Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 8)
முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்
பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக; நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக; அநந்தரம் பிரிந்தது அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.
இந்த க்ருபாதித்ரயத்தையும் எல்லாருமறியும்படி தானே வெளியிட்டருளின வைபவத்தை ஸ்ரீராமாயணத்திலிவளுக்குச் சொல்லப்பட்ட விச்லேஷ த்ரயத்தாலும் தர்சிப்பிக்கிறார் மேல் (பிராட்டி) என்று தொடங்கி வாக்யத்ரயத்தாலே.
க்ருபை உள்ளிட்ட இந்த மூன்று தன்மைகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படியாகத் தானே வெளியிட்டாள். இந்தப் பெருமையை இவளுக்காக ஸ்ரீஇராமாயணத்தில் உள்ள மூன்று பிரிவுகள் மூலம் உணர்த்துகிறார்.
– (பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக) - தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வேச மாநுஷீ, விஷ்ணோர் தேஹாநு ரூபாம் வை கரோத்யேஷாத்மநஸ் தநும் என்கிறபடியே, நாயகனான ஸர்வேச்வரனுடைய தத்ததவதார ஸஜாதீயமான விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி வந்தவதரிக்குமவளாகையாலே, ராகவத்வேபவத் ஸீதா என்கிறபடியே, அவன் சக்ரவர்த்தி திருமகனானவாரே ததநுரூபமாகத் தானும் ஜநகராஜன் திருமகளான பிராட்டி, தண்டகாரண்யத்திலேயெழுந்தருளியிருக்கச்செய்தே, ராவணன் பிரித்தானென்றொரு வ்யாஜத்தாலே ப்ரதமம் பெருமாளைப் பிரிந்து லங்கைக்கெழுந்தருளிற்று, தேவ்யா காருண்ய ரூபாயா என்று தத்குண ஸாரத்வத்தாலே காருண்யந்தானாகச் சொல்லும் படியான தன்னுடைய பரமக்ருபையை ப்ரகாசிப்பிக்கைக்காகவென்கை. எங்ஙனேயென்னில், தேவஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காகத் தான் சிறை யிருக்கையாலும்; அவ்விருப்பிலே தன்னை அல்லும் பகலும் தர்ஜநபர்த்ஸநம் பண்ணி யருவித்தின்ற க்ரூரராக்ஷஸிகள், ராவணன் பராஜிதனாகவும் பெருமாள் விஜயிகளாகவும் த்ரிஜடை ஸ்வப்நங்கண்டத்தாலே பீதபீதைகளாய் நடுங்குகிற தசையிலே பவேயம் சரணம் ஹி வ: என்று நீங்கள் நோவுபடுகிற ஸமயத்துக்கு நானிருந்தேன். நீங்களஞ்ச வேண்டாவென்று அபயப்ரதாநம் பண்ணுகையாலும்; அது உக்திமாத்ரமாய்ப் போகாமே ராணவதாநந்தரம் தனக்கு சோபநஞ் சொல்லவந்த திருவடி அவர்களை சித்ரவதம் பண்ணும்படி காட்டித்தரவேணுமென்ன, அவனோடே மன்றாடி ராஜ ஸம்ச்ரய வச்யாநாம் இத்யாதியாலே அவர்கள் குற்றத்தை குணமாக உபபாதித்தும், மர்ஷயாமீஹ துர்பலா என்று பிறர் நோவுகண்டு பொறுத்திருக்கத்தக்க நெஞ்சுரம் தனக்கில்லாமையை முன்னிட்டும், கார்யம் கருண மார்யேண ந கச்சிந்நாபராத்யதி என்று அவனுக்கு இரங்கியல்லது நிற்கவொண்ணாதபடியுபதேசித்தும், இப்படியொரு நிலைநின்று தான டியிற் பண்ணின ப்ரதிஜ்ஞாநு குணமாக ஆர்த்ராபராதைகளானவர்களை ரக்ஷிக்கையாலும் தன்னுடைய க்ருபையை வெளியிட்டாளிறே. – (நடுவிலித்யாதி) - நடுவிற்பிரிவாவது மீண்டு பெருமாளுடனே கூடித் திருவயோத்யையிலேயெழுந்தருளித் திருவயிறு வாய்த்திருக்கிற