Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 11)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே.
– இருவரையும் திருத்துவதெவ்வழியாலேயென்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (இருவரையுமென்று தொடங்கி).
இருவரையும் (ஈச்வரன், ஜீவன்) எவ்விதம் திருத்துகிறாள் என்பதை இங்கு அருளிச்செய்கிறார்.
ஈச்வரனைத் திருத்துவது இச்சேதநனுடைய அபராதங்களைக் கணக்கிட்டு நீரிப்படி தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறொரு புகலுண்டோ, உமக்குமிவனுக்கு முண்டான பந்தவிசேஷத்தைப் பார்த்தால் உறவேல் நமக்கிங்கொழிக்கவொழியாது என்கிறபடியே குடநீர் வழித்தாலும் போகாததொன்றன்றோ, ஸ்வம்மானவிவனை லபிக்கை ஸ்வாமியானவும்முடைய பேறாயன்றோவிருப்பது, எதிர் சூழல்புக்குத் திரிகிற வுமக்கு நான் சொல்லவேணுமோ, ரக்ஷணாஸாபேக்ஷனாய் வந்துவிவனை ரக்ஷியாதபோது உம்முடைய ஸர்வரக்ஷகத்வம் விகலமாகாதோ? அநாதிகாலம் நம்முடைய ஆஜ்ஞாதிலங்கநம்பண்ணி நம்முடைய சீற்றத்துக்கிலக்காய்ப் போந்தவிவனை அபராதோசித தண்டம் பண்ணாதே அத்தைப்பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்த்ர மர்யாதை குலையாதோவென்றன்றோ திருவுள்ளத்திலோடுகிறது, இவனை ரக்ஷியாதே அபராதாநுகுணமாக நியமித்தால் உம்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும்படியென்? அவை ஜீவித்ததாவது இவனை ரக்ஷித்தாலன்றோ, நியமியாதபோது சாஸ்த்ரம் ஜீவியாது, ரஷியாதபோது க்ருபாதிகள் ஜீவியாது, என் செய்வோமென்ன வேண்டா, சாஸ்த்ரத்தை விமுகர் விஷயமாக்கி க்ருபாதிகளை அபிமுகர் விஷயமாக்கினால் இரண்டும் ஜீவிக்கும், ஆனபின்பிவனை ரக்ஷித்தருளீரென்னுமுபதேசத்தாலே. இவ்வுபதேச க்ரமம் இவர் தாமருளிச்செய்த பரந்தபடியிலும், ஆச்சான் பிள்ளையருளிச்செய்த பரந்த ரஹஸ்யத்திலும் விஸ்தரேண காணலாம். பிதேவ த்வத் ப்ரேயத் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே ஹித ஸ்ரோதோ வ்ருத்த்யா பவதிச சுதாசித் கலுஷதீ: கிமேதந் நிர்தோஷ: க இஹ ஜகதீதி த்வமுசிதைருபாயைர் விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா ததஸி ந: என்று, அபராத பரிபூர்ண சேதந விஷயமாக ஹிதபரனான ஸர்வேச்வரன் திருவுள்ளம் சீறும்படியையும், அத்தசையில் இச்சீற்றத்துக்கடியென்னென்பது - இவன் தீரக்கழியச்செய்தவபராத மென்றவன் சொன்னால் மணற்சோற்றிலே கல்லாராய்வாருண்டோ? இந்த ஜகத்தில் அபராதமற்றிருப்பாரார்? என்பதாய், உசிதோபாயங்களாலே, அபராதங்களை மறப்பித்து, பிராட்டி சேர்த்தருளும்படியையும் அருளிச்செய்கையாலே, உபதேசத்தாலே ஈச்வரனைத் திருத்தும்படி ஸங்கரஹேண பட்டரும் அருளிச்செய்தாரிறே. அவதார தசையிலேயும் ப்ராணஸம்சயமாபந்நம் த்ருஷ்ட்வா ஸீதாத வாயஸம், த்ராஹி த்ராஹீதி பர்த்தாரமுவாச தயயா விபும் என்று வாசாமகோசரமான மஹாபாரதத்தைப் பண்ணின காகத்தைத் தலையறுப்பதாக விட்ட ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கொரு கண்ணழிவு