Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 10)

முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்

ஸம்ச்லேஷ தசையிலீச்வரனைத் திருத்தும்; விச்லேஷ தசையில் சேதநனைத் திருத்தும்.

இவ்வுபயதசையிலும் இவள் புருஷீகரிக்கும் ப்ரகாரமென்னென்ன அருளிச் செய்கிறார் (ஸம்ச்லேஷ தசையிலென்று தொடங்கி).

இந்த இரண்டு நிலைகளிலும் (எம்பெருமானுடன் பெரியபிராட்டி கூடியுள்ள நிலை, பிரிந்துள்ள நிலை) இவள் புருஷகாரத்தை எவ்விதம் வெளிப்படுத்துகிறாள் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

ஈச்வரனைத் திருத்துகையாவது, அபராதத்தையே பார்த்து “க்ஷீபாமி”, “ந க்ஷமாமி” என்றிருக்குமிருப்பைக் குலைத்து, அங்கீகார உந்முகனாக்குகை; சேதனனைத் திருத்துகையாவது - அக்ருத்ய கரணாதிசீலனாய் பகவத் விமுகனாய்த் திரிகிற ஆகாரத்தைக் குலைத்து, ஆச்ரயணோந்முகனாக்குகை. ஸம்லேஷ தசையில் இளைய பெருமாளுக்காக ஈச்வர விஷயத்திலும், விச்லேஷ தசையில் ராக்ஷஸிகளுக்காகத் திருவடி விஷயத்திலும் புருஷீகரித்தமை உபயதசையிலும் புருஷகாரத்வம் தோற்றுமென்கிற மாத்ரத்துக்குக் கூட்டிக்கொள்ளலாயிருந்ததாகிலும், ப்ராகரணிகமானவர்த்தம் ஸம்ஸாரி சேதநனையுமீச்வரனையும் சேரவிடுகையாகையாலே, இவ்வாக்யத்துக்கிப்படியே அர்த்தமாகக் கடவது. ஆகையால் ஈச்வரனோடு தான் கூடியிருக்கும் தசையில், சேதநன் ஆச்ரயணோந்முகனாய் வந்திருக்கச்செய்தே, பூர்வாபராதத்தைப் பார்த்து ஈச்வர னங்கீகரியாதிருக்குமளவில், அவன் ஸ்வாதந்த்ர்யத்தைத் தவிர்த்து க்ருபாதி குணங்களைக் கிளப்பி இவனையங்கீகரிக்கும்படியாக்குகையும்; பிரிந்திருக்கும் தசையில், ஈச்வர னங்கீகாரோந்முகனாய் வந்திருக்கச்செய்தே, இச்சேதநன் கர்மாநுகுணமாக விமுகனாயிருக்குமளவில் இவன் வைமுக்க்யத்தை மாற்றி ருசியை விளைப்பித்து ஆச்ரயணோன்முகனாக்குகையும் இவளிரண்டு தலையையும் திருத்துகையாவது. ஆகவிப்படி, அங்கீகார விரோதியான ஸ்வாதந்த்ர்யத்தை மாற்றி, அங்கீகாரத்துக்குடலான க்ருபாதிகளை உத்பவிப்பிக்கையாலும், ஆச்ரயண விரோதியான வைமுக்க்யத்தை மாற்றி, ஆச்ரயண ருச்யாதிகளை ஜநிப்பிக்கையாலும், ச்ரு ஹிம்ஸாயாம் என்கிற தாதுவிலும், ச்ரு விஸ்தாரே என்கிற தாதுவிலும் நிஷ்பந்நமான ஸ்ரீசப்தத்திலும் ச்ருணாதி, ச்ரூணாதி என்கிற வ்யத்பத்தி த்வயார்த்தமும் இவ்விடத்திலே தோற்றுகிறது; ச்ருணாதி நிகிலாந் தோஷாந் ச்ருணாதி ச குணைர் ஜகத் என்று இவ்யுத்பத்தி த்வயமும் சேதநபரமாய்த் தோற்றிற்றேயாகிலும் (ஈச்வரனைத் திருத்தும்) என்கிறவிடத்திலும் இந்த ந்யாயம் தோற்றுகையாலே இப்படி சொல்லக் குறையில்லை.

