Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 9)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
ஸம்ச்லேஷ விச்லேஷங்களிரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும்.
ஏவம் பூதகுண விசிஷ்டையானவிவளுடைய புருஷகாரத்வம் தோற்றுவதெங்கேயென்னவருளி செய்கிறார் மேல். ஸம்ச்லேஷ விச்லேஷங்களென்று தொடங்கி.
– இத்தகைய குணங்களுடன் இவள் உள்ளாள். ஆனாலும் இவளுடைய புருஷகாரத்தன்மை வெளிப்படுவது எவ்விதம் என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.
– புருஷகாரத்வமாவது கடகத்வம்; அது இவளுக்கு அவனோடு கூடியிருக்குந் தசையிலும் நீங்கியிருக்குந் தசையிலும் ப்ரகாசிக்குமென்கை. ஸம்ச்லேஷ தசையிலே, இளையபெருமாள் காட்டுக்கெழுந்தருளுகிறபோது பெருமாள் நிறுத்திப் போவதாகத் தேடினவளவிலே என்னைக் கூடக் கொண்டு போக வேணுமென்று ஸ ப்ராதுச் சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந: ஸீதாமுவாசாதியசா: ராகவஞ்ச மஹாவ்ரதம் என்கிறபடியே சரணம் புகுகிறவளவிலும்; பஞ்சவடியிலேயெழுந்தருளினபோது நீரும் நிழலும் வாய்த்திருப்பதொரு ப்ரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையுமென்று பெருமாளருளிச்செய்ய, நந்தலையிலே ஸ்வாதந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டாரென்று விக்ருதராய் ஏவமுக்தஸ்து ராமேண லக்ஷ்மணஸ் ஸம்யதாஞ்ஜலி:, ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்தமிதம் வசந மப்ரவீத், பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே, ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதா மிதிமாம் வத என்கிறபடியே தம்முடைய பாரதந்த்ர்யத்தைப் பெறுகைக்காகக் கையுமஞ்ஜலியுமாய் நின்றபேஷிக்கிறவளுவிலும் பிராட்டியைப் புருஷகாரமாக முன்னிட்டுத் தம்மபேக்ஷிதம் பெறுகையாலும்; ஆஸுர ப்ரக்ருதியான ஜயந்தன் காகரூபத்தைக் கொண்டு வந்து ஜநநி பக்கலிலே அக்ருத்ய ப்ரவ்ருத்தனாக க: க்ரீடதி ஸரோஷேண பஞ்சவக்த்ரேண போகிநா என்று பெருமாள் அவன் மேலே சீறித் தலையை அறுப்பதாக ப்ரஹ்மாஸ்த்ரத்தை ப்ரயோகிக்க, ஸ பித்ராச பரித்யக்தஸ் ஸுரைச்ச ஸமஹர்ஷிபி, த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: என்கிறபடியே எங்குஞ் சுற்றித் திரிந்தவிடத்திலும் ஒரு புகலிடம் இல்லாமையாலே போக்கற்றுச் சரணம் புக, ஸ தம் நிபதிதம் பூமௌ சரண்யச் சரணாகதம், வாதார்ஹமபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத் என்றும், புரத: பதிதம் தேவீ தரண்யாம் வாயஸம் ததா தச்சிர: பாதயோஸ் தஸ்ய யோஜயாமஸ ஜாநகீ; தமுத்தாப்ய கரேணோத க்ருபாபீயுஷ ஸாகர: ரரக்ஷ ராமோ குணவாந் வாயஸம் தயயைக்ஷத என்றும் ஸ்ரீராமாயண பாத்ம புராணங்களில் சொல்லுகிறபடியே இவள் புருஷகாரமாகப் பெருமாள் ரக்ஷிக்கையாலும்; விச்லேஷ தசையிலே இஹ ஸந்தோ நவா ஸந்தி ஸதோவா நாநுவர்த்த ஸே ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஜிதா இத்யாதியாலே விபரீத புத்தியான ராவணனைப் பெருமாள் திருவடிகளிலே சேர்க்கைக்கு விரகு பார்க்கையாலும்; ராவணவதாநந்தரம் ராக்ஷஸிகளை சித்ரவதம் பண்ணுவதாக