காலத்திலே அபத்யலாபோ வைதேஹி! மமாயம் ஸமுபஸ்தித: கிமிச்சஸி ஸகாமா த்வம் ப்ரூஹி ஸர்வம் வராநநே என்று உனக்கபேக்ஷையேதென்று கேட்டருள, தபோவநாநி புண்யாநி த்ரஷ்டுமிச்சாமி ராகவ, கங்காதீர நிவிஷ்டாநி ருஷீணாம் புண்யகர்மணாம், பல மூலாசிநாம் வீர பாதமூலேஷு வர்த்திதும், ஏஷமே பரம காமோயந்மூலபலபோஹிஷு அப்யேகராத்ரம் காகுத்ஸ்த வஸேயம் புண்ய கீர்த்திஷு என்று தனக்குண்டான வநவாஸ வாஞ்சையை விண்ணப்பஞ்செய்ய, அத்தைப்பற்றப் போக விடுவாரைப்போலே லோகபவாத பரிஹாரார்த்தமாகப் பெருமாள் காட்டிலே போகவிடப் போனது. இப்பிரிவுக்கு ப்ரயோஜநம் பெருமாள் கட்டிலே வைத்துபோதோடு காட்டிலே விட்ட போதோடு வாசியற, அவருடைய நினைவையே பின் செல்லவேண்டும்படியான தன்னுடைய பத்நீத்வ ப்ரயுக்தமான பாரதந்த்ர்யத்தை ப்ரகாசிப்பிக்கை. கங்கைக் கரையேறினவநந்தரம் இளையபெருமாள் கனக்க க்லேசப்பட்டுக் கொண்டு, பெருமாள் திருவுள்ளமாய் விட்ட கார்யத்தை விண்ணப்பஞ்செய்ய, அத்தைக்கேட்டு மிகவும் ப்ரலாபித்து ந கல்வத்யைவ ஸௌமித்ரே! ஜீவிதம் ஜாஹ்நவீஜலே த்யஜேயம் ராகவம் வம்சே பர்த்துர் மா பரிஹாஸ்யதி என்றாளிறே. இத்தால் ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்கை தேட்டமாகா நிற்கச் செய்தேயும் அது செய்யமாட்டாதே பெருமாள் நினைவைப் பின் சென்று தன் ப்ராணனை நோக்கிக்கோண்டிருக்க வேண்டும்படியான பாரதந்த்ர்யத்தையிறே ப்ரகாசிப்பித்தது. பிறர்க்காக ஜீவிக்கவேண்டும் பரதந்த்ரர்க்கு முடிவு தேட்டமானாலும் முடியப்போகாதே! மாயும் வகையறியேன் வல்வினையே பெண் பிறந்தே என்றாரிறேயாழ்வார். ப்ரதமவிசேஷத்தில் பத்து மாஸத்துக்குள்ளே படுவதெல்லாம் பட்டவள், பதிர்ஹி தைவதம் நார்யா: பதிர்பந்து: பதிர்கதி: ப்ராணைரபி ப்ரியம் தஸ்மாத் பர்த்து: கார்யம் விசேஷத: என்று தானருளிச் செய்தபடியே, பதிசித்தாநுவிதாநமே நமக்கு ஸ்வரூபமென்னும் பாரதந்த்ர்ய புத்தியாலேயிறே அநேக ஸம்வத்வஸரம் பாடாற்றிருந்தது. ஆக இப்படி இப்பிரிவிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை வெளியிட்டாளிறே. (அநந்தரமித்யாதி) - அநந்தரத்தில் பிரிவாவது, மீண்டு பெருமாள் ஸன்னதியிலே வந்திருக்கச்செய்தே, பிரிந்து பிறந்தகத்திலே புக்குவிட்டது. இப்பிரிவுக்கு ப்ரயோஜநம், அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா, அந்யாஹி மயாஸீதா என்று உபயஸம்மதமான தன்னுடைய அநந்யத்வ ப்ரயுக்தமான அநந்யார்ஹத்வத்தை ஸர்வ ஸம்மதமாம்படி ப்ரகாசிப்பிக்கை. எங்ஙனேயென்னில், பெருமாள் அச்வமேதம் பண்ணியருளா நிற்கச்செய்தே, ஸ்ரீவால்மீகி பகவானுடைய நியோகத்தாலே குசலவர்கள் வந்து ஸ்ரீராமாயணத்தைப் பாடிக்கொண்டு திரியா நிற்க, அத்தைப் பெருமாள் திருச்செவி சாத்தி ஸந்நிதியிலேயவர்களையழைத்து விசேஷஜ்ஞரெல்லாரையுங் கூட்டியவர்கள் பாட்டுக் கேளாநிற்கிற நாளிலே, அவர்களைப் பிராட்டியினுடைய பிள்ளைகளென்றறிந்த வநந்தரம், பிராட்டியளவிலே திருவுள்ளஞ்சென்று தனக்கேற சுத்தையாகில் கடுக இத்திரளிலே நாளை வந்து ப்ரத்யயமுகத்தாலே தன் சுத்தியை ப்ரகாசிப்பிப்பாளாக வென்று தூத