கற்பித்துப் பெருமாள் ரக்ஷித்தருளிற்றும் இவளுபதேசத்தாலேயென்னுமிடம், பாத்ம புராணத்திலே சொல்லப்பட்டதிறே. இனி சேதநனைத் திருத்துவது, உன்னபராதத்தின் கனத்தைப் பார்த்தால் உனக்கோரிடத்தில் காலூன்றவிடமில்லை, ஈச்வரனாவான் நிரங்குச ஸ்வதந்த்ரனாகையாலே அபராதங்களைப் பத்தும் பத்தாகக் கணக்கிட்டு அறுத்தறுத்துத் தீத்தாநிற்கும். இவ்வநர்த்தத்தைத் தப்பவேண்டில் அவன் திருவடிகளிலே தலை சாய்க்கையொழிய வேறொரு வழியில்லை. அபராத பரிபூர்ணனானவென்னை யவனங்கீகரிக்குமோ தண்டியானோவென்று அஞ்சவேண்டா. ஆபிமுக்க்யமாத்தரத்திலே அகிலாபராதங்களையும் பொறுக்கைக்கும் போக்யமாகக் கொள்ளுகைக்கும் ஈடான குணங்களாலே புஷ்கலனென்று லோகப்ரஸித்தனாயிருப்பானெருவன். ஆனபின்பு நீ ஸுகமேயிருக்க வேணுமாகிலவனை ஆச்ரயிக்கப் பார் - என்றும் பரம ஹிதோபதேசத்தாலே; அப்படி எங்கே கண்டோமென்னில், பாபிஷ்டனாய் வழிகெட நடந்து திரிகிற ராவணனைக் குறித்து மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம: ஸ்தாநம் பரீப்ஸதா வதஞ்சா நிச்சதா கோரம் த்வயாஸௌ புருஷர்ஷப: விதிதஸ் ஸஹி தர்மஜ்ஞச் சரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சஸி என்று பெருமாளோடே உறவு பண்ணுகைகாணுனக்கு ப்ராப்தம், அது செய்யப் பார்த்திலையாகில் வழியடிப்பார்க்கும் தரையில் கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே, உனக்கோரிருப்பிடம் வேண்டிருந்தாயாகிலும் அவரைப் பற்றவேணும். அவரதல்லாததோரு ஸ்தலமில்லை காண், எளிமையாக எதிரிகாலிலே குனிந்து இவ்விருப்பிருப்பதிற்காட்டில் பட்டுப்போக வமையுமென்றிருந்தாயோ, உன்னை சித்ரவதம் பண்ணாமல் நற்கொலையாகக் கொல்லும் போதுமவரைப் பற்ற வேணுங்காண், நான் பண்ணின அபராதத்துக்கு என்னையவர் கைக்கொள்வரோவென்றிருக்கவேண்டா, ஆபிமுக்க்யம் பண்ணினால் முன்பு செய்த வபராதத்தைப் பார்த்துச்சீறுமந்த புன்மையவர்பக்கலில்லை காண், அவர் புருஷோத்தமர் காண், சரணாகதி பரமதர்மமென்றறியுமவராய் சரணாகததோஷம் பாராத வத்ஸலராக வெல்லாரும் அறியும்படிகாண் பெருமாளிருப்பது. நீ ஜீவிக்கவேணுமென்று இச்சித்தாயாகில் அவரோடுனக்குறவு உண்டாகவேணுமென்று இப்படியச்சமுறுத்தி யுபதேசித்தாளிறே; அவன் திருந்தாதொழிந்தது இவளுடைய உபதேசக்குறையன்றே, அவனுடைய பாபப்ராசுர்யமிறே. இப்படி உபயரையுமுபதேசத்தாலேமென்கையாலே ச்ரு ச்ரவணே என்கிற தாதுவிலே நிஷ்பந்நமான ஸ்ரீ சப்தத்தில் ச்ருணோதி, ச்ராவயதி என்கிற வ்யுத்பத்திகளில் வைத்துக்கொண்டு ச்ராவயதி என்கிற வ்யுத்பத்த்யர்த்தம் சொல்லப்பட்டது; ச்ராவயதி என்கிறது ஈச்வர விஷயமாகவே பூர்வர்கள் க்ரந்தங்களில் பலவற்றிலும் காணப்பட்டதாகிலும் அதவா விமுகாநாமபி பகவதாச்ரயணோபதேச: ச்ராவயித்ர்த்வம்; விதித்தஸ் ஸஹி தர்மஜ்ஞச் சரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சஸி, இதி ராவணம் ப்ரத்யுபதேசாத் என்று தத்த்வதீபத்திலே சேதந விஷயமாகவும் ஜீயரருளிச் செய்கையாலே, இவ்விடத்திலும் சேதந விஷயமாக்வும் சொல்லக் குறைவில்லை.
