Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 12)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
உபதேசத்தாலேயிருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும்.
இவ்வுபதேசத்தாலிரண்டு தலையிலும் பலிக்குமதேதென்னவருளிச் செய்கிறார் உபதேசத்தாலே என்று தொடங்கி.
இவளது இந்தச் செய்கை மூலமாக இரண்டு இடங்களிலும் (எம்பெருமான், சேதனன்) என்ன நிகழ்கிறது என்பதற்கான விடையை அருளிச்செய்கிறார்.
அதாவது எப்படி இரண்டு தலைக்கும் தத்ததநுகுணமாகவிவள் பண்ணுமுபதேசத்தாலே புண்யபாபங்களின் வசத்திலே இழுப்புண்டு பகவத் விமுகனாய்த் திரிகையாகிற சேதநனுடைய கர்ம பாரதந்த்ர்யமும், இவன் பண்ணின கர்மத்தை ப்ரதாநமாக்கி அதுக்கீடாகவே செய்வனித்தனையென்று இவனுடைய ரக்ஷணத்தில் விமுகனாயிருக்கையாகிற ஈச்வரனுடைய கர்மபாரதந்த்ர்யமும் நிவ்ருத்தமாமென்கை. சேதநனுடய கர்ம பாரத்தந்த்ர்யம் அநாத் யசித் ஸம்பந்த கார்யமான அவித்யா நிபந்தநம், ஈச்வரனுடைய கர்மபாரதந்த்ர்யம் நிரங்குச ஸ்வாதந்த்ர்ய கார்யமான ஸ்வஸங்கல்ப நிபந்தநம்; இவை இரண்டும் அநாதி ஸித்தமாய்ப் போந்ததேயாகிலும், மாத்ருத்வ ஸம்பந்தத்தாலே சேதநனுக்காப்தையாய், மஹிஷீத்வ ஸம்பந்தத்தாலே ஈச்வரனுக்கபி மதையுமானவிவள், இரண்டு தலையும் நெஞ்சிளகி ஆச்ரயணாங்கீகாராபிமுகமாம் படியாகப் பண்ணுமுபதேசத்தாலே நிவ்ருத்தமாகத் தட்டில்லை.
இவள் இரண்டு இடங்களிலும் அவரவர்களுக்கு ஏற்றபடி உபதேசம் செய்கிறாள். இதனால் இரண்டு வினைகளின் காரணமாக, அந்த வினைப்பயன்கள் இமுக்கும் திசைகளில் திரிந்தபடியும், எம்பெருமானிடம் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாமல் உள்ளபடியும் காணப்படும் சேதனைனின் கர்ம பாரதந்த்ர்யம் அழிந்துவிடும் (கர்ம வசப்பட்டிருந்தல் என்று நிலை மாறும்). சேதனர்கள் செய்கின்ற பாவங்களை அவன் முன்பாக நிறுத்த, இவர்கள் செய்த பாவத்திற்குத் தக்கபடியே நான் இருப்பேன் என்றும், அவர்களைக் காப்பாற்றுவதில் எந்தவிதமான ஈடுபாடும் எடுக்கமாட்டேன் என்றும் இருக்கின்ற ஈச்வரனின் கர்ம பாரதந்த்ர்யம் அழிந்துவிடும். சேதனனின் கர்ம பாரதந்த்ர்யம் என்பது ஏன் உண்டானது என்றால் – எல்லையற்ற காலமாக ப்ரக்ருதியின் தொடர்பினால் உண்டான அவித்யையின் விளைவால் ஆகும். ஈச்வரனுக்குக் கர்ம பாரதந்தர்யம் என்பது ஏன் உண்டானது என்றால் – வேறு எதனாலும் தடைபடாத ஸ்வதந்த்ரமான தனது ஸங்கல்பத்தினால் ஆகும். இவை இரண்டும் எல்லையற்ற காலமாக உள்ளபோதிலும் இவளுடைய உபதேசம் மூலம் எவ்விதம் மாறும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். இவள் சேதனர்களுக்குத் தாய் என்ற ஸம்பந்தம் காரணமாக அவர்களது நம்பிக்கையைப் பெறுகிறாள். பத்தினி என்பதால் எம்பெருமானால் மிகவும் விரும்பப்படுகிறாள். இதன் மூலம் சேதனர்கள் தங்கள் மனம் உருகி எம்பெருமானைப் பற்றுவதில் ருசி கொண்டவர்களாகவும், எம்பெருமான் மனது உருகிச் சேதனர்களைக் காப்பாற்றுவதில் ருசி கொண்டவனாகவும் மாற்றுகிறாள். இப்படியாக இருவரது கர்ம பாரதந்த்ர்யம் அழிந்துவிடுகிறது.