முகேந பெருமாள் மஹர்ஷிக்கும் பிராட்டிக்கும் அறிவித்துவிட, அப்படியே ஸ்ரீவால்மீகி பகவானை முன்னிட்டுக்கொண்டு அந்த மஹாபரிஷத்திலே பெருமாள் ஸந்நிதியிலே வந்து ஒடுங்கி நிற்கச் செய்தே, ஸ்ரீவால்மீகி பகவான் இவள் சுத்தையென்னுமிடத்தை பலமுகத்தாலுஞ் சொல்ல, பெருமாளுமிவள் சுத்தையெ ன்னுமிடம் நானுமறிவன், மஹர்ஷி சொன்னதுவே போரும், ஆனாலும் லோகாபவாத பரிஹாரார்த்தமாக ஒரு ப்ரத்யயமித்திரளிலே பண்ணவேணுமென்று திருவுள்ளமான படியாலே, ஸர்வாந் ஸமாகதாந் த்ருஷ்ட்வா ஸீதா காஷாய வாஸிநீ அப்ரவீத் ப்ராஞ்ஜலிர் வாக்யம் அதோ த்ருஷ்டி ராவாங்முகீ என்கிறபடியே கையுமஞ்ஜலியுமாய்க் கவிழ்தலையிட்டுக் கொண்டு நின்று, யதாஹம் ராகவாதந்யம் மநஸாபி ந சிந்தயே, ததா மே மாதவீ தேவீ விவரம் தாது மர்ஹதி; மநஸா கர்மணாவாஸா யதா ராமம் ஸமர்த்தயே, ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி; யதைதத் ஸத்ய முக்தம் மே வேத்மி ராமாத் பரம் நச ததாமே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி என்று சபதம் பண்ண, ததா சபந்த்யாம் வைதேஹ்யாம் ப்ராதுராஸீந் மஹாத்புதம் பூதலா துத்திதம் திவ்யம் ஸிம்ஹாஸந மநுத்தமம், த்ரியமாணம் சிரோபிஸ்து நாகை ரமிதவிக்ரமை:, திவ்யம் திவ்யேந வபுஷா ஸர்வரத்ந விபூஷிதம்; தஸ்மிம்ஸ்து தரணீதேவீ பாஹுப்யாம் க்ருஹ்ய மைதிலீம்; ஸ்வாகதே நாபிநந்த்யைநா மாஸநே ஸோபவேசயத்; தாமாஸநகதாம் த்ருஷ்ட்வா ப்ரவிசந்தீம் ரஸாதலம் புஷ்ப வ்ருஷ்டிரவிச்சிந்நா திவ்யா ஸீதாமவாகிரத் என்று அவ்வளவிலே பூமியில் நின்றும் ஒரு திவ்யஸிம்ஹாஸநம் வந்து தோன்ற, அதிலே ஸ்ரீபூமிப்பிராட்டி இவளை ஸ்வாகதப்ரச்ந பூர்வகமாக இரண்டு கையாலுமெடுத்துக் கொண்டுபோய் வைக்க, ஆஸநகதையாய்க்கொண்டு ரஸாதலத்தை ப்ரவேசியா நிற்கிற விவளைக் கண்டு திவ்ய புஷ்ப வ்ருஷ்டி இடைவிடாமல் இவள்மேலே விழுந்ததென்கையாலே இப்பிரிவிலே தன்னுடைய அநந்யார்ஹத்வத்தை ப்ரகாசிப்பித்தாளிறே. ஆக இவ்வவதாரத்திலிவளுக்குச் சொல்லப்பட்ட விச்லேஷத்ரயத்துக்கும் ஹேது, இக்குணங்களை இப்படி வெளியிடுகையாய்த்து. இங்ஙனன்றாகில் அநபாயிநியாய் அகர்மவச்யையாயிருக்கிறவிவளுக்கு, கர்மவச்யர்க்குப்போலே, இப்படி பிரிவு வருகைக்கு யோக்யதையில்லையிறே. தன்னுடைய புருஷகாரத்வோபயோகியான குணங்களையும் புருஷகாரத்வத்தையும் ப்ரகாசிப்பிக்கைக்காக வந்த அவதாரமிறேயிது; ஆகையிறே யதுதாந்யதுதாஹரந்தி ஸீதாவதார முகமேத தமுஷ்ய யோக்யா என்று பட்டரருளிச்செய்தது. இப்படி சேதநர் பக்கலநுக்ரஹத்துக்குடலான க்ருபையையும் ஈச்வரன் பக்கலணுகி வசீகரிக்கைக்குடலான பாரதந்த்ர்யாதிகளையும் தானே வெளியிட்டது, சாஸ்த்ரங்களில் கேட்கிற மாத்ரமன்றிக்கே அநுஷ்டாந பர்யந்தமாகக் காண்கையாலே தன்னைப் புருஷகாரமாகப் பற்றுவார்க்கு ருசி விச்வாஸங்க ளுறைக்கைக்குறுப்பாக.
(பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக) – ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-9-145) - தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வேச மாநுஷீ, விஷ்ணோர் தேஹாநு ரூபாம் வை கரோத்யேஷாத்மநஸ் தநும் – அவன் தேவனாக அவதரிக்கும்போது இவளும் தேவசரீரம் எடுக்கிறாள்; அவன் மனிதனாகப் பிறக்கும்போது இவளும் மனித சரீரம் எடுக்கிறாள்; இப்படியாக இவளுக்கு ஏற்ற சரீரத்தினை அவன் எடுக்கும்போது, அதற்குத் தகுதியாக இவளும் தனக்குச் சரீரம் எடுத்துக்கொள்கிறாள் – என்றது. ஆக நாயகனான ஸர்வேச்வரனுடைய அந்தந்த அவதாரத்திற்கு ஏற்றபடியான திருமேனியுடன் இவளும் அவதரிக்கிறாள். இந்தக் காரணத்தினால் தான் இராமாயணம் (1-9-144) – ராகவத்வேபவத் ஸீதா - எம்பெருமான் இராமனாக வந்தபோது பிராட்டி சீதையாக அவதரித்தாள் – என்று கூறியதற்கு ஏற்ப அவன் சக்ரவர்த்தித் திருமகனாக அவதரித்தபோது இவள் ஜனகனின் புத்ரியான சீதையாக அவதரித்தாள். இத்தகைய காரணத்தினால்தான் தண்டக வனத்தில் பிராட்டி இருந்த நேரத்தில் “இராவணன் அபகரித்தான்” என்ற செயலை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, முதலில் எம்பெருமானை விட்டு, தான் பிரிந்து இலங்கை சென்றாள். ஏன் என்றால் லக்ஷ்மீதந்த்ரம் – தேவ்யா காருண்ய ரூபாயா - கருணையே வடிவான சீதையுடன் – என்று கூறும்படியாக க்ருபை என்ற குணம் முதன்மையாக உள்ளதன் காரணமாக, அந்தக் கருணை என்பது தானாகவே இலங்கை சென்றதோ என்று கூறும்படியாக, தனது கருணையை வெளிப்படுத்தும் பொருட்டே ஆகும். இதனை எப்படி இலங்கைக்கு தான் சென்றதன் மூலம் வெளிப்படுத்தினாள் என்ற கேள்வி எழலாம். இதற்கு பலவிதமாக விடை அளிக்கலாம்: • தேவலோகப்பெண்கள் பலரும் இராவணனால் சிறைபிடிக்கப்பட, அவர்களை அங்கிருந்து காப்பாற்ற, தான் சிறைப்பட்டாள் • அங்குள்ள த்ரிசடை என்பவள் தனது கனவில் இராவணன் தோற்பது போன்றும், இராமன் வெல்வது போன்றும் கனவு கண்டாள். இதனை அவள் அங்குள்ள அரக்கிகளிடம் கூறினாள். அந்த நாள் வரை சீதையைத் தங்கள் சொற்கள் மூலமும் கைகள் மூலமும் பகல் இரவு என்று பாராமல் எப்போதும் அச்சத்தில் ஆழ்த்தியபடியே இருந்த அந்த அரக்கிகள், த்ரிசடையின் சொற்கள் கேட்டு நடுங்கி நின்றனர். அவர்களுடம் இராமாயணம் ஸுந்தரகாண்டம் (58-93) – பவேயம் சரணம் ஹி வ: - உங்களைக் காப்பாற்றுபவளாக நான் உள்ளேன் – என்று கூறினாள். இதன் மூலம் நீங்கள் வருந்தும் நேரங்களில் நான் உங்களிடம் உள்ளேன், ஆகவே அச்சம் கொள்ள வேண்டாம் என்று அச்சத்தை விலக்குபவளாக உள்ளாள். • மேலே அரக்கியர்களிடம் தான் கூறியது வெறும் சொற்கள் மட்டும் அல்ல, அது செயலிலும் நடத்திக் காட்ட இயலும் என்பதை உணர்த்தினாள். எப்படி? இராவணன் அழிந்த பின்னர், இராமன் வென்றுவிட்டான் என்ற தனக்குப் பிரியமான செய்தியைக் கூற வந்த அனுமன், அத்துடன் நிற்காமல் அரக்கியர்களை இராமனிடன் காண்பித்துக் கொடுத்து, அவர்களைச் சித்ரவதை செய்யும்படித் தன்னிடம் கூறியதைக் கேட்டாள். உடனே சீதை அனுமனிடம் இராமாயணம் யுத்தகாண்டம் (116-38) - ராஜ ஸம்ச்ரய வச்யாநாம் – தங்களது அரசனின் கட்டளையை ஏற்று நடந்த இந்த வேலையாட்களிடம் யார் கோபம் கொள்வார்கள் – என்று கூறி, அவர்களின் குற்றத்தையும் குணமாக மாற்றிக் கூறினாள். மேலும் யுத்தகாண்டம் (116-40) – மர்ஷயாமீஹ துர்பலா - இவர்களை அழிப்பாய் என்று கூறுவதற்கு எனது உள்ளத்தில் வலிமை இல்லாத காரணத்தினால் நான் இவர்களது குற்றங்களைப் பொறுத்துக் கொள்கிறேன் – என்பதன் மூலம் மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு பொறுத்தக் கொள்ளும் மனவலிமை தனக்கு இல்லாததை வெளியிட்டாள். மேலும் தொடர்ந்து யுத்தகாண்டம் (116-44) – கார்யம் கருண மார்யேண ந கச்சிந்நாபராத்யதி - பெரியவனான உன்னால் இவர்கள் கருணை கொள்ளத்தக்கவர்கள், இந்த உலகில் குற்றம் செய்யாதவர்கள் என்று யாரும் இல்லை - என்று கூறினாள். இப்படியாக அனுமன் இரக்கம் கொள்ளாத நிலை அல்லாமல் வேறு நிலை எடுக்க இயலாதபடி செய்தாள். ஆக இதன் மூலம், இதுநாள்வரை தன்னைத் துன்புறுத்தியபடி இருந்த அரக்கியர்களைத் தான் கூறியபடியே காப்பாற்றினாள். இதனால் தனது க்ருபையை வெளியிட்டாள். – (நடுவில் பிரிந்தது) இந்தச் செயல் தனது பாரதந்த்ர்யத்தை வெளியிடுவதற்காகவே ஆகும். இலங்கையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அயோத்தி வந்த பின்னர் சீதை கர்ப்பம் அடைந்தாள். அப்படியான ஒரு நாளில் இராமன் அவளிடம் உத்தரகாண்டம் (42-32) – அபத்யலாபோ வைதேஹி! மமாயம் ஸமுபஸ்தித: கிமிச்சஸி ஸகாமா த்வம் ப்ரூஹி ஸர்வம் வராநநே – அழகான முகம் உடையவளே! வைதேஹீ! எனக்குப் புத்திரன் பிறக்கின்ற புண்ணியம் கிட்டியது. நீ ஆசையாக எதனை எண்ணியுள்ளாய்? உனக்கு எவை விருப்பமோ அவை அனைத்தையும் என்னிடம் கூறுவயாக - என்றான். உடனே சீதை உத்தரகாண்டம் (42 – 33, 35) – தபோவநாநி புண்யாநி த்ரஷ்டுமிச்சாமி ராகவ, கங்காதீர நிவிஷ்டாநி ருஷீணாம் புண்யகர்மணாம், பல மூலாசிநாம் வீர பாதமூலேஷு வர்த்திதும், ஏஷமே பரம காமோயந்மூலபலபோஹிஷு அப்யேகராத்ரம் காகுத்ஸ்த வஸேயம் புண்ய கீர்த்திஷு - இராகவரே! மிகுந்த புண்ணியம் பல உள்ளவர்களும், பழம் மற்றும் கிழங்கு முதலானவற்றை உண்பவர்களும் ஆகிய முனிவர்களின் திருவடிகளின் கீழே வசிப்பதற்கு நான் விரும்புகிறேன்; கங்கையின் கரையில் உள்ளவைகளும், தூய்மை நிறைந்தவைகளும் ஆகிய அவர்களின் பர்ணசாலை களைக் காண நான் விரும்புகிறேன்; கிழங்கு முதலானவற்றைப் புசிப்பவர்களும், தூய்மையான ஒழுக்கம் கொண்டவர்களும் ஆகிய முனிவர்கள் உள்ள இடத்தில் ஒரு நாளாவது வசிக்க விரும்புகிறேன். இப்படியாக எனது ஆசைகள் உள்ளன - என்றாள். ஆக கானகத்தில் தான் வசிக்க விரும்புவதை இராமனிடம் விண்ணப்பம் செய்தாள். இத்தகைய ஆசையை நிறைவேற்றும் விதமாக, உலகினர் சீதை மீது கற்பித்த பொய்யான பழியை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, அவளை இராமன் காட்டிற்கு அனுப்பினான். இந்தப் பிரிவிற்கு என்ன பயன் கிட்டியது என்றால் - இராமன் தன்னை அன்புடன் அரண்மனையில் வைத்திருந்தாலும், கானகம் அனுப்பினாலும் எந்தவிதமான வேறுபாடும் காணாமல், அவனுடைய நினைவிலேயே ஒன்றியபடி சீதை இருந்தாள். இப்படியாகத் தன்னுடைய பத்னித்தன்மை மூலம் பாரதந்த்ர்யத்தை வெளிப்படுத்தியதே இராமனைப் பிரிந்த பயனாகும். இதனால் மேலும் விளக்குகிறார். அயோத்தியில் இருந்து