Sri Vachana Bhushanam - முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம் (சூர்ணை 7)

முதல் ப்ரகரணம் – புருஷகார உபாய வைபவம்

புருஷகாரமாம்போது க்ருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்.

அநந்தரம், புருஷகாரத்தின்படிகளை விஸ்தரேண உபபாதிக்கக்கோலி, ப்ரதமத்திலே புருஷகாரத்வத்துக்கு அவச்யாபேக்ஷித குணங்களையருளிச்செய்கிறார் புருஷாகாரமாம்போது என்று தொடங்கி.

அதன் பின்னர் புருஷகாரத்தின் தன்மைகள் என்ன என்பதை விரிவாக அருளிச்செய்யத் திருவுள்ளம் கொண்டார். முதலில் புருஷகாரத்திற்கு இன்றியமையாத குணங்கள் எவை என்பதை அருளிச்செய்கிறார்.

– புருஷகாரமாம்போது என்றது புருஷகாரமாமிடத்திலென்றபடி. க்ருபையாவது ப்ரதுக்காஸஹிஷ்ணுத்வம். பாரதந்த்ர்யமாவது பாராதீநத்வம். அநந்யார் ஹத்வமாவது தத்வ்யதிரிக்த விஷயாநர்ஹத்வம். இவை புருஷாகாரத்துக் கவச்யாபேக்ஷித மானபடியென்னென்னில், சேதநர் ஸம்ஸாரத்தில் படுகிற துக்கங்கண்டு பொறுக்க மாட்டாமல், ஈச்வரனோடே இவர்களை சேர்க்கைக்குடலான யத்நம் பண்ணுகைக்கு க்ருபை வேணும்; ஸ்வதந்த்ரனை வசீகரிக்கும்போது அநுவர்த்தநத்தாலே வசீகரிக்க வேண்டுகையாலே பாரதந்த்ர்யம் வேணும்; நம்மையொழிந்ததொரு விஷயத்துக்கு அர்ஹமன்றியே நமக்கே அதிசயகரமாயிருக்கும் வஸ்துவாகையாலே நங்கார்யமன்றோ சொல்லுகிறது என்று, சொன்னபடியவன் செய்கைக்குறுப்பாகையாலே அநந்யார்ஹத்வம் வேணும். ஆகையாலிவை மூன்றும் புருஷகாரத்துக்கு அவச்யாபேக்ஷிதமிறே. ஈச்வர க்ருபையிற் காட்டில் இவள் க்ருபைக்கு விசேஷமென்னென்னில், ஈச்வரனாவன் நிரங்குசஸ்வதந்த்ரனாய், நிக்ரஹாநுக்ரஹங்களிரண்டுக்கும் கடவனாய், சேதந கர்மங்களை நிறுத்தறுத்துத் தீத்துமவனாகையாலே அவனுடைய க்ருபை ஸ்வாதந்த்ர்யத்தாலே அமுக்குண்டு கிடந்து, ஓரோதசைகளிலே தலையெடுக்கக் கடவதாயிருக்கும். இவள் அநுக்ரஹைக சீலையாகையாலேயிவளுடைய க்ருபைக்கு வேறொன்றால் ஓர் அபிபவமில்லாமையாலே எப்போதுமொருபடிப்பட்டிருக்கும். ஆகையாலிவளுடைய க்ருபை கரையழித்திருக்கும். ஸம்பந்தத்தில் வ்யாக்ருத்திபோலே யாய்த்து க்ருபையில் வ்யாவ்ருத்தியும். இப்படியிருக்கையாலேயிறே இவளை ஆச்ரயிப்பார்க்கு வேறோரு புருஷகாரம் தேட வேண்டாதொழிகிறது. ஈச்வர விஷயத்தி லிவளுடைய பாரதந்த்ர்யாநந்யார்ஹத்வங்களும் ஸ்வரூப ப்ரயுக்தமான மாத்ரமன்றிக்கே ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யௌ என்றும், விஷ்ணுபத்நீ என்றும் சொல்லுகிற பத்நீத்வ ப்ரயுக்தமாயும், அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸாஹமஸ்மி ஸநாதநீ என்றும், ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ என்றும் சொல்லுகிறபடியே ஸ்வரூப நிருபகத்வாதி ஸித்தமான அநந்யத்வ ப்ரயுக்தமாயுமிருக்கும் இப்படியிருக்கையாலேயிறே அல்லாதார்க்கடைய மிதுநசேஷத்வமும், இவளொருத்திக்கும் ததேகசேஷத்வமுமாய்த்து. இந்த அவ்யவதாநேந வுண்டான ஸம்பந்தத்தாலேயிறே இவளுக்கு ஈச்வரனை வசீகரிக்குமளவில் புருஷகாரம் வேண்டாதொழிகிறது. இம்மூன்று குணத்திலும் வைத்துக்கொண்டு, க்ருபையானது, ச்ரிங் ஸேவாயாம் என்கின்ற தாதுவிலே நிஷ்பந்தமான ஸ்ரீ சப்தத்தில் ஸ்ரீயதே என்கிற கர்மணி வ்யுத்தபத்தியிலும் பாரதந்த்ர்யாநந்யார்ஹத்வங்களிரண்டும், ஸ்ரீயதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும், நித்யயோகவாசியான மதுப்பிலும் ஸித்தமிறே.