– ஈச்வரனைத் திருத்துதல் என்பது ஜீவன்கள் செய்கின்ற அபராதங்களை (குற்றங்கள்) பார்த்த ஸர்வேச்வரன் க்ஷீபாமி - அசுரப் பிறவிகளில் தள்ளிவிடுகிறேன் – என்றும், ந க்ஷமாமி - என்னால் பொறுக்க இயலாது – என்றும் கோபம் கொள்கிறான். அவனது இந்த நிலையை மாற்றி, ஜீவன்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் நோக்கமுடையவனாக மாற்றுவதாகும். சேதனனைத் திருத்துவது என்பது – செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பது, செய்யக்கூடாதவற்றைச் செய்தபடி இருப்பது, எம்பெருமானிடம் ஈடுபாடு இல்லாமல் இருப்பது என்று திரியும் ஜீவனைத் திருத்தி எம்பெருமானை அண்டுவதன் மீது பற்று கொண்டவனாக மாற்றுதல் ஆகும். அடுத்து எம்பெருமானுடன் கூடியுள்ள நிலையில் இலட்சுமணனுக்காக ஈச்வர விஷயத்திலும், பிரிந்துள்ள நிலையில் அரக்கிகளுக்காக அனுமன் விஷயத்திலும் இவள் புருஷகாரம் செய்ததை “இரண்டு நிலையிலும் புருஷகாரத்வம் தோன்றும்” என்பதுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஆயினும் இந்த இடத்தில் கூற வேண்டிய பொருள் – இந்த உலக மனிதர்களையும் ஸர்வேச்வரனையும் சேர்த்துவிடுதல் – என்பதே ஆகும். ஆகவே இந்தச் சூத்திரத்திற்கு மேலே உள்ள பொருளைக் காட்டிலும் இப்போது கூறப்பட்ட பொருளே பொருத்தம் ஆகும். ஆகவே, தான் ஈச்வரனுடன் சேர்ந்துள்ளபோது இவள் செய்வது என்ன? எம்பெருமானைப் பற்றுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டு அவனை வந்தடைகின்றனர். அப்போது அவர்களது குற்றங்களைக் கண்ட எம்பெருமான் அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கக்கூடும். அப்போது அவனுடைய இந்த ஸ்வதந்திரத் தன்மையை மாற்றி, அந்த மனிதர்கள் மீது கருணை முதலானவற்றை அவன் வெளிப்படுத்தும்படிச் செய்து, அவர்களை அவன் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்கிறான். அவனைப் பிரிந்துள்ள நிலையில் இவள் செய்வது என்ன? மக்களை ஏற்றுக் கொள்வதில் எம்பெருமான் மிகுந்த ஆசையுடன் இருக்கக்கூடும். ஆனால் தங்களது முன்வினைப் பயன்களின் காரணமாக அவர்கள் எம்பெருமானிடம் வெறுப்புடன் இருக்கக்கூடும். அந்த நேரத்தில் அந்த வெறுப்பை மாற்றி, அவன் மீது ருசியை உண்டாக்கி, அவனைப் பற்றுவதில் விருப்பம் உள்ளவர்களாக மாற்றிவிடுகிறாள். இப்படியாக ஸர்வேச்வரன் ஜீவங்களை ஏற்றுக் கொள்வதில் தடையாக இருக்கக்கூடிய எம்பெருமானின் ஸ்வதந்த்ரத்தை மாற்றுவதும், அவன் அவர்களை ஏற்றுக்கொள்ள உதவியாக உள்ள கருணை முதலானவற்றை அவனுக்கு ஏற்படும்படிச் செய்வதும், எம்பெருமானை அடைவதற்கு ஜீவனுக்குத் தடையாக உள்ள வெறுப்பை மாற்றுவதும், அவர்களுக்கு அவன் மீது பற்றுதல் ஏற்படும்படிச் செய்வதும் நிகழ்வதால் – ச்ருஹிம்சாயாம் என்னும் தாது மற்றும் ச்ருவிஸ்தாரே என்னும் தாது ஆகிய இரண்டிலும் உண்டான “ஸ்ரீ” என்ற சொல்லில் ச்ருணாதி (நாசம் செய்கிறாள்) மற்றும் ச்ரூணாதி (விரிவுபடுத்துகிறான்) என்னும் இரண்டு பொருள்களும் தோன்றுகின்றன. அதாவது ச்ருணாதி – அனைத்துவிதமான குற்றங்களையும் நீக்குகிறாள்; இந்த உலகத்தைத் தனது குணங்கள் கொண்டு திருத்தி விரிவுபடுத்துகிறாள் (இங்கு குற்றம் என்பது: ஸர்வேச்வரனைப் பொறுத்தவரை ஸ்வதந்த்ரமாக இருத்தல் - இதனை இவள் மாற்றுகிறாள்; ஜீவனைப் பொறுத்தவரையில் எம்பெருமானை அண்டாமல் வெறுப்புடன் இருத்தல் ஆகும். மேலும் விரிவுபடுத்துகிறாள் என்பது எம்பெருமானின் கருணையை விரிவுபடுத்தல் மற்றும் ஜீவன்களுக்கு எம்பெருமான் மீது உள்ள ருசியை விரிவுபடுத்துதல் என்பதாகும்). இந்த இரண்டும் ஜீவன் விஷயத்தில் தோன்றினாலும் இவை எம்பெருமான் விஷயத்திலும் இவளால் நடத்தப்படுகின்றன என்பதைக் காணலாம்.