சீதையை அழைத்து வந்த இலக்ஷ்மணன் அவளைக் கங்கைக் கரையில் இறக்கி விட்டான். இந்த நேரத்தில்தான், இராமன் அவளைக் கானகத்தில் விட்ட காரணத்தையும் கூறினான். இதனைக் கேட்டுப் புலம்பிய சீதை உத்தரகாண்டம் (48-8) – ந கல்வத்யைவ ஸௌமித்ரே! ஜீவிதம் ஜாஹ்நவீஜலே த்யஜேயம் ராகவம் வம்சே பர்த்துர் மா பரிஹாஸ்யதி – சுமித்திரையின் புத்திரனே! இராமன் மூலம் உண்டான இந்தக் கர்ப்பம் எனது பதியான இராமனின் குலத்திற்கு இல்லாமல் போய்விடக்கூடாது என்ற காரணத்தினால் அல்லவோ நான் கங்கையில் விழாமல் உள்ளேன் - என்றாள். இதன் மூலம் பிரிவாற்றாமை காரணமாகப் பிழைப்பது என்பது அரிதாக உள்ளபோதிலும், உயிரை விடாமல் இராமனின் நினைவைக் கொண்டபடி, தனது உயிரைப் பிடித்திருந்தாள் என்னும் பாரதந்த்ர்யத்தை வெளிப்படுத்தினாள். மற்றவர்களுக்காகப் பிழைத்திருக்க வேண்டிய பாரதந்த்ர்யர்களுக்கு முடிவு என்பதில் விரும்பம் உள்ளபோதிலும் அப்படிச் செய்ய மாட்டனர். இதனை நம்மாழ்வார் (5-4-3) - மாயும் வகை – என்றார் அல்லவோ? முதன் முதலில் சீதை இராமனைப் பிரிந்த பத்து மாதங்களில் பல இன்னல்களை அனுபவித்தாள். இதனை ஏன் அவள் தாங்கிக் கொண்டாள்? இராமாயணம் உத்தரகாண்டம் (48-17) பதிர்ஹி தைவதம் நார்யா: பதிர்பந்து: பதிர்கதி: ப்ராணைரபி ப்ரியம் தஸ்மாத் பர்த்து: கார்யம் விசேஷத: – எந்தக் காரணத்தினால் ஒரு பெண்ணிற்கு அவளது கணவன் தெய்வமாகவும், பந்துவாகவும், மோக்ஷமாகவும் உள்ளானோ அந்தக் காரணத்தை முன்னிட்டு மனைவியானவள் தனது உயிர் மற்றும் அதனினும் மேலாக வேறு ஏதாவது இருந்தால் அதன் மூலமூம் தொண்டு செய்ய வேண்டும் – என்று தானே அருளிச்செய்தாள். இதற்கு ஏற்றபடி இராமனின் எண்ணத்தை அறிந்து அவன் பின் செல்வதே தன்னுடைய ஸ்வரூபத்திற்கு ஏற்றது என்னும் பாரதந்த்ர்யம் காரணமாகப் பொறுத்துக்கொண்டாள். இப்படியாக இந்தப் பிரிவில் தனது பாரதந்த்ர்யத்தை வெளியிட்டாள். – அதன் பின்னர் இராமனைப் பிரிந்த பிரிவு என்பது, மீண்டும் இராமனின் வந்து சேர்ந்த பின்னர் பிரிந்து, தான் பிறந்த இடமான பூமிக்குள்ளே சென்றதாகும். இந்தப் பிரிவிற்கு என்ன பயன் என்றால்: • இராமாயணம் ஸுந்தரகாண்டம் (21-15) – அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா - சூரியனை விட்டு ஒளி எவ்விதம் பிரியாமல் இருக்குமோ அது போன்று நான் இராமனை விட்டுப் பிரியமாட்டேன். • இராமாயணம் யுத்தகாண்டம் (121-19) - அந்யாஹி மயாஸீதா - சூரியனை விட்டு அதன் ஒளி எப்படிப் பிரியாமல் இருக்குமோ அது போன்று சீதை என்னை விட்டுப் பிரிய மாட்டாள். இப்படியாக இராமன் மற்றும் சீதை ஆகியவர்களின் வாக்கியங்கள் மூலமாக அறியப்படுகின்ற தனது அநந்யார்ஹத்வத்தை (தான் இராமனுக்கு மட்டுமே உரியவள் என்ற நிலை) அனைவரும் அறிந்த கொள்ளும்படியாகத் தெளிவுபடுத்துவதற்காகவே ஆகும். எப்படி? இராமன் அச்வமேத யாகம் இயற்றினான். அப்போது வால்மீகி முனிவரின் கட்டளைக்கு இணங்க லவகுசர்கள் ஸ்ரீஇராமாயணத்தைப் பாடியபடி அங்கு வந்தனர். அதனை