முதலில் ஈச்வரனை எவ்விதம் திருத்துகிறாள் என்று காண்போம். இவள் எம்பெருமானிடம் பின்வருமாறு கூறுகிறாள். இவனுடைய குற்றங்களை இப்படி ஆராய்ந்து பார்த்து, அவனைத் தள்ளி கதவை அடைத்தால், அவனுக்கு வேறு புகல் இடம் ஏது? உமக்கும் இவனுக்கும் உள்ள உறவுமுறை மிகவும் உன்னதமானது. திருப்பாவை (28) - உறவேல் நமக்கிங்கொழிக்கவொழியாது – என்பதற்கு ஏற்ப நீவீர் தள்ளினாலும் அது மறையாது அல்லவோ? உமது உடைமையாக உள்ள இவனை நீவிர் அடைதல் என்பது உமது எஜமானத்தன்மை மேலும் வெளிப்பட ஒரு வாய்ப்பாக உள்ளது அல்லவோ? திருவாய்மொழி (2-7-6) – எதிர்சூழல்புக்கு – என்னும்படியாக உள்ள உமக்கு நான் இவற்றை எடுத்துக் கூறுவும் வேண்டுமா? காப்பாற்ற வேண்டும் என்று உம்மிடம் வந்த இவனைக் காப்பாற்றாமல் விட்டால், “நீவிர் அனைத்தையும் காப்பவன்” என்ற பெயர் கெட்டுவிடாதோ? நீவிர் உமது எண்ணத்தில், ”எல்லையற்ற காலமாக எனது ஆணைகளை மீறி இவன் நடந்துள்ளான். எனது கோபத்திற்கு இவன் இலக்காகி உள்ளான். இவனை இவனது குற்றங்களுக்கு ஏற்பத் தண்டித்தே ஆக வேண்டும். இவனுடைய குற்றங்களை மன்னித்து இவனை ஏற்றுக்கொண்டால், சாஸ்த்ரங்களுக்கு மக்கள் வைத்துள்ள மரியாதை நீங்கிவிடும்”, என்று எண்ணுகிறீர் அல்லவா? நீவிர் இப்படியாக எண்ணி இவனைக் காப்பாற்றாமல் தண்டித்தால் உம்முடைய க்ருபை முதலான குணங்கள் அதன் பின்னர் உம்மிடம் எவ்விதம் காணப்படும்? இவனைக் காப்பாற்றினால் அல்லவோ அந்தக் குணங்கள் ஓங்கி நிற்கும்? ”இந்த ஜீவனைக் (தவறு செய்தவன்) காப்பாற்றினால் எனது கருணை முதலான குணங்கள் பிழைக்கும், இவனைக் காப்பற்றாமல் தண்டித்தால் மட்டுமே சாஸ்த்ரங்கள் பிழைக்கும். ஆக என்ன செய்வது?”, என்று நீவிர் சிந்திக்கவேண்டாம். உம்மிடமே ஈடுபாடு இல்லாதவர்கள் விஷயத்தில் சாஸ்த்ரங்களின்படி நடந்துகொண்டு, ஈடுபாடு உள்ளவர்களிடம் கருணை முதலான குணங்களைக் காண்பித்து நடக்கலாமே! இதனால் இரண்டுமே பிழைத்துவிடும் அல்லவோ? ஆகவே இவனை நீவிர் காப்பீராக - என்று எம்பெருமானை உபதேசம் மூலமாகத் திருத்துகிறாள். இத்தகைய உபதேசத்தை இவர் (ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர்) அருளிச்செய்த பரந்தபடியிலும், ஸ்வாமி ஆச்சான்பிள்ளை அருளிச்செய்த பரந்த ரஹஸ்யத்திலும் மிகவும் விரிவாகக் காணலாம். இதே கருத்தை ஸ்வாமி பராசரபட்டர் எவ்விதம் அருளிச்செய்தார் எனக் காண்போம். கீழே உள்ள ஸ்ரீகுணரத்னகோஸத்தின் வரிகளைக் காண்க (52): பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ: கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை: உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந: இதன் பொருள் - அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய் – என்பதாகும். இதன் மூலம் நன்மையை