமென்னும் அபிஸந்தியாலே நின்ற நிலை இளகாமல் நிற்கைக்குடலான நிரங்குச ஸ்வாதந்த்ர்யம். இவ்வோ ஹேதுக்களாலே இரண்டு தலையும் தன்னுடைய உபதேசத்தால் ஸ்வஸ்வ கர்மபாரதந்த்ர்யத்தில் நின்றும் மீளாதவளவில். (சேதநனையருளாலே திருத்துகையாவது) – ஐயோ! இவனுடைய துர்ப்புத்தி நீங்கி அநுகூல புத்தியுண்டாகவேணுமென்று அவன் திறத்தில் தான் பண்ணுகிற பங்கயத்தாள் திருவருள் என்கிற பரமக்ருபையாலே அவன் பாபபுத்தி குலைந்து பகவதபிமுகனாம்படி பண்ணுகை. (ஈச்வரனையழகாலே திருத்துகையாவது) “ஓங்காண்போ, உனக்குப் பணி யன்றோவிது” என்று உபதேசத்தையுதறினவாறே, கண்ணைப் புரட்டுதல் கச்சை நெகிழ்த்துதல் செய்து தன்னழகாலேயவனைப் பிச்சேற்றி தான் சொன்னபடி செய்தல்லது நிற்கமாட்டாதபடி பண்ணி அங்கீகாரோந்முகனாக்குகை. ஆக (புருஷகாரமாம் போது) என்று தொடங்கி இவ்வளவாக புருஷகாரத்வோபயோகிகளான குணவிசேஷங்களையும், அவை தன்னைத் தானே வெளியிட்டபடியையும், ஸம்ச்லேஷ விச்லேஷங்களிரண்டிலும் புருஷீகரிக்கையையும் தத்ப்ரகார விசேஷங்களையும் சொல்லிற்றாய்த்து.
சேதனன் இவளது உபதேசத்தைக் கேட்டும் திருந்தாமல் உள்ளதற்கான காரணங்கள் திருவிருத்தம் (95) - யாதானும் பற்றி நீங்கும் - என்று கூறுவது போன்று ஸர்வேச்வரனிடம் ஈடுபாடு இல்லாதவனாக, உலக விஷயங்களில் ஈடுபட்டபடி உள்ளதால் வந்த தீயவாசனைகள் ஆகும். ஸர்வேச்வரன் இவளது உபதேசத்தைக் கேட்டு மாறாமல் உள்ளதற்கான காரணம் - மனிதர்கள் செய்யும் தண்டனைக்கான குற்றங்களுக்கு ஏற்ப தண்டிக்கவேண்டும் என்ற எண்ணம் காரணமாக, தான் நிற்கின்ற கடுமையான நிலையில் இருந்து சற்றும் இளகாமல் இருப்பதற்குக் காரணமான தடையற்ற சுதந்திரம் ஆகும். இந்தக் காரணங்களால் இருவரும் தன்னுடைய உபதேசத்தைக் கேட்ட பின்னரும் தங்களது கர்மபாரதந்த்ர்யத்தைக் கைவிடாமல் உள்ளதைக் கண்டு பிராட்டி செய்வது என்ன? – தனது உபதேசத்தைக் கேட்டும் திருந்தாத ஜீவனை எண்ணி, “ஐயோ! இவனுடைய தீய புத்தி இவனை விட்டு விலகி, ஸர்வேச்வரனிடம் இவனுக்கு ஈடுபாடு உண்டாகும்படியான புத்தி இவனுக்கு உண்டாகவேண்டும்”, என்று எண்ணுகிறாள். இதன்படி பெரியதிருமொழி(9-2-1) - பங்கயத்தாள் திருவருள் – என்று கூறுவதற்கு ஏற்ப தனது அளவற்ற கருணை மூலமாக மனிதர்களின் பாவ புத்தி நீங்கும்படியாகவும், எம்பெருமானிடம் ஈடுபாடு உண்டாகும்படியும் செய்கிறாள். – ஸர்வேச்வரனிடம், ”ஏங்காணும்! இவர்களைக் காப்பது அல்லவா உனது பணி”, என்று தான் உபதேசம் செய்வதைக் கைவிட்டு, தனது கண்களை மயக்கும் விதமாக மாற்றி, அவனைக் காண்கிறாள். தனது கச்சையை நெகிழ்த்தியபடி உள்ளாள். இப்படியாகத் தனது அழகில் அவனை மயங்கவைத்து, தான் கூறியபடி அவன் செய்தல் அல்லாது அவன் ஓய்வதில்லை என்னும்படி மாற்றுகிறாள். இப்படியாக இவனை உதவும்படிச் செய்கிறாள். இப்படியாக “புருஷகாரமாம் போது” என்ற சூர்ணை தொடங்கி இந்தச் சூர்ணை முடிய புருஷகாரத்திற்கான தன்மைகளாக உள்ள குணவிசேஷங்கள், அந்தக் குணங்களைத் தானே எவ்விதம் வெளிப்படுத்தினாள், எம்பெருமானுடன் சேர்ந்துள்ள போதும் பிரிந்துள்ளபோதும் எவ்விதம் புருஷகாரம் செய்கிறாள், அவற்றின் பிரிவுகள் போன்றவற்றை அருளிச்செய்தார்.