இராமன் கேட்டான். அவர்கள் இருவரையும் தன்னிடம் அழைத்தான். அங்குள்ள பெரியவர்கள் அனைவரையும் வரவழைத்தான். அவர்கள் பாடிய பாட்டைக் கேட்டபோது அவர்கள் யாருடைய பிள்ளைகள் என்று அறிந்தான். உடனே இராமனுக்குச் சீதையின் நினைவு அதிகமாகி நின்றது. ஒரு தூதனை அழைத்து, “தனது மனதிற்கு ஏற்ப சீதை தூய்மையானவள் என்றால் உடனே இந்தச் சபைக்கு வந்து, சத்தியம் செய்து, தனது தூய்மையை அவள் வெளிப்படுத்துவாளாக”, என்ற செய்தியை வால்மீகி முனிவரிடமும், சீதையிடமும் தெரிவிக்கும்படி அனுப்பினான். இதற்கு ஏற்ப வால்மிகீ முனிவருடன் சீதை அந்தச் சபைக்கு வந்து மிகவும் பணிவாக நின்றாள். அந்தச் சபையில் வால்மீகி முனிவர், “இவள் தூய்மையானவள்”, என்று பலவிதத்திலும் எடுத்துக் கூறினார். இதனைக் கேட்ட இராமன், ”இவள் தூய்மையானவள் என்பதை நானும் அறிவேன். வால்மீகி முனிவர் உரைத்தது போதுமானது ஆகும். ஆனால் உலகினர் இதனை உணர்ந்து கொள்ளும்படியான ஒரு சத்தியச் செயலை இவள் இப்போது செய்யவேண்டும். இந்த உலகத்தால் உண்டான பழிச்சொல் நீங்குவதற்கு இதனை இவள் செய்யவேண்டும்”, என்றான். இதனைக் கேட்ட சீதை செய்தது என்ன? இராமாயணம் உத்தரகாண்டம் (97-14) - ஸர்வாந் ஸமாகதாந் த்ருஷ்ட்வா ஸீதா காஷாய வாஸிநீ அப்ரவீத் ப்ராஞ்ஜலிர் வாக்யம் அதோ த்ருஷ்டி ராவாங்முகீ – காவி உடுத்திருந்த சீதை அங்கிருந்த அனைவரையும் பார்த்தாள்; பூமிதேவியை உற்று நோக்கிய கண்களுடனும், அஞ்ஜலி முத்திரையில் வைத்த கைகளுடனும் இந்தச் சொற்களைக் கூறினாள் – என்று கூறியதற்கு ஏற்ப, அஞ்ஜலி முத்திரையுடன் கூடிய கைகளைக் கொண்டவளாகக் குனிந்த தலையுடன் பின்வருமாறு கூறினாள். இராமாயணம் உத்தரகாண்டம் (97-15) - யதாஹம் ராகவாதந்யம் மநஸாபி ந சிந்தயே, ததா மே மாதவீ தேவீ விவரம் தாது மர்ஹதி; மநஸா கர்மணாவாஸா யதா ராமம் ஸமர்த்தயே, ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி; யதைதத் ஸத்ய முக்தம் மே வேத்மி ராமாத் பரம் நச ததாமே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி - நான் இராமனை மட்டுமே எண்ணியுள்ளேன்; அவனைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட எண்ணவில்லை; இது உண்மை என்றால் எனக்கு பூமிதேவி இடம் அளிப்பாளாக; என்னுடைய மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் நான் இராமனை மட்டுமே எண்ணியுள்ளது உண்மை என்றால் எனக்குப் பூமிதேவி இடம் அளிப்பாளாக; இராமனைத் தவிர்த்து வேறு யாரையும் நான் அறியவில்லை என்பது உண்மை என்றால் எனக்குப் பூமிதேவி இடம் அளிப்பாளாக - என்று சபதம் செய்தாள். உடனே நடந்தது என்ன? இராமாயணம் உத்தரகாண்டம் (97-18) - ததா சபந்த்யாம் வைதேஹ்யாம் ப்ராதுராஸீந் மஹாத்புதம் பூதலா துத்திதம் திவ்யம் ஸிம்ஹாஸந மநுத்தமம், த்ரியமாணம் சிரோபிஸ்து நாகை ரமிதவிக்ரமை:, திவ்யம் திவ்யேந வபுஷா ஸர்வரத்ந விபூஷிதம்; தஸ்மிம்ஸ்து தரணீதேவீ பாஹுப்யாம் க்ருஹ்ய மைதிலீம்; ஸ்வாகதே நாபிநந்த்யைநா மாஸநே ஸோபவேசயத்; தாமாஸநகதாம் த்ருஷ்ட்வா ப்ரவிசந்தீம் ரஸாதலம் புஷ்ப வ்ருஷ்டிரவிச்சிந்நா திவ்யா