உத்புக்தனாய் நிற்கிற திருவடியைக் குறித்து, பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹாணாம் ப்லவங்கம கார்யம் கருண மார்யேண ந கச்சித் நாபராத்யதி என்று அவனிரங்கத்தக்க வார்த்தைகளைச் சொல்லி அவர்களபராதங்களைப் பொறுப்பிக்கையாலும் உபய தசையிலும் இவள் புருஷகாரத்வம் தோற்றா நின்றதிறே. திருவடி, ராக்ஷஸிகளை அபராதாநுகுணம் தண்டிக்கும்படி காட்டித்தர வேணுமென்றவளவில் பிராட்டியவனுடனே மன்றாடி ரக்ஷித்தவித்தனையன்றோ. மாதர் மைதிலி ராக்ஷஸீஸ் த்வயி ததைவார்த்ராபராதாஸ் த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணமித்யுக்தி க்ஷமௌ ரக்ஷதஸ் ஸா நஸ் ஸந்த்ரமஹாகஸஸ் ஸுகயது க்ஷாந்தீ ஸ்தவாகஸ்மிகீ என்று பவநாத்மஜன் நிமித்தமாக ரக்ஷித்தாளென்றன்றோ பட்டருமருளிச்செய்தது; அவ்விடத்தில் புருஷீகரித்தமை எங்கனேயென்னில், பலாத்காரத்தாலன்றிக்கே அநுஸாரத்தாலே அபராதங்களைப் பொறுப்பிக்கையாலே புருஷகாரத்வமென்கிறது; திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்லவேண்டாவிறே என்று திருவடி விஷயமாகவும் புருஷீகரித்தமையையருளிச் செய்தாரிறே இவர்தானே; ஆகையாலிரண்டு தசையிலும் இவள் புருஷகாரத்வம் தோற்று மென்கிற மாத்ரத்தைச் சொல்லுகிறவிவ்வாக்யத்திலிதுவும் கூட்டக் குறையில்லை.
– (ஸம்ச்லேஷம் என்றால் சேர்தல், விச்லேக்ஷம் என்றால் பிரிதல்) புருஷகாரத்வம் என்பது சேர்த்து வைக்கும் தன்மை ஆகும். இத்தகைய தன்மை என்பது இவள் எம்பெருமானுடன் சேர்ந்துள்ளபோதும் பிரிந்துள்ளபோதும் வெளிப்படும். முதலில் இந்தத் தன்மை எம்பெருமானுடன் இவள் சேர்ந்துள்ளபோது எவ்விதம் வெளிப்படுகிறது என்று காணலாம். இராமன் கானகம் செல்கின்றபோது லக்ஷ்மணனை அயோத்தியிலேயே இருக்கும்படிக் கூறினான். அப்போது தன்னையும் கானகத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று லக்ஷ்மணன் விண்ணப்பித்தான். இதனை இராமாயணம் அயோத்யாகாண்டம் (31-2) – ஸ ப்ராதுச் சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந: ஸீதாமுவாசாதியசா: ராகவஞ்ச மஹாவ்ரதம் – மிகுந்த மேன்மை உடைய லக்ஷ்மணன் தனது தமையனாகிய இராமனின் திருவடிகளைக் இறுக்கப்பற்றிக் கொண்டு இராமனையும் சீதையையும் பார்த்துக் கூறினான் - என்றது. இதன் மூலம் லக்ஷ்மணன் இராமனை அண்டி நிற்கச் சீதையை பற்றினான் என்பது தெளிவு. – அதன் பின்னர் அவர்கள் பஞ்சவடியில் எழுந்தருளியுள்ள காலத்தில் இராமன் லக்ஷ்மணனிடம், “நீர் மற்றும் நிழல் நிறைந்த ஓர் இடமாகப் பார்த்து நீ பர்ணசாலை அமைப்பாயாக” என்றான். இதனை கேட்ட லக்ஷ்மணன், ”இராமன் ஓர் இடம் கூறி, அந்த இடத்தில் பர்ணசாலை அமைப்பாய் என்று கட்டளை இடாமல், தனக்குச் சுதந்திரம் அளித்தானே” என்று அதிர்ந்தான். இதனால் தன்னை இராமன் கைவிட்டு விடுவான் என்று எண்ணினான். உடனே அவன் இராமாயணம் ஆரண்யகாண்டம் (15-6) – ஏவமுக்தஸ்து ராமேண லக்ஷ்மணஸ் ஸம்யதாஞ்ஜலி:, ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்தமிதம் வசந மப்ரவீத், பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே, ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதா மிதிமாம் வத - இராமனால் இப்படியாகப் பணிக்கப்பட்ட லக்ஷ்மணன் தனது கைகளைக் குவித்தவனாய், சீதையின் முன்பாக நின்றபடி இராமணை நோக்கிப் பின்வருமாறு கூரினான், “இராமா! நீ எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் நான் உனக்கு மட்டுமே தொண்டு செய்தபடி இருப்பேன்; நீயே ஓர் அழகான இடமாகப் பார்த்து இந்த இடத்தில் பர்ணசாலை அமைக்கவேண்டும் என்று என்னிடம் கட்டளை இட வேண்டும்”, என்று கூறினான். இப்படியாக அவன் தன்னுடைய பாரதந்த்ர்யத்தைப் பெறுவதற்காக குவித்த கைகளுடன் நிண்றான். இதனை அவன் சீதையின் முன்னிலையில் அவளுடைய புருஷகாரத்வம் வேண்டியபடியே செய்தான். – அசுரத்தன்மை மிகுதியான ஜயந்தன் என்பவன் காகம் போன்று உருவம் கொண்டு தாயான சீதையிடம் வந்து தகாத செயல்களைச் செய்தான். இதனைக் கண்ட இராமன் இராமாயணம் ஸுந்தரகாண்டம் (38-26) – க: க்ரீடதி ஸரோஷேண பஞ்சவக்த்ரேண போகிநா - விரிந்த படங்களைக் கொண்டதும், சீற்றத்துடன் உள்ளதும் ஆகிய பாம்புடன் யாராவது விளையாடுவார்களா - என்பதற்கு ஏற்ப, அவன் மீது கோபம் கொண்டு, அவன் தலையை அறுப்பதற்காக ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் ப்ரயோகம் செய்தான். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (38-33) - ஸ பித்ராச பரித்யக்தஸ் ஸுரைச்ச ஸமஹர்ஷிபி, த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: – தனது தாய் தந்தையர்கள், முனிவர்கள், தேவர்கள் உலகங்களிலும் திரிந்தான்; பின்னர் இறுதியாக இராமனிடமே சரணம் அடைந்தான் – என்றது. இப்படியாகத் தான் சுற்றுத் திரிந்த எந்த இடத்திலும் எந்தவிதமான அடைக்கலமும் கிட்டப்பெறாமையால், வேறு போக்கிடம் இல்லாமல் இராமன் திருவடிகளில் சரணம் புகுந்தான். கீழே உள்ள வரிகளை காண்க: • இராமாயணம் ஸுந்தரகாண்டம் (38-34) – ஸ தம் நிபதிதம் பூமௌ சரண்யச் சரணாகதம், வாதார்ஹமபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத் – தரையில் விழுந்து கிடப்பவனும், அடைக்கலம் புகுந்தவனும் ஆகிய அந்தக் காகாசுரனை, அவன் அடைக்கலம் புகத் தகுதி பெற்றுவிட்டான் என்பதால், அனைத்தையும் காக்கும் இராமன், தனது க்ருபை காரணமாக அவனையும் காப்பாற்றினான். • பாத்மபுராணம் – புரத: பதிதம் தேவீ தரண்யாம் வாயஸம் ததா தச்சிர: பாதயோஸ் தஸ்ய யோஜயாமஸ ஜாநகீ; தமுத்தாப்ய கரேணோத க்ருபாபீயுஷ ஸாகர: ரரக்ஷ ராமோ குணவாந் வாயஸம் தயயைக்ஷத - தரையில் விழுந்த அந்த காகத்தின் தலையை எடுத்து இராமனின் திருவடிகளில் சேரும்படியாக சீதை வைத்தாள். அதன் பின்னர் கருணைக்கடலும், அமிர்தக்கடலும், உயர்ந்த குணங்கள் நிறையப் பெற்ற கடலும் போன்ற இராமன் அந்தக் காகத்தைத் தனது கைகளால் எடுத்துக் காபாற்றினான். அந்தக் காகத்தைத் தனது கண்களால் குளிரப் பார்த்தான். – அடுத்து பிராட்டி எம்பெருமானைப் பிரிந்துள்ள நிலையில் அவளது புருஷகாரத்தன்மை எவ்விதம் வெளிப்படுகிறது என்று கண்போம். இராமாயணம் ஸுந்தரகாண்டம் (21-9) - இஹ ஸந்தோ நவா ஸந்தி ஸதோவா நாநுவர்த்த ஸே ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஜிதா - இந்த இடத்தில் சான்றோர்கள் என்று கூறும்படியாக யாரும் உள்ளார்களா? இல்லையா? அப்படி உள்ளார்கள் என்றால் நீ அவர்கள் கூறும் சொற்களைக் கேட்கவில்லை; இதனால் அல்லவோ உனது அறிவு தவறான பாதையில் செல்கிறது? சான்றோர்கள் மார்க்கத்தில் உனது அறிவு செல்லாமல் உள்ளது - என்று இராவணனிடம் கூறினாள். இப்படியாக விபரீதமான அறிவு கொண்ட இராவணனை இராமனின் திருவடிகளில் சேர்ப்பதற்கான வழியை ஆராய்ந்தாள். – இராவணன் அழிந்த பின்னர் அங்கிருந்த அரக்கியர்களைச் சித்ரவதை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த அனுமனிடம், பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹாணாம் ப்லவங்கம கார்யம் கருண மார்யேண ந கச்சித் நாபராத்யதி - வானரமே! உனது எண்னத்தின்படி இவர்கள் தகாத செயல்கள் செய்தவர்கள்; எனது எண்ணத்தின் படி இவர்கள் நல்லதே செய்தவர்கள்; இவர்கள் உன்னால் கொல்லத் தகுந்தவர்கள் என்று எண்ணுகிறாய்; இப்படிப்பட்ட இவர்கள் விஷயத்தில் பெரியவனான உன்னால் கருணை செய்யப்பட வேண்டும்; குற்றம் செய்யாதவன் என்று யாரும் இல்லை - என்று கூறினாள். இதன் மூலம் அரக்கியர்கள் மீது அனுமன் இரக்கம் கொள்ளும்படியும், அவர்கள் அபராதங்களைப் பொறுத்துக் கொள்ளும்படியும் செய்ததால் இவளது புருஷகாரம் வெளிப்படுகிறது. அந்த அரக்கியர்களைத் தண்டிக்கவேண்டும் என்று அனுமன் கூறியவுடன் சீதை அவனுடன் மன்றாடி அல்லவோ அவர்களைக் காப்பாற்றினாள்? இதனால் இங்கு புருஷகாரத்வம் வெளிப்படவில்லையே என்ற சந்தேகம் எழலாம். இதற்கான விடையை அருளிச்செய்கிறார். ஸ்ரீகுணரத்நகோசம் (50) - மாதர் மைதிலி ராக்ஷஸீஸ் த்வயி ததைவார்த்ராபராதாஸ் த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணமித்யுக்தி க்ஷமௌ ரக்ஷதஸ் ஸா நஸ் ஸந்த்ரமஹாகஸஸ் ஸுகயது க்ஷாந்தீ ஸ்தவாகஸ்மிகீ - தாயே! இராமனின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்; ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடம் சரணம் புகாமல் இருந்தபோதிலும் காப்பாற்றினாய்; இதனால் இராமனின் புகழ் சற்றே தாழ்ந்தது; ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமை என்ற குணமானது பலவிதமான குற்றங்கள் கொண்ட என் மீது சற்றே படவேண்டும் – இப்படியாக வாயுவின் புத்திரனாகிய அனுமன் பொருட்டு பிராட்டி காப்பாற்றினாள் என்று அல்லவோ பட்டர் அருளிச்செய்தார்? இங்கு இவளது புருஷகாரத்தன்மை எப்படி வெளிப்பட்டது? பலாத்காரத்தால் அல்லாமல், அவன் வழியே சென்று குற்றங்களை இவள் பொறுக்கும்படியாகச் செய்தாள் என்பதன் மூலம் வெளிப்பட்டது. முமுக்ஷுப்படி (129) – திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்லவேண்டாவிறே – என்றது காண்க. இப்படியாக அனுமன் விஷயமாகவும் புருஷகாரத்தைச் செய்த தன்மையை இவர் தானே அருளிச்செய்தார். எனவே எம்பெருமனைப் பிரிந்த நிலை, சேர்ந்த நிலை ஆகிய இரண்டிலும் புருஷகாரத்தன்மை தோன்றுவதைக் கூறும் இந்தச் சூர்ணை மூலம் அனுமன் விஷயத்திலும் புருஷகாரம் செய்ததைக் கூறுவதைக் குறையில்லை.