மட்டுமே எண்ணுகின்ற ஸர்வேச்வரன் குற்றங்கள் செய்யும் ஜீவன் விஷயத்தில் எவ்விதம் கோபம் கொள்கிறான் என்றும், அந்தச் சீற்றத்தின் காரணம் எம்பெருமான், ”இந்த ஜீவன் இத்தகைய அபராதம் செய்தான்”, என்று கூறக்கூடும் என்றும் உணர்த்தினார். ஈச்வரனின் சொற்களைக் கேட்ட பிராட்டி, ”மணற்சோற்றில் கல் உள்ளதா என்று யாரேனும் ஆராய்ச்சி செய்வார்களா? இந்த உலகத்தில் தவறு செய்யாத மனிதர்கள் யாரேனும் உள்ளனரா?”, என்று தனது சாமர்த்தியமான உபாயங்கள் மூலம் ஜீவன் செய்யும் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாள். இப்படியாக ஜீவனை எம்பெருமானுடன் சேர்த்து வைக்க பிராட்டி செய்யும் செயல்களை பட்டர் அருளிச்செய்கிறார். இதன் மூலம் உபதேசங்கள் வாயிலாக ஈச்வரனை எவ்விதம் பிராட்டி திருத்துகிறாள் என்பதைச் சுருக்கமாக பட்டர் அருளிச்செய்தார். அவன் இராமனாக அவதரித்தபோது - ப்ராணஸம்சயமாபந்நம் த்ருஷ்ட்வா ஸீதாத வாயஸம், த்ராஹி த்ராஹீதி பர்த்தாரமுவாச தயயா விபும் - என்று பெரிய அபராதம் செய்த காகாசுரனைத் தலையறுத்து அழித்துவிட ப்ரஹ்மாஸ்த்ரம் தொடுத்தான். அந்த அஸ்திரத்தை தடுத்து, காகத்தை இராமன் காப்பாற்றியதும் இவளது உபதேசம் மூலமே என்பதைப் பாத்ம புராணத்தில் காணலாம். அடுத்து ஜீவனைத் தனது உபதேசத்தின் மூலம் இவள் திருத்தும் முறையைக் காண்போம். ஜீவனிடம் இவள் கூறுவது பின்வருமாறு உள்ளது – நீ (ஜீவன்) செய்த தவறுகளைக் காணும்போது நீ பிழைக்க வேறு வழியில்லை. அனைத்திற்கும் சரியான முறையில் தண்டனை அளிப்பதில் ஸ்வதந்த்ரம் பெற்றுள்ள எம்பெருமான், உனது அபராதங்களைச் சரியாகக் கணக்கிட்டு, அந்தப் பாவங்களை நீக்கும்விதமாக தண்டனை வழங்கவே செய்வான். இந்தத் தண்டனையில் இருந்து நீ தப்பிக்கவேண்டும் என்றால், அவனது திருவடிகளில் உன் தலை சாய்த்து சரணம் அடைவதே வழியாகும். இது தவிர வேறு வழியில்லை. குற்றங்களின் மொத்த உருவமாக உள்ள என்னை அவன் காப்பாற்றுவானோ என்ற அச்சமோ, ஐயமோ உனக்கு வேண்டாம். சரணம் என்று புகுந்த மாத்திரத்தில் அனைத்து அபராதங்களையும் பொறுத்துக் கொள்பவனாகவும், இன்பமாக உள்ள அனைத்திற்கும் ஈடாக உள்ள குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளவனாகவும் இந்த உலகினாரால் ஸர்வேச்வரன் அறியப்படுகிறான். ஆகவே நீ சுகமாக இருப்பதற்கு அவனை அண்டி நிற்பாயாக – என்று மிகுந்த நன்மை பயக்கும்படியான உபதேசம் செய்கிறாள். இதனை நாம் எங்கே காணலாம் என்றால், பாவங்களை மிகுதியாகச் செய்து தவறான மார்க்கத்தில் நின்ற இராவணனிடம் சீதை கூறியதிலிருந்து அறியலாம். இராமாணம் - மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம: ஸ்தாநம் பரீப்ஸதா வதஞ்சா நிச்சதா கோரம் த்வயாஸௌ புருஷர்ஷப: விதிதஸ் ஸஹி தர்மஜ்ஞச் சரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சஸி – என்று இராவணிடம் கூறுகிறாள். அதாவது, “இராமனுடன் நட்பு உறவு கொள்ளுவதே உனக்கு உயிர் பிழைக்க வழியாகும். இப்படிச் செய்யவில்லை என்றால் இந்த உலகில் உனக்குக் கால் பாவக் கூட இடம் இல்லாது போகும். உனக்கு ஓர் இடம் வேண்டும் என்று எண்ணினால் இராமனைப் பற்றுவாயாக. அவனைத் தவிர வேறு புகலிடம் உனக்கு இல்லை. மிகவும் எளிமையான உபாயமாக உன் எதிரியாக நீ நினைக்கின்ற இராமனின் திருவடிகளில் விழுவதைக் காட்டிலும், மடிந்து போக உனக்கு விருப்பமோ? நீ செய்த தவறுகளுக்கு உன்னைச் சித்ரவதை செய்து சொல்லாமல், சட்டெனக் கொல்ல முயன்றாலும் நீ இராமனையே பற்ற வேண்டும். நான் (இராவணன்) செய்த தவறுகளுக்கு இராமன் என்னை மன்னிப்பானா என்று நீ எண்ண வேண்டாம். சரணம் என்று புகுந்தவன் விஷயத்தில் முன்பு செய்த தவறுகளை எண்ணிப் பார்த்து சீறுகின்ற தாழ்ந்த தன்மை இராமனுக்கு இல்லை. அவன் புருஷர்களில் உத்தமன் (உயர்ந்தவன்) ஆவான். சரணாகதி என்பதே மிகவும் உயர்ந்த தர்மம் என்பதையும், சரணம் என்று புகுந்தவனின் குற்றங்களைத் தாய் போன்று வாத்ஸல்யத்துடன் மன்னிக்கும் தன்மை கொண்டவன் என்பதையும் இராமன் அறிவான் என்று அல்லவோ உலகம் இராமனைக் கொண்டாடுகிறது? இப்படியாக அல்லவோ இராமன் உள்ளான்? உயிர் வாழவேண்டும் என்று நீ ஆசை கொண்டால், அவனுடன் நட்பு முறையில் உனக்கு உறவு இருத்தல் வேண்டும் - என்று இராவணனைச் சற்றே அச்சுறுத்தி இவள் உபதேசித்தாள் அல்லவா? இத்தனை உபதேசத்திற்குப் பின்னரும் இராவணன் திருந்தாமல் நின்றதன் காரணம் சீதையின் உபதேசங்களில் உள்ள குறைகளால் அல்ல, அவனது பாபங்களின் மிகுதியால் ஆகும். இப்படியாக இவள் இருவரையும் திருத்துகிறாள் என்பதால் ச்ரு ச்ரவணே என்பதில் தோன்றிய “ஸ்ரீ” என்ற சொல்லில் ச்ருணோதி (கேட்கிறாள்), ச்ராவயதி (கேட்கும்படிச் செய்கிறாள்) என்ற இரண்டும் உள்ளது. இதில் ச்ராவயதி என்பது இதுவரை கூறப்பட்டது. ச்ராவயதி என்ற இது “ஈச்வரனைக் கேட்க வைக்கிறாள்” என்னும்படி ஈச்வர விஷயமாகவே உள்ளது எனப் பூர்வார்சார்யர்கள் நூல்களில் உள்ளது. ஆனால் வாதிகேஸரி அழகியமணவாளஜீயர் தனது தத்வதீபத்தில் இதனைச் சேதந விஷயத்தில் பின்வருமாறு காண்பிக்கிறார் – அதவா விமுகாநாமபி பகவதாச்ரயணோபதேச: ச்ராவயித்ர்த்வம்; விதித்தஸ் ஸஹி தர்மஜ்ஞச் சரணாகத வத்ஸல: தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சஸி, இதி ராவணம் ப்ரத்யுபதேசாத் - எம்பெருமானிடம் பற்றுதல் இல்லை என்றாலும் எம்பெருமானைப் பற்றிய உபதேசத்தை அவர்களும் கேட்கும்படி செய்வித்தல்; விதித இச்சஸி - என்று இராவணனைக் குறித்து உபதேசித்தாள் – என்றது காண்க. ஆகவே ச்ராவயதி என்பது ஜீவனையும் கேட்கும்படிச் செய்வதையும் குறிக்கும் எனலாம்.