ஸீதாமவாகிரத் - இப்படியாகச் சீதை சபதம் செய்து நின்ற நேரத்தில் வியப்பை அளிக்கவல்லதும், தெய்வீகமானதும், ஒப்பில்லாததும், பூமியில் இருந்து வெளிப்பட்டதும், எல்லையற்ற ஒளி மற்றும் சக்தி உள்ளதும், பாம்புகளின் தலைகளால் தாங்கப்பட்டதும், இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும் ஆகிய அழகான ஸிம்ஹாஸனம் ஒன்று பூமியில் இருந்து மேலே வந்தது; பூமி தேவியானவள் சீதையைத் தனது இரண்டு கைகளால் எடுத்துக்கொண்டு, இனிய சொற்களால் சீதையை மகிழவைத்து, அந்த ஸிம்ஹாஸனத்தில் அமரச்செய்தாள்; அந்த ஆசனத்தில் அமர்ந்தபடி சீதை பாதாளலோகம் சென்றாள்; இதனைக் கண்ட தேவலோகத்தில் இருந்து மலர் மழையானது இடைவிடாமல் அவள் மீது பொழிந்தது – என்பதற்கு ஏற்ப பூமியில் இருந்து ஒரு தெய்வீகமான ஸிம்ஹாஸனம் வெளிப்பட்டது. அதில் சீதையைப் பூமாதேவி நற்சொற்களைக் கூறியபடி இரண்டு கைகளாலும் எடுத்துக்கொண்டு சென்று அமர்த்தினாள். இப்படியாக ஆசனத்தில் அமர்ந்தவளாக பாதாளலோகத்தை அடைந்த சீதையைக் கண்டு தேவலோகத்தில் இருந்து புஷ்பமழையானது இடைவிடாமல் பொழிந்தது. இதன் மூலம் பிரட்டி தன்னுடைய அந்ந்யார்ஹத்வத்தை அனைவரும் அறியும் படியாகச் செய்தாள். – இப்படியாகச் சீதை என்ற அவதாரத்தின் மூலம் இவளுக்காகக் கூறப்பட்ட மூன்று குணங்களையும் இவள் வெளிப்படுத்தினாள் என்றும், இந்த அவதாரத்தில் இவளுக்குக் கூறப்பட்ட இந்த மூன்று பிரிவுகளின் காரணம் இந்தக் குணங்களை வெளிப்படுத்தவே என்றும் அறியவேண்டும். இப்படிக் கொள்ளவில்லை என்றால் – எப்போதும் எம்பெருமானை விட்டுப் பிரியாமல் உள்ளவளுக்கு, கர்மங்களால் கட்டுப்படாமல் இருப்பவளுக்கு, கர்மத்தினால் கட்டுப்பட்டவர்கள் போன்று, இராமனைப் பிரிந்து சென்றதற்கு வேறு எந்தவிதமான காரணமும் கூற இயலாது அல்லவோ? சீதை என்ற அவதாரத்தின் காரணம் என்ன? தன்னுடைய புருஷகாரத்தன்மை எத்தகையது, இந்தப் புருஷகாரத்வம் வெளிப்பட உதவியாக இருப்பதற்கு ஏற்ற குணங்கள் எவை என்பவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும்படிச் செய்வதற்காகவே இந்த அவதாரம் எடுக்கப்பட்டது. இதனால்தான் ஸ்வாமி பராசரபட்டர் ஸ்ரீகுணரத்ன கோஸத்தில் (57) - யதுதாந்யதுதாஹரந்தி ஸீதாவதார முகமேத தமுஷ்ய யோக்யா - சீதை என்ற அவதாரமானது ஸ்ரீரங்கநாச்சியாராக அமர்ந்து அனைவருக்கும் புருஷகாரமாக நீ இருப்பதற்கு எடுத்துக் கொண்ட பயிற்சியே – என்றார். இப்படியாக சேதநர்களுக்கு அருள்வதற்குக் காரணமான க்ருபை, ஸர்வேச்வரனிடம் சென்று அவனைத் தன் வசப்பட வைப்பதற்குக் காரணமான பாரதந்த்ர்யம், அநந்யார்ஹத்வம் போன்றவற்றைத் தன் மூலமாகத் தானே ஏன் வெளியிட்டாள் என்ற கேள்வி எழலாம். இதன் காரணம், சாஸ்த்ரங்களில் தனது இந்தத் தன்மைகளைப் பற்றி மக்கள் படிக்கக்கூடும்; அத்துடன் நில்லாமல் அவர்கள் அந்தக் குணங்களை நேரிலே காணவும் வேண்டும்; இவ்விதம் செய்தால் மட்டுமே தன்னை ஒரு புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு ருசியும் நம்பிக்கையும் ஏற்படும் என்று பிராட்டி எண்ணியதால் ஆகும்.