– புருஷகாரமாம்போது என்றால் புருஷகாரமாக உள்ளபோது என்று பொருள். க்ருபை என்றால் மற்றவர்கள் படுகின்ற துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத தன்மையாகும். பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கு வசப்பட்டிருத்தல் ஆகும். அநந்யார்ஹம் என்றால் எம்பெருமானை அல்லாது மற்றவர்களுக்கு உரியவளாக இல்லாத தன்மை ஆகும். புருஷகாரத்திற்கு இந்த மூன்றும் (க்ருபை, பாரதந்த்ர்யம், அநந்யார்ஹம்) இன்றியமையாமல் இருக்கவேண்டியவை என்று எவ்விதம் கூறப்பட்டது? சேதனர்கள் ஸம்ஸாரத்தில் படுகின்ற துன்பத்தைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமல், அவர்களை ஸர்வேச்வரன் பக்கம் சேர்த்துவிட எடுக்கும் முயற்சிகளுக்கு க்ருபை அவசியம் வேண்டும். ஸ்வதந்த்ரமான எம்பெருமானைத் தன்வசப்படுத்த அவன் பின் சென்று நடப்பதன் காரணமாக, அவனை வசப்படுத்த பாரதந்த்ர்யம் அவசியமாகிறது. “நம்மைத் தவிர மற்றவர்களுக்கு இவள் (பிராட்டி) உரியவள் அல்லள், நமக்கு எப்போதும் பெருமையை உண்டாக்கும்விதமாக, நம் செயல்கள் குறித்தே அல்லவா முயல்கிறாள்?”, என்று எம்பெருமான் எண்ணியபடி இருத்தலுக்காக அநந்யார்ஹத்வம் அவசியமாகிறது. எனவே இந்த மூன்றும் புருஷகாரத்திற்கு அவசியமான தன்மைகள் ஆகின்றன. எம்பெருமானின் கடாக்ஷத்தைக் காட்டிலும் இவளது கடாக்ஷத்திற்கு உள்ள சிறப்பு என்ன? எம்பெருமான் ஸ்வதந்த்ரமானவன் என்பதால் யாருடைய ஆணைக்கும் கட்டுப்படாதவனாக உள்ளான். அனுக்ரஹம் செய்தல், தண்டனை அளித்தல் ஆகிய இரண்டையும் செய்பவனாக உள்ளான். மக்கள் செய்த நல்ல செயல்கள், தீய செயல்கள் ஆகிய இரண்டையும் தராசு போன்று சரியாகக் கணக்கிட்டு, அவற்றை அழிப்பதன் பொருட்டு, அவற்றின் பலன்களை அனுபவிக்கும்படிச் செய்துவிடுகிறான். ஆகவே அவனது கடாக்ஷம் என்பது அவனது சுதந்திரமான தன்மை என்பதன் மூலம் அழுத்தப்பட்டே உள்ளது. அவ்வப்போது மட்டுமே அது வெளிப்படுவதாக உள்ளது. ஆனால் பெரியபிராட்டியோ கடாக்ஷம் ஒன்றையே தனது தன்மையாகக் கொண்டவள் ஆவாள். ஆகவே இவளது கடாக்ஷம் என்பது வேறு எதனாலும் மறைக்கப்படாமல் உள்ளதால், எப்போதும் வெளிப்பட்டபடியே உள்ளது. ஆகவே இவளது க்ருபை என்பது எப்போதும் கரையை அழிக்கும் வெள்ளம் போன்றே உள்ளது. இவர்கள் இவருக்கும் மனிதர்களுடன் உள்ள உறவுமுறை போன்றே (தாய், தந்தை என்னும் உறவுமுறை) இவர்களது கடாக்ஷத்தின் வெளிப்பாடும் உள்ளது. இப்படியாக உள்ளதால், இவளைப் பற்றுவதற்கு வேறு யாருடைய புருஷகாரமும் அவசியம் இல்லாதபடி உள்ளது. ஸர்வேச்வரன் விஷயத்தில் இவளுக்கு உள்ள பாரதந்த்ர்யம் மற்றும் அநந்யார்ஹத்வம் ஆகிய இரண்டும் இவளது சேஷத்வ ஸ்வரூபம் (எம்பெருமானுக்குத் தொண்டு புரிவதை இயல்பாகக் கொண்ட தன்மை) காரணமாக மட்டுமே வந்தவை அல்ல. வேறு சில காரணங்களும் உண்டு. அவை என்ன? புருஷஸூக்தம் – ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யௌ – உனக்கு பூமிப்பிராட்டியும் பெரிய பிராட்டியும் தேவிமார்கள் – என்றும், ஸ்ரீஸூக்தம்- விஷ்ணுபத்நீ – என்றும் கூறுவதற்கு ஏற்ப எம்பெருமானின் பத்னியாக இவள் உள்ளதால் அந்தத் தன்மைகள் இவளுக்கு உண்டு. அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸாஹமஸ்மி ஸநாதநீ - எப்போது உள்ள நான் எம்பெருமானுக்கு நிரூபகமாக உள்ளேன் - என்றும், இராமாயணம் – ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ - ஸ்ரீவத்ஸம் என்னும் மறுவை உடையவனும், பிராட்டியின் தொடர்பை உடையவனும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப எம்பெருமானின் ஸ்வரூபம் என்பது இவளால் நிரூபிக்கப்படுவதால், அவனை விட்டு எப்போதும் இவள் பிரிவதில்லை. இதனாலும் அந்த இரண்டு தன்மைகளும் எப்போதும் இவளுக்கு உள்ளது. இப்படி உள்ளதால் அல்லவோ, ஸர்வேச்வரன் மற்றும் பிராட்டி ஆகிய இருவருக்கும் கைங்கர்யம் செய்யும் தன்மை இவளைத் தவிர்த்து உள்ள மற்ற அனைவருக்கும் ஏற்பட்டது? மேலும் இதனால் அல்லவோ இவளுக்கு, ஸர்வேச்வரனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்யும் தன்மையும் உள்ளது? இப்படியாக எந்தவிதமான குறுக்கீடும் இல்லாத இவளது ஸம்பந்தம் காரணமாகவே ஸர்வேச்வரனைத் தன்வசப்படுத்த இவளுக்கு வேறு புருஷகாரம் அவசியம் இல்லாமல் உள்ளது. இந்த மூன்று குணங்களில் க்ருபை என்பது – ச்ரிங் ஸேவாயாம் – என்னும் தாதுவில் உண்டான ஸ்ரீயதே என்ற செயப்பாட்டு வினையில் காணலாம் (அதாவது ச்ரியதேஸ்ரீ – வணங்கப்படுகிறாள் – என்று கொள்ளவேண்டும்). மேலும் பாரதந்த்ர்யம் மற்றும் அநந்யார்ஹத்வம் ஆகிய இரண்டும் ச்ரயதே - வணங்குகிறாள் – என்ற பதம் மூலம் வெளிப்படும். அவனுடன் என்றும் இவள் உள்ளாள் என்பதை ஸ்ரீமதே என்பதில் உள்ள மத் என்பதிலும் காணலாம் (ஸ்ரீமத் = ஸ்ரீயுடன் எப்போது உள்ளான்).